2020 National Day Awards Investiture Citations (Tamil)


THE ORDER OF TEMASEK (WITH HIGH DISTINCTION)
தெமாசெக் விருது (உயரிய தனிச்சிறப்புடன்) 


1. பேராசிரியர் எஸ் ஜயகுமார்
வெளியுறவு அமைச்சருக்கான மூத்த சட்ட ஆலோசகர் 

புகழுரை

பேராசிரியர் எஸ் ஜயகுமார் தமது வாழ்நாள் முழுவதையும் சிங்கப்பூருக்குச் சேவையாற்ற அர்ப்பணித்துள்ளார். சிங்கப்பூரின் மூன்று பிரதமர்களின் அமைச்சரவைகளிலும் சேவையாற்றிய அவர், உள்துறை அமைச்சர் (1985 – 1994), சட்ட அமைச்சர் (1988 – 2008), வெளியுறவு அமைச்சர் (1994 – 2004), துணைப் பிரதமர் (2004 – 2009), தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் (2005 – 2010), மூத்த அமைச்சர் (2009 – 2011) ஆகிய பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.

பொதுச் சேவை ஊழியர்களிடையே தனித்துவம் வாய்ந்தவராகத் திகழ்ந்த பேராசிரியர் ஜயகுமார், தேசியப் பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை தொட்டு அரசியல், அரசியலமைப்பு மேம்பாடுகள் எனப் பலதரப்பட்ட விவகாரங்களில், கூரான சட்டச் சிந்தனையைப் புகுத்தியுள்ளார்.

உள்நாட்டில், அடிப்படை அரசியலமைப்பு, சட்ட மாற்றங்களை அவர் மேற்பார்வையிட்டார். சமய நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டத்தின் அறிமுகமும், தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர்கள், நியமன நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் ஆகியவற்றின் உருவாக்கமும் அவற்றுள் அடங்கும்.

அனைத்துலக அரங்கில், சிங்கப்பூரின் வெளியுறவுக்கான அணுகுமுறையில் சட்டத்தை அவர் பிரதான அம்சமாக நிலைநாட்டினார். பிற நாடுகளுடனான சிங்கப்பூரின் நலனையும் அமைதியான உறவுகளையும் சட்டம் எவ்வாறு உறுதிப்படுத்தும் என்று எடுத்துரைத்ததுடன் மட்டுமல்லாமல், அனைத்துலக சட்டப் பேச்சுவார்த்தைகளையும் வழக்காடல்களையும் அவராகவே வழிநடத்தியும் உள்ளார். சிங்கப்பூரின் முன்னணி அரசதந்திரியாக, அவர் அண்டை நாடுகளுடனும் தொலைதூர தேசங்களுடனும் நல்லுறவைப் பேணி வளர்த்தார். அதே வேளையில், சிங்கப்பூரின் தலைமை வழக்கறிஞராகவும் அவர் செயல்பட்டார்.

குறிப்பாக, ஆசியான் வட்டாரத்தில், பேராசிரியர் ஜயகுமார் பல நட்பு வட்டங்களை உருவாக்கினார். ஆசியான் சாசனத்தின் முன்னணி நபர்கள் குழுவிலும் அவர் சேவையாற்றினார். அவர்மீது வைக்கப்பட்ட நம்பிக்கை, சிக்கலான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண பெரிதும் துணைபுரிந்தது.

நமது அண்டை நாடுகளுடனான முக்கியமான பேச்சுவார்த்தைகளில் அவர் ஆற்றிய அரும்பணிக்கு, நம் நாடு நெடுங்காலம் அவருக்குக் கடன்பட்டிருக்கும். அவர், இந்தோனேசியாவுடனான தற்காப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கும் குற்றம் புரிந்தோரை ஒப்படைக்கும் உடன்பாட்டிற்கும் பேச்சுவார்த்தை நடத்தினார். 40 ஆண்டுக்கும் மேலாக, மலேசியாவுடன் நிலவி வந்த பெட்ரா பிராங்கா சர்ச்சையையும் அவர்தான் கையாண்டார். 2007-ஆம் ஆண்டு அனைத்துலக நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையை அடுத்து, அந்த விவகாரத்தில், சிங்கப்பூருக்குச் சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. பத்தாண்டுக்குப் பிறகு, அந்தத் தீர்ப்பைத் திருத்தி அமைக்க மலேசியா விண்ணப்பித்து, பின்னர் அதனை மீட்டுக்கொண்டது.

அமைச்சராக பணி ஓய்வு பெற்று நெடுநாள் ஆன பின்னரும் கூட, வெளியுறவு அமைச்சரின் மூத்த சட்ட ஆலோசகராக, பேராசிரியர் ஜயகுமார் செயலாற்றி வருகிறார். அப்பொறுப்பின் வழி, அவர் சிங்கப்பூரின் அதிமுக்கியமான வெளியுறவுக் கொள்கை சார்ந்த விவகாரங்களில், தமது சீரிய அனுபவத்தைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்.

சிங்கப்பூரின் நலனுக்கும் பாதுகாப்புக்கும் பல்வேறு வழிகளில், தனித்துவமான முறையில், சிறப்புமிக்க வகையில் பங்களித்ததன் பேரில், பேராசிரியர் எஸ் ஜயகுமார் அவர்களுக்குத் தெமாசெக் விருது (உயரிய தனிச்சிறப்புடன்) வழங்கப்படுகிறது.


THE DISTINGUISHED SERVICE ORDER
சிறப்புப் பணி விருது 


2. திரு கோ சூன் ஹுய்
தலைவர், சிங்கப்பூர் சிறுவர் சங்கம்

புகழுரை

சமூகத் துறையில் 40 ஆண்டுக்கும் மேலாக, தொலைநோக்கு சிந்தை மிகுந்த வல்லவராகப் போற்றப்படும் திரு கோ சூன் ஹுய், சிங்கப்பூரில் பல சமூக சேவை அமைப்புகளை உருவாக்கத் துணைபுரிந்துள்ளார். அவரது அரும்பணியால், பல சிங்கப்பூரர்கள் பயனடைந்துள்ளனர்.

திரு கோ, 1978-ஆம் ஆண்டு முதல், சிங்கப்பூர் சிறுவர் சங்கத்தின் தலைவராக இருந்து வந்துள்ளார். அவர் பல புதிய சேவைகளையும் திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளார். வீட்டில் தனித்திருக்கும் பிள்ளைகளுக்காக, 1979-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட Latchkey பிள்ளை மேம்பாட்டு நிலையம், 1984-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட Tinkle Friend உதவித் தொலைபேசி சேவை ஆகியன அவற்றுள் சில. 2004-ஆம் ஆண்டில், சிங்கப்பூர் சிறுவர் சங்கம், பள்ளியில் சிறுவர்கள் அச்சுறுத்தப்படும் பிரச்சினையைக் களைய, ‘Bully Free’ (அச்சுறுத்தலற்ற) திட்டத்தைத் தொடங்கியது. இத்தனை ஆண்டுகளில், திரு கோ-வின் தலைமைத்துவத்தின் கீழ், சிங்கப்பூர் சிறுவர் சங்கம் பல சிறுவர்கள், இளையர்கள், குடும்பங்கள் ஆகியோருக்கு உதவியுள்ளது. அத்துடன், சங்கம் பல வட்டார, தேசிய விருதுகளையும் பெற்றுள்ளது.

1994-ஆம் ஆண்டு முதல், 2000-ஆம் ஆண்டு வரையில், தேசிய சமூகச் சேவை மன்றத்தின் துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்த அவர், சமூகச் சேவைத் துறையின் சம்பள மறுஆய்வைத் தொடங்கி வைத்தார். இந்தத் துறையில் திறன்மிக்க ஊழியர்களை வேலைக்கு அமர்த்தி, தக்கவைத்துக்கொள்வதற்கான அடித்தளத்தை அந்த மறுஆய்வு ஏற்படுத்திக் கொடுத்தது.

திரு கோ, 2000-ஆம் ஆண்டு முதல் 2004-ஆம் ஆண்டு வரையில், சமூக மேம்பாடு, இளையர் விளையாட்டுத் துறை அமைச்சின் கீழ் இயங்கிய இளங்குற்றவாளிகள் இல்லத்தின் சமூக இணைப்புக் குழுவின் தலைவராகப் பொறுப்பு வகித்தார். வாழ்க்கையில் திசைமாறிச் சென்ற இளங்குற்றவாளிகள் ஒவ்வொருவருக்கும் பயிற்சி பெற்ற தொண்டூழிய மதியுரைஞரை அளிக்கும் பொருட்டு, அவர்களின் மறுவாழ்வுப் பயணத்தில் சமூகத்தின் ஈடுபாட்டைத் தொடங்கி வைத்தார், திரு கோ.

திரு கோ, பல வாரியக் குழுக்களில் சேவையாற்றி வருகிறார். தற்போது, அவர் சிங்கப்பூர் பூல்ஸ் (Singapore Pools) நிறுவனம், ஐஷைன் கிளவுட் (iShine Cloud) லிமிடெட் ஆகிய அமைப்புகளின் தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார். பெண்கள், பிள்ளைகள் ஆகியோரின் உரிமைகளை ஊக்குவித்துப் பாதுகாப்பது குறித்த ஆசியான் ஆணையத்தின் சிங்கப்பூர் அரசாங்கப் பிரதிநிதியாகவும் அவர் திகழ்கிறார்.

சிங்கப்பூரின் சேவைத் துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளின் பேரில், திரு கோ சூன் ஹுய் அவர்களுக்குச் சிறப்புப் பணி விருது வழங்கப்படுகிறது.


THE DISTINGUISHED SERVICE ORDER
சிறப்புப் பணி விருது


3. பேராசிரியர் வாங் குங்வூ
முன்னாள் தலைவர்,
தென்கிழக்காசிய ஆய்வுக் கழகம் – யூசோப் இ‌ஷாக் கல்விக் கழகம்,
லீ குவான் யூ பொதுக் கொள்கைப் பள்ளி – சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகம்
கிழக்காசியக் கல்விக் கழகம் – சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகம்

புகழுரை

லீ குவான் யூ பொதுக் கொள்கைப் பள்ளியின் முதல் தலைவர், பேராசிரியர் வாங்க் குங்வூ. தென்கிழக்காசிய ஆய்வுக் கழகம் – யூசோப் இ‌ஷாக் கல்விக் கழகம், கிழக்காசியக் கல்விக்கழகம் ஆகிய இரண்டு அமைப்புகளின் முன்னாள் தலைவராகவும் அவர் பொறுப்பு வகித்துள்ளார்.

இந்த மூன்று கல்விக் கழகங்களின் ஆய்வுத் திறனாற்றல்களை வலுப்படுத்துவதிலும், அனைத்துலக அளவில், அவை நன்மதிப்பு மிகுந்த உன்னத நிலையங்களாக வளர்ச்சி அடைவதிலும் அவர் முக்கியப் பங்காற்றினார். தனிச் சிறப்புமிக்க அறிஞராகப் போற்றப்படும் பேராசிரியர் வாங், சீனா, தென்கிழக்காசியா, கிழக்காசியா ஆகியன தொடர்பிலான விவகாரங்களில் சிங்கப்பூரின் அறிவுசார் தலைமைத்துவத்தை வலுப்படுத்த துணைபுரிந்துள்ளார்.

உலகின் முதன்மையான வரலாற்று ஆசிரியர்களில் ஒருவராகத் திகழும் பேராசிரியர் வாங், தென்கிழக்காசியாவிலும் சிங்கப்பூரிலும் உள்ள புலம்பெயர்ந்த சீனர்களைப் பற்றிய ஆய்வுக் கல்விக்குக் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார். பலதரப்பட்ட தலைப்புகளிலான, குறிப்பாக சமகால சீனாவைப் பற்றிய, அவரது வெளியீடுகள், விரிவுரைகள், கட்டுரைகள் ஆகியவை, கொள்கை வகுப்பவர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் விலைமதிப்புடைய உள்ளாய்வுகளை வழங்கியுள்ளன.

சிங்கப்பூரில் உலகத் தரம் வாய்ந்த ஆய்வுக் கழகங்களை உருவாக்குவதில், தனிச் சிறப்புமிக்க அறிவாற்றலையும் தலைமைத்துவத்தையும் கொண்டு செயலாற்றியதன் பேரில், பேராசிரியர் வாங் குங்வூ அவர்களுக்குச் சிறப்புப் பணி விருது வழங்கப்படுகிறது.


THE MERITORIOUS SERVICE MEDAL
பாராட்டுப் பணிப் பதக்கம்


4. குமாரி சான் லாய் ஃபங்
நிரந்தரச் செயலாளர், தேசிய ஆய்வு, மேம்பாடு
நிரந்தரச் செயலாளர், பொதுத்துறை அறிவியல், தொழில்நுட்பக் கொள்கை – திட்டங்களுக்கான அலுவலகம்
தலைவர், அறிவியல், தொழில்நுட்ப ஆய்வு அமைப்பு

புகழுரை

குமாரி சான் லாய் ஃபங், 34 ஆண்டுகளுக்கு மேலாகப் பொதுச் சேவையில் குறிப்பிடத்தக்க வகையில் சேவையாற்றியுள்ளார்.

சட்ட அமைச்சுக்கான நிரந்தரச் செயலாளராகவும், பின்னர் நிதி (செயல்திறம்) அமைச்சுக்கான நிரந்தரச் செயலாளராகவும், மின்-அரசாங்கம், கொள்முதல் போன்ற அம்சங்களில் முக்கியத்துவம் வாய்ந்த மேம்பாடுகளை, குமாரி சான் வழிநடத்தினார்.

கல்வி அமைச்சின் நிரந்தரச் செயலாளராக, கல்விக் கொள்கைகளில் கொண்டு வரப்பட்ட அடிப்படை மாற்றங்களை அவர் மேற்பார்வையிட்டார். பாட அடிப்படையிலான தரம் பிரிக்கும் முறை, தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வும் உயர்நிலைப் பள்ளிகளுக்கான விண்ணப்ப முறையும், பாலர் பள்ளிக் கல்வி, கட்டாயக் கல்விக் கட்டமைப்பின் கீழ் சிறப்புத் தேவையுடைய மாணவர்களையும் உள்ளடக்குதல் ஆகியவை அவற்றுள் அடங்கும். சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகம், தன்னாட்சிப் பல்கலைக்கழகமாக நிறுவப் பெறுவதையும், அவர் மேற்பார்வையிட்டார்.

தேசிய ஆய்வு, மேம்பாட்டுக்கான நிரந்தரச் செயலாளராகவும், அறிவியல் – தொழில்நுட்பக் கொள்கை, திட்டங்களுக்கான அலுவலகத்தின் நிரந்தரச் செயலாளராகவும், ஆய்வு, புத்தாக்கம், தொழில்முனைப்பு 2025 திட்டத்தின் வளர்ச்சிக்கு, அவர் வழிகாட்டினார். அரசாங்கத் துறையின் அறிவியல், தொழில்நுட்பத் திறனாற்றல்களை மேலும் வலுவாக்கும் பொருட்டு, பல்வேறு ஆய்வு அமைப்புகளின் பணிகளை அவர் ஒருங்கிணைத்தார்.

அவரது தன்னிகரற்ற பங்களிப்புகளின் பேரில், குமாரி சான் லாய் ஃபங் அவர்களுக்குப் பாராட்டுப் பணிப் பதக்கம் வழங்கப்படுகிறது.


THE MERITORIOUS SERVICE MEDAL
பாராட்டுப் பணிப் பதக்கம்


5. இணைப் பேராசிரியர் பெஞ்சமின் ஓங் கியன் சுங் 
முன்னாள் இயக்குநர், மருத்துவச் சேவைகள் பிரிவு

புகழுரை

இணைப் பேராசிரியர் பெஞ்சமின் ஓங், 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பொதுச் சுகாதாரப் பராமரிப்புத் துறையில் தனிச் சிறப்புமிக்க வகையில் சேவையாற்றியுள்ளார். சுகாதார அமைச்சின் மருத்துவச் சேவைகள் பிரிவின் இயக்குநராக (2014 – 2020), சிங்கப்பூரின் சுகாதாரப் பராமரிப்புத் துறையின் குறிப்பிடத்தக்க மேம்பாடுகளுக்கு, அவர் முக்கியப் பங்காற்றியுள்ளார்.

இணைப் பேராசிரியர் ஓங், மருத்துவமனைகளின் கொள்ளளவை அதிகரிக்கவேண்டி, புதிய பொதுச் சுகாதாரப் பராமரிப்பு வசதிகளின் மேம்பாடுகளை மேற்பார்வையிட்டார். மூப்படையும் மக்கள்தொகையின் தேவைகளுக்கு உகந்த வகையில் நமது பராமரிப்புக் கட்டமைப்புகள் உருமாறவும் அவர் முனைப்புடன் செயல்பட்டார். அத்துடன், நோய்த்தடுப்பு, அடிப்படைப் பராமரிப்பு, மூத்தோர் பராமரிப்புக்கான சமூக நிலையிலான முயற்சிகள் ஆகியவற்றையும் அவர் விரிவுபடுத்தினார். நமது சுகாதாரப் பராமரிப்பு விதிமுறைகளையும், சுகாதாரத் தொழில்நுட்பத்தின் மதிப்பீட்டு ஆற்றல்களையும் அவர் வலுப்படுத்தினார். தொற்றுநோய்களை நிர்வகிப்பதற்கான நமது ஆற்றல்களை வலுப்படுத்தவேண்டும் என்ற அவரது முற்போக்கு சிந்தனையே, கொவிட்-19 கிருமிப்பரவலைக் கையாள்வதற்கான நன்னிலையில், சிங்கப்பூரை நிலைபெறச் செய்தது.

சிங்கப்பூரின் சுகாதாரப் பராமரிப்புத் துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளின் பேரில், இணைப் பேராசிரியர் பெஞ்சமின் ஓங் அவர்களுக்குப் பாராட்டுப் பணிப் பதக்கம் வழங்கப்படுகிறது.


THE PUBLIC SERVICE STAR (BAR)
பொதுப் பணிச் சிறப்புப் பதக்கம் (பதக்கப் பட்டை) 



THE PUBLIC SERVICE STAR
பொதுப் பணிச் சிறப்புப் பதக்கம் 


புகழுரை 

இன்றைய தினம், சமூகத்திற்குச் சேவையாற்றி, பிறர் வாழ்க்கையை மேம்படுத்த முன்வந்தவர்களை கௌரவிக்கிறோம். சிங்கப்பூரை மேலும் சிறந்த இடமாக உருமாற்ற விழைந்துள்ள அவர்களது முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில், இத்தகைய சிறப்பியல்பு கொண்ட யாவரும், பொதுப் பணிச் சிறப்புப் பதக்கம் (பதக்கப் பட்டை) அல்லது பொதுப் பணிச் சிறப்புப் பதக்கம் வழங்கப்பெற்று கெளரவிக்கப்படுகின்றனர். அவர்களது தன்னலமற்ற பங்களிப்புகளின் பேரில், இத்திருநாடு நன்றி நவில்கின்றது.


THE PUBLIC ADMINISTRATION MEDAL (GOLD) (BAR)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்) (பதக்கப் பட்டை)


6. திரு டேவிட் சொங் கெக் சியன்
தலைமை வழக்குரைஞர், குடிமைப் பிரிவு

புகழுரை

அரசாங்கத் தலைமைச் சட்ட அலுவலகத்தின் குடிமைப் பிரிவுத் தலைவரும் தலைமை வழக்குரைஞருமான மூத்த வழக்குரைஞர் டேவிட் சொங் கெக் சியன், ஒரு முன்மாதிரித் தலைவர். அறிவுக்கூர்மையும் அனுபவ ஆற்றலும் மிகுந்த வழக்குரைஞரான திரு சொங், சிக்கலான பல நீதிமன்ற வழக்குகளில், அரசாங்கத் தரப்பிற்கு வெற்றி கிடைக்கத் துணைபுரிந்துள்ளார். அரசாங்கத் தலைமைச் சட்ட அலுவலகத்தின் வழக்காடல், அறிவுசார் நிர்வாகம் ஆகியவற்றின் தரத்தை அவர் பன்மடங்கு உயர்த்தியுள்ளார். அவரது தலைமைத்துவத்தின் கீழ், அரசாங்கத் தலைமைச் சட்ட அலுவலகத்தின் தெளிவான, நடைமுறைக்கு உகந்த சட்ட ஆலோசனை, அரசாங்கத்தின் நலன்களைக் காக்கவும், அதன் இலக்குகளை அடையவும் துணைபுரிந்துள்ளது.


THE PUBLIC ADMINISTRATION MEDAL (GOLD)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்) 


7. திரு சியோங் சீ ஹூ 
தலைமை நிர்வாக அதிகாரி, தற்காப்பு அறிவியல் அமைப்பின் தேசிய ஆய்வுக்கூடங்கள் 

புகழுரை

சிங்கப்பூரின் தேசிய தற்காப்புக்கான ஆய்வு, மேம்பாட்டு அமைப்பாகத் திகழும் தற்காப்பு அறிவியல் அலுவலகத்தின் தேசிய ஆய்வுக்கூடங்களின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ளார், திரு சியோங் சீ ஹூ. சிங்கப்பூர் ஆயுதப்படையின் தொழில்நுட்ப வல்லமைக்குக் குறிப்பிடத்தக்க வகையில் பங்களிக்கவும், சிங்கப்பூரின் தேசிய பாதுகாப்பிற்கான விரிவான தேவைகளுக்கு ஆதரவளிக்கவும் துணைபுரியக்கூடிய உத்திபூர்வ ஆற்றல்களையும் கட்டமைப்புகளையும் வழங்கக்கூடிய நிலைக்கு, தற்காப்பு அறிவியல் அமைப்பின் தேசிய ஆய்வுக்கூடங்களை அவர் உயர்த்தியுள்ளார். அதிமுக்கியமான ஆற்றல்களில் தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்படுவதை அவர் மேற்பார்வையிட்டுள்ளார். புத்தாக்கம் மிகுந்த சாதனைகளுக்கும் அவர் முக்கியப் பங்காற்றியுள்ளார்.


THE PUBLIC ADMINISTRATION MEDAL (GOLD)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்)


8. திருவாட்டி லிம் யென் சிங்
கல்வித்துறைத் துணைத் தலைமை இயக்குநர் (நிபுணத்துவ மேம்பாடு) & நிர்வாக இயக்குநர், சிங்கப்பூர் ஆசிரியர் கலைக்கழகம்
இயக்குநர் குழுமம்

புகழுரை

சிங்கப்பூரின் கற்பித்தல் துறையானது, நிபுணத்துவ உன்னத்தத்தின் முன்னுதாரணமாகத் திகழும் பொருட்டு, அதன் உருமாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்புகளை ஆற்றியுள்ளார், திருவாட்டி லிம் யென் சிங். தன்முனைப்பூட்டும் கல்வியாளராகவும் கல்வித் துறைத் தலைவராகவும் போற்றப்படும் அவர், பாடத்திட்ட மேம்பாடு, பள்ளி நிர்வாகம் போன்ற அம்சங்களில் கொள்கை உருவாக்கத்திற்கும் திட்ட மேம்பாட்டிற்கும் பங்களித்துள்ளார். குறிப்பாக, வசதி குறைந்த மாணவர்கள் மீது அவர் மிகுந்த அக்கறை காட்டியுள்ளார். அவரது விலைமதிக்கத்தக்க பங்களிப்புகளின் பேரில், திருவாட்டி லிம் அவர்களுக்குப் பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்) வழங்கப்படுகிறது.


THE PUBLIC ADMINISTRATION MEDAL (GOLD)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்) 


9. பேராசிரியர் சியோங் ஹீ கியாட் 
தலைவர் 
தலைவர் அலுவலகம், சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் 

புகழுரை

பேராசிரியர் சியோங் ஹீ கியாட், கடந்த 35 ஆண்டுகளாக, சிங்கப்பூரின் பல்கலைக்கழகக் கல்வித் துறையின் வளர்ச்சிக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை ஆற்றியுள்ளார்.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் 1991-ஆம் ஆண்டில் நிறுவப்பெற்றபோது, அதன் முன்னோடித் தலைமைத்துவ அணியில், பேராசிரியர் சியோங் இடம்பெற்றிருந்தார். 2005-ஆம் ஆண்டு சிம் பல்கலைக்கழகத்தின் முதல் தலைவராக நியமிக்கப்பட்ட அவர், முதிர்ச்சியடைந்த மாணவர்களுக்கான பாடத்திட்டங்களை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றினார். சிம் பல்கலைக்கழகம், 2017-ஆம் ஆண்டு சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகமாகப் பெயர் மாற்றம் கண்டு, நமது ஆறாவது தன்னாட்சிப் பல்கலைக்கழகமாக அங்கீகரிக்கப்பட்டது.


THE PUBLIC ADMINISTRATION MEDAL (GOLD)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்)


10. திரு இங் வாய் சூங் 
ஆணையர், உள்நாட்டு வருவாய் /
தலைமை நிர்வாக அதிகாரி, சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் 

புகழுரை

உலக அரங்கில், சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்தை முன்னணி வரி ஆணையங்களில் ஒன்றாக நிலைநிறுத்தத் துணைபுரிந்துள்ளார், திரு இங் வாய் சூங். அவரது தலைமைத்துவத்தின் கீழ், ஆணையம் அனைத்துலக வரி ஒத்துழைப்பை வலியுறுத்தியுள்ளது; பொருளியல் ஒத்துழைப்பு, வளர்ச்சி ஆகியவற்றுக்கான நிறுவனத்தின் வரி நிர்வாகம் குறித்த மன்றத்தில் அறிவார்ந்த தலைமைத்துவத்தையும் வழங்கியுள்ளது. போட்டிமிக்க வரிச் சூழலை உருவாக்குவதிலும், பகுப்பாய்வு, மின்னிலக்கமயமாதல் ஆகியவற்றின் மூலம் வரி செலுத்துவோரின் அனுபவங்களை மேம்படுத்துவதிலும் அவர் முக்கியப் பங்காற்றியுள்ளார். சிங்கப்பூரின் பொருளாதார, சமுதாயச் சூழலுக்கு அவர் ஆற்றிய முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்புகளின் பேரில், திரு இங் வாய் சூங் அவர்களுக்குப் பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்) வழங்கப்படுகிறது. 


THE PUBLIC ADMINISTRATION MEDAL (GOLD)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்)


11. திரு டெஸ்மண்ட் சின் கிம் தாம்
ஆணையர், சிறைச்சாலைகள்
சிங்கப்பூர்ச் சிறைச் சேவை

புகழுரை

சிங்கப்பூர்ச் சிறைச் சேவைக்கு 30 ஆண்டுக்கும் மேலாக அரும்பணியாற்றியுள்ளார், திரு டெஸ்மண்ட் சின். அக்டோபர் 2016 முதல் செப்டம்பர் 2020 வரையில் சிறைச்சாலைகளின் ஆணையராகப் பொறுப்பு வகித்த அவரது தலைசிறந்த தலைமைத்துவத்தின் கீழ், சிங்கப்பூர்ச் சிறைச் சேவை பெருமளவு உருமாற்றம் கண்டது. அதன்பொருட்டு, அவர் தொழில்நுட்பத்தையும் சமூகப் பங்காளிகளையும் அதிக அளவில் ஈடுபடுத்தினார். அதன்மூலம், சிறைக் கைதிகளின் பாதுகாப்பு, மறுவாழ்வு பெற்று சமுதாயத்தில் மீண்டும் ஒருங்கிணைதல் ஆகிய இரட்டை இலக்குகளை மேலும் சிறப்பாகச் செயல்படுத்த அவர் முனைந்தார். இன்று சிங்கப்பூர்ச் சிறைச் சேவை, உள்ளூரிலும் அனைத்துலக அரங்கிலும், முற்போக்கும் தன்முனைப்பும் மிகுந்த சீர்திருத்த சேவையாக நன்மதிப்பு பெற்றுள்ளது.


THE PUBLIC ADMINISTRATION MEDAL (GOLD)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்)


12. திரு பீட்டர் இங் ஜூ ஹீ 
தலைமை நிர்வாக அதிகாரி, பொதுப் பயனீட்டுக் கழகம், 
சிங்கப்பூரின் தேசிய தண்ணீர் அமைப்பு

புகழுரை

பொதுப் பயனீட்டுக் கழகத்தின் தலைமை நிர்வாகியாக, திரு பீட்டர் இங் ஜூ ஹீ, பல முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்புகளை ஆற்றியுள்ளார். அவர், நீடித்து நிலைக்கவல்ல, பாதுகாப்பான தண்ணீர் விநியோகத்தையும் செயல்திறன் மிகுந்த வடிகால் உள்கட்டமைப்புகளையும் உறுதிசெய்துள்ளார். மேலும், அதிகரித்துவரும் கடல் மட்டத்திற்கு எதிரான பாதுகாப்பின் பொருட்டு, பொதுப் பயனீட்டுக் கழகத்தை தேசியக் கடலோரப் பாதுகாப்பு ஆணையமாக நிலைநிறுத்துவதிலும், அவரது பங்கு குறிப்பிடத்தக்கது. எரிசக்தி, வளங்கள் ஆகியவற்றை அதிகபட்சம் மீட்டெடுப்பதற்காக துவாஸ் நெக்சஸ் போன்ற நீடித்த நிலைத்தன்மை சார்ந்த முயற்சிகளையும் அவர் தலைமையேற்று வழிநடத்தினார். மேலும், அவர் நீர்த்தேக்கங்களில் மிதக்கும் சூரிய ஒளி மின்னழுத்தத் தொழில்நுட்பக் கட்டமைப்புகளின் பயன்பாட்டையும் வழிநடத்தினார். 


THE PUBLIC ADMINISTRATION MEDAL (GOLD)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்)


13. திரு லிம் மெங் லியாங் கேப்ரியல்
நிரந்தரச் செயலாளர் (வர்த்தக, தொழில்துறை)
வர்த்தக, தொழில்துறை அமைச்சு

புகழுரை

வர்த்தக, தொழில்துறை அமைச்சின் நிரந்தரச் செயலாளராக, சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சி, சிங்கப்பூரர்களுக்கான வேலை உருவாக்கம், நமது தொழில்நிறுவனங்களின் மேம்பாடு ஆகியவற்றை ஆதரிப்பதற்கான அமைச்சின் முயற்சிகளை, திரு கேப்ரியல் லிம் வழிநடத்தியுள்ளார். இவ்வாண்டு, கொவிட்-19 கிருமிப்பரவலுக்கு எதிரான, தேசிய அளவிலான நமது போராட்டத்தில், வர்த்தக, தொழில்துறை அமைச்சின் பங்களிப்புகளைத் திரு லிம் வழிநடத்தினார். முன்னதாக, தொடர்பு, தகவல் அமைச்சின் நிரந்தரச் செயலாளராகப் பொறுப்பு வகித்த அவர், மின்னிலக்கப் பொருளியலுக்கான வரைவுத்திட்டத்தையும் அப்போது உருவாக்கினார்.


THE PUBLIC ADMINISTRATION MEDAL (GOLD)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்)


14. திரு பிங் சியோங் பூன்
தலைமை நிர்வாக அதிகாரி, எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு

புகழுரை

எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பின் முதல் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றிய திரு பிங் சியோங் பூன், “ஸ்பிரிங் சிங்கப்பூர்”, “அனைத்துலக எண்டர்பிரைஸ் சிங்கப்பூர்” ஆகிய இரு அமைப்புகளின் பணிகள் வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்படுவதை மேற்பார்வையிட்டார். தொழில்நிறுவன மேம்பாடு – அனைத்துலகமயமாதல், தொழில்துறை உருமாற்றம், புத்தாக்கத்தையும் தொழில்முனைப்பையும் ஊக்குவித்தல், வர்த்தக மேம்பாடு ஆகிய துறைகளில் அமைப்பின் பணியை அவர் திறம்பட வழிநடத்தினார். திரு பிங் அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ், பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதிலும், சிங்கப்பூரர்களுக்கு நல்ல வேலைகளை உருவாக்குவதிலும் எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு முக்கியப் பங்காற்றியுள்ளது.


THE PUBLIC ADMINISTRATION MEDAL (GOLD)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்) 


15. திருவாட்டி டான் பெங் டீ 
உதவித் தலைமை நிர்வாகி (மேம்பாடு) 
தலைவர் / தலைமை நிர்வாகியின் அலுவலகம் 
சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் 

புகழுரை

சிங்கப்பூரைத் தலைசிறந்த அனைத்துலகக் கடல்துறை மையமாக உருவாக்குவதில், திருவாட்டி டான் பெங் டீ முக்கியப் பங்காற்றியுள்ளார். ஸின்ஹுவா-பால்டிக் பங்குச்சந்தையின் கப்பல் போக்குவரத்து நிலைய வளர்ச்சிக் குறியீட்டில் இடம்பெறும் 43 உலகளாவியக் கப்பல் நடுவங்களில், உலகின் ஆகத் தலைசிறந்த நிலையமாக சிங்கப்பூரின் நிலையை உயர்த்துவதிலும் அவர் முக்கியப் பங்கு வகித்துள்ளார். அந்த உயரிய நிலையை, நாம் தொடர்ந்து ஏழு ஆண்டுகளாகத் தக்கவைத்துக்கொண்டுள்ளோம். “உலகின் முன்னணிக் கடல்துறை தலைநகரங்கள்” அனைத்துலகத் தரநிலைப்படுத்தும் ஆய்வில், தொடர்ந்து நான்காவது முறையாக சிங்கப்பூர் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இத்தகைய சீரிய சாதனைகளை வழிநடத்தியதன் பேரில், திருவாட்டி டான் பெங் டீ அவர்களுக்குப் பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்) வழங்கப்படுகிறது. 


THE PUBLIC ADMINISTRATION MEDAL (GOLD) (MILITARY)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்) (படைத்துறை)


16. மேஜர் ஜெனரல் கெல்வின் கொங் பூன் லியோங், PPA(P)
ஆகாயப்படைத் தலைவர்
சிங்கப்பூர் ஆகாயப்படை

புகழுரை

மேஜர் ஜெனரல் கெல்வின் கொங் பூன் லியோங், தமது இராணுவப் பணியில் பல முக்கியப் பங்களிப்புகளை ஆற்றியுள்ளார். ஆகாயப்படைத் தலைவராக, அவர் சிங்கப்பூர் ஆகாயப்படையின் ஆயத்தநிலையை வலுப்படுத்தி, புதிய திறனாற்றல்களின் மேம்பாட்டை மேற்பார்வையிட்டார். சிங்கப்பூர் ஆகாயப்படையின் அடுத்த தலைமுறைக்கான உருமாற்றத் திட்டங்களை அவர் முன்னெடுத்துச் சென்றார். புதிய போர்முறை உத்திகள், அமைப்புமுறைகள் உள்ளிட்ட அம்சங்கள் அவற்றுள் அடங்கும். மேஜர் ஜெனரல் கொங், வெளிநாட்டு ஆகாயப்படைகளுடனும் பங்காளி நாடுகளுடனும் நல்ல தற்காப்பு உறவுகளைப் பேணி வளர்த்துள்ளார். பிற நாடுகளின் ஆகாயப்படைகள், சிங்கப்பூர் ஆகாயப்படை மீதும், சிங்கப்பூர் மீதும் கொண்டிருக்கும் நன்மதிப்பை உயர்த்தவும், அவர் முனைந்துள்ளார்.


THE PUBLIC ADMINISTRATION MEDAL (GOLD) (MILITARY)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்) (படைத்துறை) 


17. பிரிகேடியர் ஜெனரல் இங் சாட்-சன், PPA(G), PBS 
இயக்குநர், இராணுவ வேவுத்துறை / தலைவர், C4I பிரிவு 
கூட்டு வேவுத்துறை இயக்குநர் குழுமம்
சிங்கப்பூர் ஆயுதப்படை 

புகழுரை

பிரிகேடியர் ஜெனரல் இங் சாட்-சன், சிங்கப்பூர் ஆயுதப்படையின் தளபத்தியம், கட்டுப்பாடு, தொடர்பு, கணினிகள், வேவுத்துறை (C4I) பிரிவிலும் வேவுத்துறை பணிகளிலும் முன்னணிப் பொறுப்புகளை மேற்கொண்டுள்ளார். C4I பிரிவின் தலைவராகவும், இராணுவ வேவுத்துறை இயக்குநராகவும், அவர் இராணுவ ஆற்றல்களை மேம்படுத்தி, முக்கிய செயல்பாடுகளை மேற்பார்வையிட்டுள்ளார். சிங்கப்பூர் ஆயுதப்படையின் இணையத் தற்காப்புத் திறனை மேம்படுத்துவதற்கும், பயங்கரவாதத்திற்கு எதிரான வட்டார இராணுவத் தகவல் நிலையத்தை அமைப்பதற்கும் அவர் முனைப்புடன் செயல்பட்டார். பிரிகேடியர் ஜெனரல் இங், வெளிநாட்டுத் தற்காப்புப் பங்காளிகளுடனும் நல்ல தற்காப்பு உறவுகளை வளர்த்துக்கொண்டு, சிங்கப்பூர் ஆயுதப்படையின் நன்மதிப்பை அனைத்துலக அரங்கில் உயர்த்தியுள்ளார்.


THE PUBLIC ADMINISTRATION MEDAL (GOLD) (MILITARY)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்) (படைத்துறை)


18. பிரிகேடியர் ஜெனரல் டான் சீ வீ, PPA(P), PBS
தலைவர் (கூட்டுப்படை)
தற்காப்புப் படைத் தலைவர் அலுவலகம்
சிங்கப்பூர் ஆயுதப்படை

புகழுரை

பிரிகேடியர் ஜெனரல் டான் சீ வீ, சிங்கப்பூர் ஆயுதப்படையில் பற்பல முக்கியப் பதவிகளை வகித்துள்ளார். கூட்டுப்படைத் தலைவராக, அவர் ஆயுதப்படையின் திறனாற்றல் மேம்பாட்டு முயற்சிகளை வழிநடத்தியுள்ளார். சிங்கப்பூர் ஆயுதப்படைக்கான அடுத்த தலைமுறையின் போர்முறை உத்திகள், அமைப்புமுறைகள் ஆகியவற்றுக்கான பெருந்திட்ட உருவாக்கமும் அவற்றுள் அடங்கும். தற்காப்பு அமைச்சின் / சிங்கப்பூர் ஆயுதப்படையின் மின்னிலக்க உருமாற்ற முயற்சிகளுக்கு அவர் முக்கியப் பங்காற்றினார். அதே வேளையில், சிங்கப்பூர் ஆயுதப்படையின் தலைமை ஆய்வாளராக நியமிக்கப்பட்ட பிரிகேடியர் ஜெனரல் டான், சிங்கப்பூர் ஆயுதப்படையின் பாதுகாப்பு ஆய்வாளர் அலுவலகத்தை நிறுவி, ஆயுதப்படையின் பாதுகாப்பு மேலாண்மையையும் நடைமுறைகளையும் மேம்படுத்தினார்.


THE PUBLIC ADMINISTRATION MEDAL (SILVER) (BAR)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (வெள்ளி) (பதக்கப் பட்டை) 



THE PUBLIC ADMINISTRATION MEDAL (SILVER)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (வெள்ளி)



THE PUBLIC ADMINISTRATION MEDAL (SILVER) (MILITARY)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (வெள்ளி) (படைத்துறை) 


புகழுரை 

பொது ஆட்சித்துறையில், கொள்கை உருவாக்கத்திற்கும் அமலாக்கத்திற்கும் இடையில் உள்ள தொடர்பு மிக முக்கியமான ஒன்றாகும். பொதுச் சேவையில் பணிபுரியும் நடுத்தர மேலாளர்கள், கொள்கை முடிவுகளைப் பயன்மிக்க வகையில் செயல்படுத்தும் முக்கியப் பணியை ஆற்றுகின்றனர். இன்றைய தினம், உத்வேகமும் கற்பனை வளமும் அர்ப்பணிப்பு உணர்வும் கொண்டு தன்னிகரற்ற, மிகச் சிறந்த விளைவுகளை ஏற்படுத்திய செயல் வீரர்கள் யாவரும், பொது ஆட்சித்துறைப் பதக்கம் (வெள்ளி) வழங்கப்பெற்று கெளரவிக்கப்படுகின்றனர்.


THE PUBLIC ADMINISTRATION MEDAL (BRONZE) (BAR)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (வெண்கலம்) (பதக்கப் பட்டை) 



THE PUBLIC ADMINISTRATION MEDAL (BRONZE)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (வெண்கலம்)



THE PUBLIC ADMINISTRATION MEDAL (BRONZE) (MILITARY)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (வெண்கலம்) (படைத்துறை) 


புகழுரை 

மிகச் சிறப்பாக வகுக்கப்பெற்ற அரசாங்கக் கொள்கைகள், அவற்றை செயல்படுத்தும் பொதுத்துறை அதிகாரிகள் இடறும்போது தோல்வியுறக்கூடும்.   இன்றைய தினம், பயமோ பாகுபாடோ இன்றி, அர்ப்பணிப்பு உணர்வுடன் முன்னணியில் செயல்பட்டு, தொடர்ந்து சிறப்பான சேவையாற்றி வரும் பொதுத்துறை ஊழியர்கள் யாவரும், பொது ஆட்சித்துறைப் பதக்கம் (வெண்கலம்) வழங்கப்பெற்று கெளரவிக்கப்படுகின்றனர்.


THE PRESIDENT’S CERTIFICATE OF COMMENDATION
அதிபரின் பாராட்டுச் சான்றிதழ்


சிங்கப்பூர் இருநூற்றாண்டு நிறைவு விழாவிற்கு ஆற்றிய பங்களிப்புகளுக்கான பொதுவான புகழுரை

1819-ஆம் ஆண்டில், சர் ஸ்டாம்ஃபர்ட் இராஃபிள்ஸ் சிங்கப்பூர் வந்தடைந்ததை நினைவுகூரும் இருநூற்றாண்டு நிறைவு விழாவை, சிங்கப்பூர் இருநூற்றாண்டு அலுவலகம் தனிச் சிறப்புடன் நடத்தியது. அந்த நிறைவு விழாக் கொண்டாட்டம், 700 ஆண்டுக்கு முந்தைய சிங்கப்பூரின் வரலாறு குறித்த மேலும் முழுமைபெற்ற விவரங்களைச் சித்தரித்தது.

ஓராண்டுகாலம் நீடித்த இவ்விழாவில் இருநூற்றுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள், கலைப் பொருட்கள், சிறப்பு விழாக்கள், கண்காட்சிகள் ஆகியவை இடம்பெற்றன. பல்வேறு சமூகங்களிலிருந்து அரசாங்கம், மக்கள், தனியார் துறை ஆகியவற்றைச் சேர்ந்த முந்நூற்றுக்கும் மேலான பங்காளிகள் இவ்விழாவில் ஈடுபட்டிருந்தனர். சிங்கப்பூர் இருநூற்றாண்டு நிறைவு விழாவில் 9 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பங்கேற்றனர்.

விழாவின் முத்தாய்ப்பாக, ‘சிங்கப்பூரிலிருந்து சிங்கப்பூரர் வரை: இருநூற்றாண்டு நிறைவு அனுபவம்’ எனும் பல்லூடகப் படைப்பு, ஃபோர்ட் கேனிங் பூங்காவில் அரங்கேறியது. இப்படைப்பு, சிங்கப்பூரின் வரலாற்றை எடுத்துரைப்பதில் புதிய பரிணாமங்களை எட்டியது; சிங்கப்பூரில், குறிப்பிட்ட காலத்திற்கு நடைபெறும் கண்காட்சிகளுடன் ஒப்புநோக்க, சாதனை அளவாக, 760,000-க்கும் அதிகமான வருகையாளர்களை ஈர்த்தது. மக்களின் அமோக வரவேற்பிற்கு இணங்க, இக்கண்காட்சி மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

சிங்கப்பூர் இருநூற்றாண்டு நிறைவு விழா, சிங்கப்பூரின் வரலாறு முழுமைக்கும் அதனுடைய சிறப்பியல்புகளாக இருக்கக்கூடிய அம்சங்கள் குறித்து பல பங்கேற்பாளர்களை எண்ணிப் பார்க்கத் தூண்டியது - வெளிப்படைத்தன்மை, பன்முகக் கலாசாரத் தன்மை, மனோதிடம்.


THE PRESIDENT’S CERTIFICATE OF COMMENDATION
அதிபரின் பாராட்டுச் சான்றிதழ்


சிங்கப்பூர் உடன்படிக்கை கையெழுத்துச் சடங்கையும் மாநாட்டையும் ஏற்பாடு செய்ததன் தொடர்பில் ஆற்றிய பங்களிப்புகளுக்கான பொதுவான புகழுரை

சிங்கப்பூரின் பெயரால் அழைக்கப்பெறும் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் முதல் உடன்படிக்கை, ‘சமரசம் குறித்த சிங்கப்பூர் உடன்படிக்கை’. 2019-ஆம் ஆண்டில், ஆகஸ்டு 6 முதல் 7 வரையில் நடைபெற்ற சிங்கப்பூர் உடன்படிக்கை கையெழுத்துச் சடங்கும் மாநாடும், வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நிகழ்வாகும். அந்த உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தையும், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளும் பத்துக்கும் மேற்பட்ட அரசாங்க அமைப்புகள், முப்பதுக்கும் மேற்பட்ட சட்டத்துறை, கல்விக் கழகங்கள், நூற்றுக்கும் அதிகமான மாணவத் தொண்டூழியர்கள் ஆகியோரை ஈடுபடுத்தின. இந்த நிகழ்ச்சியில் முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்புகளை வழங்கியதன் பேரில் 11 குழுக்கள் அங்கீகரிக்கப்படுகின்றன:

  • சட்ட அமைச்சு, இந்த உடன்படிக்கை சார்ந்த சிங்கப்பூரின் ஈடுபாட்டை முன்னிறுத்தி, மாநாட்டின் ஏற்பாடுகளை வழிநடத்தியது.
  • வெளியுறவு அமைச்சு, பொதுத் தூதர்கள் பேராசிரியர் சான் ஹெங் சீ, பேராசிரியர் டாமி கோ, திரு ஓங் கெங் யொங், தூதர் தம்பிநாதன் ஜேசுதாசன், முன்னாள் பொதுத் தூதர் திரு பிலஹரி கௌசிகன் ஆகியோர் உடன்படிக்கைக்கான அனைத்துலக ஆதரவைத் திரட்ட முன்வந்தனர்.
  • நிலப் போக்குவரத்து ஆணையமும் காவல்துறையும், மாநாடு சுமூகமாக, எவ்விதப் பாதுகாப்பு இடர்களும் இன்றி நடைபெறுவதை உறுதிசெய்தன.
  • மெக்ஸ்வெல் சேம்பர்ஸ், அனைத்துலக சட்ட மையமாக சிங்கப்பூரின் நிலையை மேம்படுத்தும் வகையில், மாநாட்டுடன் தொடர்புடைய முக்கிய நிகழ்வு ஒன்றுக்கு ஏற்பாடு செய்தது.
  • தொடர்பு, தகவல் அமைச்சு, மாநாட்டின் ஊடக உத்திக்கும் செயல்பாடுகளுக்கும் ஆதரவளித்தது.
  • தேசியப் பூங்காக் கழகம், சிறப்பாக உருவாக்கப்பட்ட ஒருவகை ஆர்க்கிட் மலருக்கு, உடன்படிக்கையின் பெயரைச் சூட்ட ஆதரவளித்தது.
  • சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் சட்டத் துறைகளும் 13 பள்ளிகளும், நிகழ்ச்சியில் ஈடுபட்டிருந்த மாணவத் தொண்டூழியர்கள், கல்வியாளர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்தன.

மேற்குறிப்பிட்ட அமைப்புகள், தனிநபர்கள் ஆகியோரின் முயற்சிகள், சிங்கப்பூரை உலக வரைபடத்தில் மிளிரச் செய்துள்ளன; சிங்கப்பூரின் நிலையை மேம்படுத்தியுள்ளன; சிங்கப்பூரர்களுக்கு பெருமை சேர்த்துள்ளன.

TOP