National Day Message 2015 (Tamil)

SM Lee Hsien Loong | 8 August 2015 | Victoria Theatre and Victoria Concert Hall

Minister in the Prime Minister’s Office, Second Minister for Home Affairs and Second Minister for Trade and Industry S Iswaran delivered Prime Minister Lee Hsien Loong's National Day Message 2015 in Tamil. The message was recorded at the Victoria Theatre and Victoria Concert Hall and telecast on 8 August 2015.

 

என் சக சிங்கப்பூரர்களே, வணக்கம். சரியாக ஐம்பது ஆண்டுகளுக்கு முன், சிங்கப்பூரின் வரலாற்றில் ஒரு மாபெரும் மாற்றம் நிகழ இருந்தது. அன்று, சுதந்திரத்திற்கு முந்திய தினம். அமைச்சரவை, பிரிவினை உடன்பாட்டையும் ஏற்றுக் கொண்டுவிட்டது. சிறப்பு அரசிதழில் பிரிவினை உடன்பாட்டையும் சுதந்திரப் பிரகடனத்தையும் அச்சிடும் பணி மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அடுத்த நாள் புதிய அரசாங்கத்திடமிருந்து உத்தரவுகளைப் பெறும்படி, மலேசிய அரசாங்கம் போலிஸ் ஆணையரிடமும், ராணுவத் தலைவரிடமும் கூறியிருந்தது. ஆனால், இவை அனைத்தும் மிக இரகசியமாக நடந்து கொண்டிருந்தன. நடக்க இருப்பதை அறியாமல், நம் நாட்டு மக்கள் உறங்கச் சென்றனர்.

மறுநாள், நம் உலகமே மாறியது. அன்று, ஆகஸ்ட் 9, 1965. காலை 10 மணிக்கு, ஒரு வானொலி அறிவிப்பாளர் சுதந்திரப் பிரகடனத்தை வாசித்தார். சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்துவிட்டது. அது “என்றென்றும் ஓர் அரசுரிமையுள்ள, ஜனநாயக, சுதந்திர தேசமாக இருக்கும்” என்று அறிவிக்கப்பட்டது. சிங்கப்பூர் என்ற குடியரசு உதயமானது.

மக்கள் கலக்கத்தில் இருந்தனர். நம்மால் சொந்தமாகச் சமாளிக்க முடியுமா என்ற ஒரு பயம். அப்போது நம் பொருளியல் ஒரு வலுவான நிலையில் இல்லை. நம்மிடம் எந்த வளமும், தனித்து இயங்கும் ஆயுதப் படைகளும் இல்லை. அன்று நண்பகலில், திரு லீ குவான் இயூ தொலைக்காட்சியில் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். பேட்டியின் இடையிலேயே, தன் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல், அவர் கண் கலங்கிவிட்டார். அது “வேதனை மிகுந்த ஒரு தருணம்” என்று அவர் கூறினார்.

ஆனால், அதே வேதனை மிகுந்த தருணம்தான், இந்த தேசத்திற்காக ஒரு பாதையை உருவாக்க வேண்டும் என்ற மன உறுதியையும் தந்தது. அந்த நிருபர் கூட்டத்தின் முடிவில், திரு லீ குவான் இயூ சிங்கப்பூர் மக்களிடம் “நாம் சிங்கப்பூரில் ஒரு பல இன தேசமாக இருக்கப் போகிறோம். நாம் ஓர் உதாரணமாக வாழ்வோம். இது ஒரு மலாய் தேசமல்ல. இது ஒரு சீனர் தேசமல்ல. இது ஓர் இந்தியர் தேசமல்ல. இங்கு, மொழி, கலாசாரம், சமயம் அனைத்திலும் எல்லாருக்கும் சம உரிமை இருக்கும்” என்று வாக்குறுதி அளித்தார்.

அந்த நொடியில் இருந்து, நாம் ஒரு தேசத்தை உருவாக்கத் தொடங்கினோம். அது ஒரு சாதாரணப் பயணமாக அமையவில்லை. சிங்கப்பூர் ஓர் அரசுரிமையுள்ள நாடாக வெற்றிகாண முடியும் என்று நம் முதல் தலைமுறைத் தலைவர்கள் மக்களுக்கு நம்பிக்கையூட்டினர். சிங்கங்களாக, துணிச்சல் மிக்கவர்களாக நம் தலைவர்களும் மக்களும், நாட்டை வலுப்படுத்த அசைக்க முடியாத மன உறுதியுடன் ஒற்றுமையாகப் போராடினார்கள். அவர்களுக்குப் பிறகு, இளைய தலைமுறையினர் அந்தப் பொறுப்பை ஏற்று, சிங்கப்பூரை அடுத்த நிலைக்குக் கொண்டு சென்றனர்.

ஆண்டுக்கு ஆண்டு, சிங்கப்பூர் முன்னேற்றம் கண்டது. அதே சமயத்தில், நம் பாதையில் பல பிரச்சினைகளும் எழுந்தன. 1971 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் படைகள் மீட்டுக் கொள்ளப்பட்டன. 1973 ஆம் ஆண்டில் எண்ணெய் விலையேற்றத்தால் நெருக்கடி ஏற்பட்டது. பிறகு, SARS நோய் நம்மை அச்சுறுத்தியது. ஆசிய மற்றும் உலக நிதித்துறை நெருக்கடிகள் நம்மைச் சோதித்தன. இருந்தாலும், அவற்றை எல்லாம் நாம் சமாளித்து முன்னேறினோம். நம் பொருளியலை வளர்த்து, வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தினோம். வீடுகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், பூங்காக்கள் எனப் பல வசதிகளை அமைத்தோம். நாம் ஒரு தேசத்தை உருவாக்கினோம்.

1965-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதியன்று திரு லீ குவான் இயூ அளித்த வாக்குறுதிகளை இத்தனை ஆண்டுகளாக நாம் காப்பாற்றி வந்துள்ளோம். "இனம், மொழி, மதம் ஆகிய வேற்றுமைகளை மறந்து, நாம் ஒன்றுபட்ட மக்களாக இருப்போம்"; நம் எதிர்காலம் என்றைக்கும் ஒளிமயமாக இருக்கும் என்று அவர் உறுதியளித்தார்.

எனவே, நமது 50-ஆவது பிறந்தநாளை நாம் பெருமையுடன் கொண்டாடப் பல முக்கியக் காரணங்கள் உள்ளன.

நம் தேசிய சேவையாளர்கள் தங்கள் ரத்தத்தாலும் வியர்வையாலும் 50 ஆண்டு காலமாக அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நம் பலவீனங்களை நாம் பலங்களாக மாற்றினோம். உலகையே நம் சந்தையாக்கி நம் மக்களுக்கு வேலைகளை உருவாக்கினோம். PSA துறைமுகத்தையும், Changi விமான நிலையத்தையும் உலகின் தலைசிறந்த நிலைக்கு உயர்த்தினோம். தண்ணீருக்காக முழுமையாக ஜொகூரை நம்பியிருந்த காலம் போய், நம் முழுத் தீவையே ஒரு நீர்ப்பிடிப்பு இடமாக மாற்றினோம். NEWater எனப்படும் புதுநீரைத் தயாரித்தோம். இயற்கை வளங்கள் ஏதும் இல்லாத நிலையில், ஒவ்வொரு சிங்கப்பூரருக்கும் கல்வி வழங்கி, தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள அவர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கினோம். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை நிரூபித்தோம்.

எல்லாவற்றையும் விட, எவரும் பின்தங்கிவிடாமல், ஓர் ஒன்றுபட்ட மக்களாய், வளர்ச்சி அடைந்த நாடாக முன்னேறியிருக்கிறோம். ஒவ்வொரு குடிமகனும் சிங்கப்பூரின் முன்னேற்றத்தால் நன்மை அடைந்துள்ளார். எந்த இனத்தவராக இருந்தாலும், எந்தப் பின்னணியைச் சார்ந்தவராக இருந்தாலும், எத்தகைய வீட்டில் வசித்தாலும், அனைவருக்கும் வாழ்க்கை மேம்பட்டுள்ளது. கிட்டத்தட்ட எல்லா சிங்கப்பூரர்களுக்கும் சொந்த வீடு உள்ளது. வாழ்க்கையில் மேன்மை அடைய எல்லாருக்கும் வாய்ப்புகள் உள்ளன. தங்கள் எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும் என அனைவரும் எதிர்பார்க்கலாம்.

இந்த 50-வது ஆண்டில், நாம் ஓர் உயர்ந்த நிலையில் நின்று, எவ்வளவு தூரம் முன்னேறி வந்துள்ளோம் என்பதைக் கண்டு வியக்கிறோம். இதைச் சாதிக்க உதவியோருக்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

இங்கிருந்து, நாம் புதிய சிகரங்களை நோக்கிச் செயல்படலாம். நம் முன் உள்ள பாதை நாம் பயணம் செய்யாத ஒன்று. இருந்தாலும், நாமும், நம் பிள்ளைகளும் மேலும் சிறந்த நிலையை அடைய நாம் தொடர்ந்து பாடுபட வேண்டும்.

நாம் எப்போதும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருப்பதால், நம்மால் நிச்சயமாக நம் இலக்கை அடைய முடியும். ஒன்றுபடும் போது நம் வலிமை கூடுகிறது. லாரிக்கு அடியில் சிக்கியவரைக் காப்பாற்ற ஒன்றுசேர்கிறோம். இசை நின்றாலும், தேசிய கீதத்தைத் தொடர்ந்து உற்சாகத்துடன் பாடுகிறோம். நமது கடந்த காலத்தை எண்ணிப் பெருமிதம் அடைகிறோம். எதிர்காலம் குறித்து நம்பிக்கையுடன் இருக்கிறோம். ஒருமக்களாக, சிங்கப்பூர் மீது நம்பிக்கையும் பற்றும் வைத்துள்ளோம்.

இப்போது நான் விக்டோரியா இசையரங்கு மண்டபத்தில் இருந்து பேசுகிறேன். சிங்கப்பூரின் வரலாற்றில் இந்த இடத்திற்குச் சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. முன்பு இது விக்டோரியா நினைவு மண்டபம் என்று அழைக்கப்பட்டது. இங்குதான், திரு லீ குவான் இயூ மக்கள் செயல் கட்சியைத் தொடங்கினார். ஒரு நியாயமான, சமத்துவமான சமுதாயத்தை உருவாக்க நீண்டநாள் போராட்டத்தை ஆரம்பித்தார். இங்குதான், “மஜூலா சிங்கப்பூரா” முதன் முறையாக அரங்கேறியது. சுதந்திரம் பெற்ற பிறகு, அருகில் இருக்கும் பாடாங்கில்தான் நமது தேசிய தின அணிவகுப்புகளை நடத்தினோம். ஒரு தேசமாக, ஒன்றுசேர்ந்து “மஜூலா சிங்கப்பூரா” வைப் பாடினோம்.

50 ஆண்டுகள் கடந்துவிட்டன. நமது இந்தப் பொன்விழா ஆண்டில் நாம் மீண்டும் பாடாங்கில் ஒன்றுகூடுவோம். “மஜூலா சிங்கப்பூரா” வைப் பெருமிதத்துடன் பாடி, தேசிய பற்றுறுதியை எடுத்துக்கொள்வோம். கடந்த 50 ஆண்டுகளின் வெற்றியைக் கொண்டாடுவோம். இனம், மொழி, மதம் ஆகிய வேற்றுமைகளை மறந்து, ஒன்றுபடுவோம். நம் நாடு, மகிழ்ச்சி, வளம், முன்னேற்றம் ஆகியவற்றை அடையும் வண்ணம், ஒற்றுமையாகச் செயல்பட நாம் புதிய உறுதியை மேற்கொள்வோம்.

50-வது தேசிய தின நல்வாழ்த்துக்கள்!

நன்றி. வணக்கம்.

 

TOP