2022 National Day Awards Investiture Citations (Tamil)


THE DISTINGUISHED SERVICE ORDER
சிறப்புப் பணி விருது


1. திரு கோபிநாத் பிள்ளை
முன்னாள் தலைவர்,
ஆலோசனைக் குழு,
இந்திய மரபுடைமை நிலையம்

புகழுரை

முன்னாள் பொதுத் தூதர் திரு கோபிநாத் பிள்ளை, முப்பது ஆண்டுக்கும் மேலாக, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சிங்கப்பூருக்குத் தனிச் சிறப்புமிக்க வகையில் சேவையாற்றினார்.

திரு பிள்ளை, தெற்காசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான உறவுக்குக் கணிசமான அளவு பங்களித்தார். இந்தியாவுடன், நமது இருதரப்புத் தொழில் உறவுகளை அவர் வலுப்படுத்தினார். அவர் ஆந்திரப் பிரதேசத்திற்கான நமது சிறப்புத் தூதரானார். அந்தப் பொறுப்பில் இருந்தபோது, ஆந்திரப் பிரதேசத்தின் புதிய தலைநகருக்கான மேம்பாடு குறித்து மாநில அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கினார். அதே நேரத்தில், சிங்கப்பூர் நிறுவனங்கள் அங்கு முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளையும் அவர் ஆராய்ந்தார். தெற்காசிய ஆய்வுக் கழகத்தின் தலைவராக, தெற்காசியத் துணைக்கண்டம் பற்றி அதிக புரிந்துணர்வை அவர் ஏற்படுத்தினார். முதன்முதலில் நடத்தப்பட்ட தெற்காசியப் புலம்பெயர்ந்தோர் மாநாட்டையும் அவர் வழிநடத்தினார்.

திரு பிள்ளை ஈரானுக்கான தொலைதூரத் தூதராகவும் பாகிஸ்தானுக்கான தொலைதூர உயர் ஆணையராகவும் சேவையாற்றினார்.

உள்நாட்டில், திரு பிள்ளை சிங்கப்பூர் இந்தியச் சமூகத்திற்கு ஒரு தூணாக விளங்கினார். இந்தியச் சமூகத்தின் மையப் பகுதியாக உருவெடுத்துள்ள இந்திய மரபுடைமை நிலையத்தை நிறுவுவதில் அவர் முக்கியப் பங்காற்றினார். இந்து ஆலோசனை மன்றத்தின் தலைவராக, இந்துக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து அரசாங்கத்திற்கு அவர் ஆலோசனை வழங்கினார்.

சிங்கப்பூரின் மலையாளச் சமூகம் சிறியது. அதில் அவர் பெரிதும் மதிக்கப்பட்டவராகவும் புகழ்பெற்றவராகவும் திகழ்ந்தார். இளம் மலையாளிகளுக்கு உயர்கல்வி உபகாரச் சம்பளம் கிடைக்க வகைசெய்ததோடு, மலையாள மொழியையும் ஊக்குவித்தார்.

திரு பிள்ளை ஆற்றிய சமூகச் சேவை இந்தியச் சமூகத்திற்கும் அப்பாற்பட்டது. தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸின் நியாயவிலைக் கூட்டுறவு அமைப்பின் முதல் தலைவரான அவர் தொழிலாளர் இயக்கத்திற்குப் பங்களித்துள்ளார். அங் மோ கியோ-தை ஹுவா குவான் மருத்துவமனையின் துணைத் தலைவராகவும் அவர் சேவையாற்றியுள்ளார்.

சிங்கப்பூருக்கு ஆற்றிய பல்வேறு பங்களிப்புகளுக்காக, திரு கோபிநாத் பிள்ளை அவர்களுக்குச் சிறப்புப் பணி விருது வழங்கப்படுகிறது.


THE DISTINGUISHED SERVICE ORDER
சிறப்புப் பணி விருது


2. திரு லீ ஸூ யாங்
தலைவர்,
அரசாங்கச் சேவை ஆணையம்

புகழுரை

அரசாங்கச் சேவை ஆணையம், சிங்கப்பூர்த் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகத்தின் அறங்காவலர் குழு, எஸ்பிளனேட் நிறுவனம், சிற்பிகள் நினைவக வழிகாட்டிக் குழு ஆகியவற்றின் தலைவராகத் திரு லீ ஸூ யாங் திகழ்கிறார். சட்டச் சேவை ஆணையம், நீதிமன்றச் சேவை ஆணையம் ஆகியவற்றின் துணைத் தலைவராகவும் அவர் பொறுப்பு வகிக்கிறார்.

அரசாங்கச் சேவைக்கான திறனாளர்களைத் தேடுவதிலும் தேர்ந்தெடுப்பதிலும் அரசாங்கச் சேவை ஆணையத்தின் அணுகுமுறையைப் புதுப்பிக்கும் பணியைத் திரு லீ வழிநடத்தியுள்ளார். அவரின் தலைமைத்துவத்தின்கீழ் ஆணையம் மேலும் அதிகமான உயர்கல்வி நிலையங்களிலிருந்தும் பல்கலைக்கழகங்களிலிருந்தும் உபகாரச் சம்பளங்களுக்குத் தகுதிபெறுவோரைத் தேர்ந்தெடுத்துள்ளது. மிகச் சிறந்த செயல்திறனும், மேலும் அதிகமான பன்முகத்தன்மையும் கொண்ட அரசாங்கச் சேவைக்கான முக்கிய அம்சங்களை அடையாளம் காண்பதற்கான தெரிவு முறைகளையும் ஆணையம் மாற்றியமைத்துள்ளது.

சிங்கப்பூர்த் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகம் வலுவான ஆய்வுக் கட்டமைப்புகள், தொழில்துறை ஒத்துழைப்பு, பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புகள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு பல்கலைக்கழகமாக வளர்வதைத் திரு லீ மேற்பார்வையிட்டார். சிங்கப்பூரின் கலை, கலாசாரத் துறையின் வளர்ச்சிக்கும் அவர் முக்கியப் பங்காற்றியுள்ளார். எஸ்பிளனேட், உலகின் ஆகப் பரபரப்பான கலை அரங்கமாகத் திகழ 2015 முதல் அதன் தலைவராக, அதை வழிநடத்தியுள்ளார். சிற்பிகள் நினைவகத்தின் உருவாக்கத்திற்குத் திரு லீ வழிகாட்டினார். அது, சிங்கப்பூரர்களின் விழுமியங்களையும் எண்ணங்களையும் பிரதிபலிக்கவேண்டும்; கட்டி முடிக்கப்பட்ட பின்னர், சிங்கப்பூரர்களை ஒன்றிணைத்து ஊக்கப்படுத்தவேண்டும் என்பனவற்றை அவர் உறுதிசெய்தார்.

அரசாங்கச் சேவை, கல்வி, கலை எனப் பல்வேறு துறைகளில் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பின் பேரில், திரு லீ ஸூ யாங் அவர்களுக்குச் சிறப்புப் பணி விருது வழங்கப்படுகிறது.


THE DISTINGUISHED SERVICE ORDER
சிறப்புப் பணி விருது


3. பேராசிரியர் டான் சோர் சுவான்
தலைமைச் சுகாதார அறிவியலாளர்,
சுகாதார அமைச்சு

நிர்வாக இயக்குநர், சுகாதாரப் பராமரிப்பு உருமாற்றத்துக்கான சுகாதார அமைச்சு அலுவலகம்

புகழுரை

தலைமைச் சுகாதார அறிவியலாளர், மனிதச் சுகாதார & ஆற்றல் செயலவைத் தலைவர், அரசாங்க அறிவியல் ஆலோசகர் குழுத் தலைவர் ஆகிய பொறுப்புகளை வகித்துவரும் பேராசிரியர் டான் சோர் சுவான், உயிர் மருத்துவ அறிவியல் துறைக்கான துடிப்புமிக்க ஆய்வு, புத்தாக்கச் சூழலை அமைத்து மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியுள்ளார். கிருமிப்பரவல் ஆயத்தநிலை, தடுப்பூசி உருவாக்கம் ஆகியவற்றுக்கான பல்வேறு தேசிய ஆய்வுத் திட்டங்களை நிறுவுவதற்கும் அவர் வழிகாட்டியுள்ளார். பேராசிரியர் டான் நமது சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்பின் உருமாற்றத்திலும் முக்கியப் பங்காற்றியுள்ளார். அடிப்படைப் பராமரிப்பு, தீவிரப் பராமரிப்பு ஆகியவற்றுக்கான முக்கிய மேம்பாடுகளை அமைத்து நடைமுறைப்படுத்துதல், பராமரிப்புக் கட்டமைப்புகளில் புத்தாக்கம் ஆகியவையும் அதில் அடங்கும்.

பேராசிரியர் டான் 2008 முதல் 2017 வரை, சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தின் தலைவராகச் சேவையாற்றினார். அப்போது, பல்கலைக்கழகம் கல்வி, ஆய்வு, தொழில்முனைப்பு ஆகிய அம்சங்களில் பல சாதனைகளைப் படைத்தது. அதற்கு முன்னர், சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகச் சுகாதாரக் கட்டமைப்பின் முதல் தலைமை நிர்வாகியாகப் பொறுப்பு வகித்த பேராசிரியர் டான், சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழக மருத்துவ, பல் மருத்துவப் பள்ளிகள், சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை ஆகியவற்றை ஒரு நிர்வாகத்தின்கீழ் கொண்டுவந்து, மருத்துவப் பயிற்சி, ஆய்வு, கல்வி ஆகியவற்றின் ஆற்றலைச் சீர்படுத்தினார்.

2000 முதல் 2004 வரை, மருத்துவச் சேவைப் பிரிவின் இயக்குநராகப் பேராசிரியர் டான் பணிபுரிந்தார். அவரது தலைமைத்துவக் காலத்தில், சார்ஸ் நோய்த்தொற்று ஏற்பட்டபோது, தேசிய அளவிலான பொதுச் சுகாதார நடவடிக்கைகளை அவர் திறம்பட வழிநடத்தினார். மேலும், அவர் பயனளிக்கும் பல திட்டங்களை நமது சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்பில் அறிமுகப்படுத்தினார்.

சிங்கப்பூருக்கு ஆற்றிய முக்கியத்துவம் வாய்ந்த பல பங்களிப்புகளின் பேரில், பேராசிரியர் டான் சோர் சுவான் அவர்களுக்குச் சிறப்புப் பணி விருது வழங்கப்படுகிறது.


THE MERITORIOUS SERVICE MEDAL
பாராட்டுப் பணிப் பதக்கம்


4. திரு சான் யாங் கிட்
நிரந்தரச் செயலாளர்,
சுகாதார அமைச்சு

புகழுரை

திரு சான் யாங் கிட், சுகாதார அமைச்சின் நிரந்தரச் செயலாளராக, செலவு கட்டுப்படியான பொதுச் சுகாதாரப் பராமரிப்பையும் சுகாதாரக் காப்பீட்டையும் அனைவரும் எளிதில் பெற முக்கியப் பங்காற்றியுள்ளார். அரசாங்கம் முழுவதற்குமான கொவிட்-19 பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளையும் புதிய கொவிட் இயல்புநிலைக்கான செயல்திட்டத்தையும் வகுத்து, ஒருங்கிணைக்கும் முயற்சியையும் அவர் வழிநடத்தினார். அவரது முயற்சிகள், சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்பைச் சுமைக்கு ஆளாக்காமல் தடுக்கவும், சமூக, பொருளியல் நடவடிக்கைகள் இயல்புநிலைக்குத் திரும்பவும் உதவின.

திரு சான், தற்காப்பு அமைச்சின் நிரந்தரச் செயலாளராக (2012-2019), முக்கியப் பங்காளிகளுடன் தற்காப்பு உறவுகளை மேம்படுத்தவும், புதிய தற்காப்புத் திறனாற்றல்களை – குறிப்பாக, மின்னிலக்க, தகவல் துறைகளில் - வளர்க்கவும் முக்கியப் பங்காற்றினார். தகவல், தொடர்பு, கலை அமைச்சின் நிரந்தரச் செயலாளராகவும் (2008-2012), தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் முதல் தலைவராகவும், முன்னணியில் இருக்கக்கூடிய தேசிய தகவல் தொடர்பு உள்கட்டமைப்பை சிங்கப்பூர் பெற்றிருப்பதை, திரு சான் உறுதிசெய்தார். அதன்மூலம், சிங்கப்பூர் மின்னிலக்கப் பொருளியலாக முன்னணி வகிக்க ஆவன செய்யப்பட்டது.

சிங்கப்பூருக்கு ஆற்றிய முக்கியப் பங்களிப்புகளின் பேரில், திரு சான் யாங் கிட் அவர்களுக்குப் பாராட்டுப் பணிப் பதக்கம் வழங்கப்படுகிறது.


THE MERITORIOUS SERVICE MEDAL
பாராட்டுப் பணிப் பதக்கம்


5. முனைவர் ஆண்ட்ரூ பாங் பூன் லியோங்
நீதிபதி,
மேல்முறையீட்டு நீதிமன்றம்

புகழுரை

நீதிபதி ஆண்ட்ரூ பாங் பூன் லியோங் கடந்த 40 ஆண்டுக்கும் மேலாக சிங்கப்பூரின் சட்டக் கல்விக்கு அளப்பரிய அளவில் பங்காற்றியுள்ளார். கல்வித்துறையில் 23 ஆண்டு பணியாற்றிய பின்னர், 2005ஆம் ஆண்டில், நீதிமன்ற ஆணையராக அவர் பொறுப்பேற்றார். அதே ஆண்டில், உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், பின்னர் 2006ஆம் ஆண்டில் மேல்முறையீட்டு நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். 2017ஆம் ஆண்டு முதல் மேல்முறையீட்டு நீதிமன்றத் துணைத் தலைவராகவும் அவர் பொறுப்பு வகித்து வருகிறார்.

கல்வியாளராக, நீதிபதி பாங் எண்ணற்ற ஆய்வறிக்கைகளை வெளியிட்டுள்ளார். நீதிபதியாக, மிக முக்கியமான, செல்வாக்கு மிகுந்த தீர்ப்புகள் சிலவற்றையும் அவர் வழங்கியுள்ளார் – குறிப்பாக, தனிநபர் கடப்பாடு சார்ந்த வழக்குகளில். அவருடைய ஆய்வறிக்கைகளும் தீர்ப்புகளும் சிங்கப்பூர் மட்டுமின்றி, அனைத்துலக அளவிலும் பரவலாக ஆய்ந்தறியப்பட்டுள்ளன.

நீதிபதி பாங், சிங்கப்பூர்ச் சட்டக் கல்விக் கழகத்தின் துணைத் தலைவராக 2005 முதல் சேவையாற்றி வருகிறார். அவரது வழிகாட்டுதலின்கீழ், சுதந்திரம் பெற்றது முதல் சிங்கப்பூரில் வழங்கப்பட்ட முக்கியத் தீர்ப்புகள் அடங்கிய சிங்கப்பூர்ச் சட்ட அறிக்கைகள் (மறுவெளியீடு), 84 பகுதிகள் கொண்ட தொகுப்பாக வெளியீடு கண்டது.

சிங்கப்பூரின் சட்டக் கல்விக்கு ஆற்றிய முக்கியத்துவம் வாய்ந்த, பல்வகைப் பங்களிப்புகளின் பேரில், நீதிபதி ஆண்ட்ரூ பாங் பூன் லியோங் அவர்களுக்குப் பாராட்டுப் பணிப் பதக்கம் வழங்கப்படுகிறது.


THE MERITORIOUS SERVICE MEDAL
பாராட்டுப் பணிப் பதக்கம்


6. திரு சியா மூன் மிங்
தலைவர்,
SMRT நிறுவனம்

புகழுரை

SMRT நிறுவனத்தின் தலைவராக 2017ஆம் ஆண்டு முதல் பொறுப்பு வகித்துவரும் திரு சியா மூன் மிங், SMRT நிறுவனம் நம்பகத்தன்மையில் தலைசிறந்த நிலையை அடைவதற்கு உறுதுணையாக இருந்துள்ளார். SMRT இரயில் பொறியியல் ஆற்றல்களை வலுப்படுத்துதல், அதன் செயல்பாடுகளையும் பராமரிப்பையும் மேம்படுத்துதல், நிலையங்களின் சேவைகளை மேம்படுத்தும் புத்தாக்கங்களை அறிமுகப்படுத்துதல் ஆகியவற்றுக்கு அவர் மென்மேலும் சிறப்பாகத் துணைபுரிந்துள்ளார்.

திரு சியா, போக்குவரத்து அமைச்சு, நிலப் போக்குவரத்து ஆணையம் ஆகியவற்றுடனான SMRT நிறுவனத்தின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தியதுடன், சிக்கலான பொறியியல் விவகாரங்களைத் தீர்ப்பதற்கான பொதுவான அணுகுமுறையை உருவாக்க முனையும் ஒருங்கிணைந்த ‘கட்டுப்பாடு - செயல்பாடு’ வாரியக் கலந்துரையாடலுக்கு வித்திட்டார். ஜொகூர் பாரு - சிங்கப்பூர் அதிவிரைவு இரயில் திட்டத்துக்கும் அவர் பெருமளவு பங்காற்றினார்.

சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழக உயர் பள்ளியின் ஆளுநர் வாரியக் குழுத் தலைவராகவும் பொறுப்பு வகித்துவரும் திரு சியா, அனைத்துலகக் கண்ணோட்டத்துடன் மாணவர்களை உருவாக்க, பள்ளியை வழிநடத்தினார். மாணவர்கள் உண்மையான அனுபவங்களைப் பெறத் துணைபுரியும் வகையில், தொழில்துறையுடனான பங்காளித்துவத்தை ஏற்படுத்திக்கொள்ள, அவர் பள்ளிக்கு உதவினார்.

நமது பொது இரயில் கட்டமைப்பின் நம்பகத்தன்மைக்கும் கல்வித் துறைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்புகளை அளித்ததன் பேரில், திரு சியா மூன் மிங் அவர்களுக்குப் பாராட்டுப் பணிப் பதக்கம் வழங்கப்படுகிறது.


THE MERITORIOUS SERVICE MEDAL
பாராட்டுப் பணிப் பதக்கம்


7. திரு டேவிட் வோங் சியோங் ஃபூக்
தலைவர்,
ரிபப்ளிக் பலதுறைத்
தொழில்நுட்பக்கல்லூரி

புகழுரை

திரு டேவிட் வோங் சியோங் ஃபூக் 2014ஆம் ஆண்டிலிருந்து, தன்னாட்சிப் பல்கலைக்கழகங்களின் தர உறுதிப்பாட்டுக் கட்டமைப்புக்கான வெளிப்புற மறுஆய்வுக் குழுவுக்கும், ரிபப்ளிக் பலதுறைத் தொழில்நுட்பக்கல்லூரியின் ஆளுநர் நிர்வாகக் குழுவுக்கும் தலைவராகச் சேவையாற்றி வருகிறார்.

கடந்த எட்டு ஆண்டில், ஆறு தன்னாட்சிப் பல்கலைக்கழகங்களின் உறுதிப்பாட்டைத் தனிச் சிறப்புமிக்க வகையில் வழிநடத்தினார், திரு வோங். தர உறுதிப்பாட்டுச் செயல்முறையில் அவரது தலைமைத்துவம், அரசாங்க நிதிகளைப் பெறும் பல்கலைக்கழகங்களின் தொடர் மேம்பாட்டுக்கும் முன்னேற்றத்துக்கும் கணிசமான அளவு பங்களித்துள்ளது.

திரு வோங்கின் தலைமைத்துவத்தின்கீழ், ரிபப்ளிக் பலதுறைத் தொழில்நுட்பக்கல்லூரி தொழில்துறையுடனும் சமூகத்துடனும் வலுவான பங்காளித்துவத்தைக் கொண்ட, நன்மதிப்பு பெற்ற வாழ்நாள் கற்றல் நிலையமாகத் தம்மை நிறுவிக்கொண்டுள்ளது.

உயர்கல்விக்கு ஆற்றிய வலுவான பங்களிப்புகளின் பேரில், திரு டேவிட் வோங் சியோங் ஃபூக் அவர்களுக்குப் பாராட்டுப் பணிப் பதக்கம் வழங்கப்படுகிறது.


THE PUBLIC SERVICE STAR (BAR)
பொதுப் பணிச் சிறப்புப் பதக்கம் (பதக்கப் பட்டை)



THE PUBLIC SERVICE STAR
பொதுப் பணிச் சிறப்புப் பதக்கம்


புகழுரை

நாம் சிறுசிறு செயல்களின் வாயிலாகவே, நம் நாட்டின்மீதும் சக குடிமக்கள்மீதும் பெரும்பாலும் பரிவு காட்டுகிறோம். சிறு துளி பெரு வெள்ளம் போல இத்தகைய பற்பல செயல்களின் ஒருங்கமைவே சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. பங்களித்தோர் அனைவருக்கும் பொருள் வெகுமதி கொடுப்பது இயலாது. எனினும், பொதுப் பணிச் சிறப்புப் பதக்கம் (பதக்கப் பட்டை), பொதுப் பணிச் சிறப்புப் பதக்கம் ஆகியனவற்றை அளித்து, நம்மால் அவர்களின் பங்களிப்புகளை அங்கீகரிக்கமுடியும். நாமும் அவ்வாறே அவர்களைப் பெருமைப்படுத்துகிறோம்.


THE PUBLIC ADMINISTRATION MEDAL (GOLD) (BAR)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்) (பதக்கப் பட்டை)


8. திருவாட்டி சூரியகலா ஜென்னிஃபர் மேரி
முன்னாள் துணைத் தலைமை நீதிபதி,
தலைமை நீதிபதி அலுவலகம்,
அரசு நீதிமன்றங்கள்

புகழுரை

திருவாட்டி சூரியகலா ஜென்னிஃபர் மேரி 2022ஆம் ஆண்டில் பணி ஓய்வு பெறும் முன், அரசு நீதிமன்றங்களின் துணைத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றினார். நீதிமன்றங்களில் இருந்த 11 ஆண்டில், அமைப்பின் ஆளுமை முதல் நீதிச் சேவைகள் பெறுவது வரையிலான பல முக்கிய முயற்சிகளை அவர் வழிநடத்தியுள்ளார். அரசு நீதிமன்றக் கட்டடங்களின் கட்டுமானத்தையும் அவர் மேற்பார்வையிட்டார். 2021 முதல் 2022 வரை, அவர் உன்னத நீதிமன்றத்துக்கான அனைத்துலக நட்பமைப்பிற்குத் (அதன் தோற்றுவிப்பு உறுப்பினர்களில் அரசு நீதிமன்றங்களும் அடங்கும்) தலைமை தாங்கி, சிங்கப்பூர் நீதித்துறையின் அனைத்துலக நிலையை உயர்த்தியுள்ளார்.


THE PUBLIC ADMINISTRATION MEDAL (GOLD)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்)


9. திரு ஜோசஃப் லியொங் வெங் கியொங்
நிரந்தரச் செயலாளர்
(தொடர்பு, தகவல்) / நிரந்தரச் செயலாளர் (இணையப்பாதுகாப்பு),
பிரதமர் அலுவலகம் / நிரந்தரச் செயலாளர்
(அறிவார்ந்த தேசம், மின்னிலக்க அரசாங்கம்),
பிரதமர் அலுவலகம் & தொடர்பு, தகவல் அமைச்சு

புகழுரை

தற்காப்பு அமைச்சின் தற்காப்பு வளர்ச்சிப் பிரிவுக்கான நிரந்தரச் செயலாளராக, திரு ஜோசஃப் லியொங், அமைச்சின் மின்னிலக்க உருமாற்ற முயற்சிகளை வழிநடத்துவதிலும் 2040 தற்காப்புத் தொழில்நுட்பச் சமூகத் திட்டத்தை உருவாக்குவதிலும் பெரும் பங்காற்றினார். வளங்களைத் திட்டமிடுதல், ஆளுமை ஆகியவற்றில் உருமாற்ற முயற்சிகளை வழிநடத்திய அவர், கொவிட்-19 கிருமிப்பரவலுக்கு எதிரான போராட்டத்தில் தற்காப்பு அமைச்சின் முயற்சிகளுக்கும் தலைமை ஏற்றிருந்தார். தற்போது, தொடர்பு, தகவல் அமைச்சின் நிரந்தரச் செயலாளராகவும், இணையப்பாதுகாப்புக்கான நிரந்தரச் செயலாளராகவும், அவர் அரசாங்கத்தின் இணைய, மின்னிலக்க உத்திகளை வழிநடத்துகிறார்.


THE PUBLIC ADMINISTRATION MEDAL (GOLD)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்)


10. திரு லிம் ஹொக் இயூ
தலைமை நிர்வாக இயக்குநர்,
மக்கள் கழகம்

புகழுரை

திரு லிம் ஹொக் இயூ, கொவிட்-19 நெருக்கடியைக் கையாள அரசாங்கம் முழுவதற்குமான முயற்சிகளை ஒருங்கிணைப்பதில் முக்கியப் பங்காற்றியுள்ளார். அந்த முயற்சிகள், உரிய அனைவருக்கும் சென்றடைவதை அவர் உறுதிசெய்தார். குறிப்பாக, பொதுச் சுகாதாரம், பாதுகாப்பு, சமூக மீள்திறனை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் அவர் கவனம் செலுத்தினார். கிருமிப்பரவல் காலகட்டத்தில், மக்களை ஒன்றுதிரட்டும் பொருட்டு, மக்கள் கழகத்தை வழிநடத்திய அவர், ‘சமூகம் 2025’ பெருந்திட்டத்திற்கான பாதையையும் வகுத்தளித்தார். அரசாங்கம் முழுவதற்குமான பொதுச் சேவையை மேலும் சீரிய முறையில் அனைவரிடத்திலும் கொண்டு செல்ல, கொவிட் காலகட்டத்திற்குப் பிந்திய சமூக முயற்சிகளை வளர்க்கும் நோக்கில் அத்திட்டம் வரையறுக்கப்பட்டது.


THE PUBLIC ADMINISTRATION MEDAL (GOLD)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்)


11. திரு லாய் சுங் ஹான்
நிரந்தரச் செயலாளர் (கல்வி),
கல்வி அமைச்சுத் தலைமையகம்,
கல்வி அமைச்சு

புகழுரை

கல்வி அமைச்சின் நிரந்தரச் செயலாளராகத் திரு லாய் சுங் ஹான், சிங்கப்பூரின் கல்வித்துறைக்கான முக்கியக் கொள்கைகள் தொடர்பான மறுஆய்வுகளில் உத்திபூர்வ மேற்பார்வையை வழங்கியுள்ளார். அவற்றுள் நமது ஊழியரணியின் வாழ்க்கைத்தொழில் மீள்திறனை வலுப்படுத்தும் வாழ்நாள் கற்றலுக்கான சூழலை வடிவமைத்ததும் அடங்கும். சிங்கப்பூரின் பாதுகாப்பை நிலைநாட்டுவதற்கான உள்துறைக் குழுவின் அறிவியல், தொழில்நுட்பத் திறனாற்றல்களை மேம்படுத்துவதிலும், அவர் குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றியுள்ளார். அரசாங்கச் சேவை முழுவதும் ஆற்றிய முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்புகளின் பேரில், திரு லாய் சுங் ஹான் அவர்களுக்குப் பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்) வழங்கப்படுகிறது.


THE PUBLIC ADMINISTRATION MEDAL (GOLD)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்)


12. திருமதி சியா-டெர்ன் ஹுவெய் மின்
துணை ஆணையர்,
அனைத்துலக, முதலீட்டு,
மறைமுக வரிகள்,
சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய்
ஆணையம்

புகழுரை

திருமதி சியா-டெர்ன் ஹுவெய் மின், வெளிப்படையான வரி நிர்வாகம், இலாப வரிக் குறைப்பு, இலாபத் தொகைப் பெயர்ப்பு உத்திமுறை ஆகிய அம்சங்களில் சிங்கப்பூரின் அனைத்துலக ஈடுபாட்டை அதிகரிப்பதிலும் பாதுகாப்பதிலும் முக்கியப் பங்காற்றியுள்ளார். பொருள், சேவை வரியின் நிர்வாகத்தை வலுப்படுத்துவதில் அவருக்கு முக்கியப் பங்கு உண்டு. கொவிட்-19 காலத்தின்போது தொழில்களுக்குப் பயனளிக்கக்கூடிய வாடகை ஆதரவுத் திட்டங்களைச் சிறப்பாகக் கொண்டு சேர்ப்பதோடு, சொத்து வரி நிர்வாகத்தில் பெரிய அளவிலான புத்தாக்கத்தையும் உற்பத்தித்திறனையும் உருவாக்க திருமதி சியா முனைந்துள்ளார். அவரது தீர்க்கமான தலைமைத்துவத்தின்கீழ் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் வரி தொடர்பான குற்றங்களை எதிர்கொள்ளும் அதன் ஆற்றலைக் கணிசமாக வலுப்படுத்தியுள்ளது.


THE PUBLIC ADMINISTRATION MEDAL (GOLD)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்)


13. பேராசிரியர் இயோ கே குவான்
தலைமை நிர்வாக அதிகாரி,
தேசியப் பல்கலைகழகச்
சுகாதாரக் கட்டமைப்பு;
மூத்த ஆலோசகர்,
இரைப்பைக் குடலியல் துறை,
தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை,
சுகாதார அமைச்சு

புகழுரை

பேராசிரியர் இயோ கே குவானின் பங்களிப்புகள் சுகாதாரப் பராமரிப்புத் தலைமைத்துவம் முதல் ஆய்வு, கல்வித்துறை வரை நீடிக்கின்றன. தேசியப் பல்கலைக்கழகச் சுகாதாரக் கட்டமைப்பின் தலைமை நிர்வாகியாக, அவரது தலைமைத்துவத்தின்கீழ், பல புத்தாக்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. அவை தட்டுப்பாடுகள் நிறைந்த கொவிட் கிருமித்தொற்றுச் சூழலை எதிர்கொள்ள உதவின. தேசியப் பல்கலைக்கழகச் சுகாதாரக் கட்டமைப்பு, கிருமிப்பரவலைச் சமாளிப்பதற்கும், கொவிட்-19 நோயாளிகளைப் பராமரிப்பதற்கும் தேசிய அளவில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கும் வலுவான ஆதரவு வழங்கியது. சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தின் யொங் லூ லின் மருத்துவப் பள்ளியின் தலைவராக (2011-2018), அவர் உருமாற்றத் திட்டங்களை வழிநடத்தினார். ஆசியாவின் தலைசிறந்த மருத்துவப் பள்ளியாக அப்பள்ளி அங்கீகரிக்கப்பட்டது.


THE PUBLIC ADMINISTRATION MEDAL (GOLD)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்)


14. மூத்த உதவி ஆணையர் இங் சேர் சோங்
இயக்குநர்,
மத்திய போதைப்பொருள்
ஒழிப்புப் பிரிவு,
உள்துறை அமைச்சு

புகழுரை

திரு இங் சேர் சோங் உள்துறை அமைச்சில் 34 ஆண்டு சேவையாற்றி, பல உயர் பதவிகளை வகித்துள்ளார். அவரது தலைமைத்துவத்தின்கீழ், மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, போதைப்பொருள் கடத்தல்காரர்களை ஒடுக்குவதில் பல வெற்றிகளைக் கண்டுள்ளது; உளவு சார்ந்த நீண்டகால ஆற்றல்களையும் உருவாக்கியுள்ளது; போதைப்பொருள் தடுப்புக்கான கல்வி முயற்சிகளையும் வலுப்படுத்தியுள்ளது. அவர் பணிபுரிந்த காலத்தில், சிங்கப்பூரின் போதைப்பொருள் மறுவாழ்வுத் திட்டத்திற்கான மேம்பாடு உள்ளிட்ட, பல முக்கியச் சட்டத் திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவை போன்று, அவர் வழிநடத்திய பல்வகை முயற்சிகள், போதைப் புழங்குவோரிடையே மீண்டும் குற்றம் புரியும் எண்ணிக்கையைக் குறைத்துள்ளதுடன் சிங்கப்பூர் போதைப்பொருளற்ற நாடாகப் பெரும்பாலான நேரங்களில் இருக்க உதவியுள்ளது.


THE PUBLIC ADMINISTRATION MEDAL (GOLD)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்)


15. திரு டான் மெங் டுய்
தலைமை நிர்வாக அதிகாரி,
நிர்வாகம்,
வீடமைப்பு வளர்ச்சிக் கழகம்

புகழுரை

திரு டான் மெங் டுய், சிங்கப்பூரின் உள்கட்டமைப்பு, சுற்றுச்சூழல் துறைகளின் வளர்ச்சிக்குக் கணிசமான அளவு பங்காற்றியுள்ளார். வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக, நம் வட்டாரங்களில் அனைவரையும் உள்ளடக்கிய, செழிப்பான சமூகங்களிடையே கட்டுப்படியான, தரமான வீடுகளைத் திட்டமிடுவதற்கும் மேம்படுத்துவதற்கும் அவர் வலுவான ஆதரவு அளித்துள்ளார். தேசியச் சுற்றுப்புற அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக முன்னர்ப் பணியாற்றிய அவர் தூய்மையான, நீடித்து நிலைத்திருக்கக்கூடிய சுற்றுச்சூழலுக்கு வித்திடும் கொள்கைகளையும் திட்டங்களையும் வடிவமைப்பதில் பெரும் பங்காற்றினார்.


THE PUBLIC ADMINISTRATION MEDAL (GOLD)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்)


16. திரு தே தியாங் குவான்
முதல் துணைத் தலைமை இயக்குநர் /
தலைமை இடர் மதிப்பீட்டு அதிகாரி, குழும, குழுத் தலைமை அலுவலகம்,
சிங்கப்பூர்ப் பொது விமானப்
போக்குவரவு ஆணையம்

புகழுரை

திரு தே தியாங் குவான், சிங்கப்பூரின் பொது விமானப் போக்குவரவின் விருப்பங்களை முன்னெடுத்துச் செல்வதில் குறிப்பிடத்தக்கப் பங்காற்றியுள்ளார். அதோடு, சிங்கப்பூர்ப் பொது விமானப் போக்குவரவு ஆணையத்தை உலக, வட்டார அளவில் முன்னணி அமைப்பாக நிறுவ, அவர் முக்கியப் பங்கு வகித்துள்ளார். வலுவான விமானத்துறைச் சுற்றுச்சூழலை உருவாக்குதல், தொழில்துறை மேம்பாடுகளை வலுப்படுத்துதல், பாதுகாப்புத் தரநிலைகளை உயர்த்துதல் ஆகியவைத் தொடர்பிலான ஆணையத்தின் திறனாற்றல்களை வளர்க்கவும் அவர் முக்கியப் பங்காற்றியுள்ளார். கடந்த ஈராண்டாக, கொவிட்-19 நெருக்கடியைச் சமாளிப்பதிலும், அதனால் சிங்கப்பூர் விமானத்துறைக்கு ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்புகளைத் தணிப்பதிலும் அவர் முன்மாதிரியான தலைமைத்துவத்தை வெளிப்படுத்தினார்.


THE PUBLIC ADMINISTRATION MEDAL (GOLD)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்)


17. திரு எட்வர்ட் சுரேந்திரன் ராபின்சன்
துணை நிர்வாக இயக்குநர் (பொருளியல் கொள்கை) &
தலைமைப் பொருளியல் நிபுணர்,
நிர்வாக இயக்குநர் அலுவலகம்,
சிங்கப்பூர் நாணய ஆணையம்

புகழுரை

திரு எட்வர்ட் சுரேந்திரன் ராபின்சன், சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் பொருளியல் கொள்கைக் குழுமத்தை, ஒரு வலுவான, நம்பகத்தன்மையுடைய ஆய்வுத்தளமாக உருவாக்கியுள்ளார் – குறிப்பாக, சிங்கப்பூரில் பயன்பாட்டுப் பொருளியலுக்கு. உயர்தரமான பொருளாதாரக் கண்காணிப்பை மேற்கொள்ளவும், நாணயப் பரிவர்த்தனைக்கான சிறந்த கொள்கைகளைப் பரிந்துரைக்கவும், அக்குழுவை அவர் வழிநடத்தியுள்ளார். இத்தகைய நடவடிக்கைகள், பணவீக்கமற்ற பொருளியல் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கத் துணைபுரிந்துள்ளன. பல்வேறு பொருளியல் கொள்கை விவகாரங்கள் குறித்து அமைப்புகளுக்கிடையிலான விவாதங்களுக்குத் தீர்க்கமான பொருளாதாரப் பகுப்பாய்வை வழங்குவதில் திரு ராபின்சன் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.


THE PUBLIC ADMINISTRATION MEDAL (GOLD) (MILITARY)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்) (படைத்துறை)


18. பிரிகேடியர் ஜெனரல் கெல்வின் ஃபான் சுய் சியொங், PPA(P)
தலைமைப் பணியாளர் (ஒருங்கிணைந்த பணியாளர்)
தற்காப்புப் படைத் தலைவர் அலுவலகம்,
சிங்கப்பூர் ஆயுதப் படை

புகழுரை

பிரிகேடியர் ஜெனரல் கெல்வின் ஃபான் சுய் சியொங், சிங்கப்பூர் ஆயுதப் படையில் பல்வேறு முக்கியப் பதவிகளில் உன்னதமாகச் சேவையாற்றியுள்ளார். தலைமைப் பணியாளராக (ஒருங்கிணைந்த பணியாளர்), சிங்கப்பூர் ஆயுதப் படையின் அடுத்த தலைமுறைக்கான போர் உத்திமுறைகள், அமைப்பியல் கட்டமைப்பு ஆகியவற்றின் பெருந்திட்டம் உட்பட, சிங்கப்பூர் ஆயுதப் படையின் திறன் மேம்பாட்டு முயற்சிகளை அவர் வழிநடத்தியுள்ளார். பிரிகேடியர் ஜெனரல் ஃபான், சிங்கப்பூர் ஆயுதப் படையின் நிலைத்தன்மை திட்டத்தைத் தோற்றுவித்த தற்காப்பு அமைச்சு / சிங்கப்பூர் ஆயுதப் படையின் முதல் தலைமை நிலைத்தன்மை அதிகாரி ஆவார். கொள்கைப் பிரிவின் இயக்குநராக, பிரிகேடியர் ஜெனரல் ஃபான், அரசதந்திர உறவுகளை மேம்படுத்தவும் தற்காப்பு குறித்த சிங்கப்பூரின் எண்ணங்களைத் தற்காக்கவும் அனைத்துலகப் பங்காளிகளை ஈடுபடுத்தினார்.


THE PUBLIC ADMINISTRATION MEDAL (SILVER) (BAR)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (வெள்ளி) (பதக்கப் பட்டை)



THE PUBLIC ADMINISTRATION MEDAL (SILVER)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (வெள்ளி)



THE PUBLIC ADMINISTRATION MEDAL (SILVER) (MILITARY)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (வெள்ளி) (படைத்துறை)


புகழுரை

இராணுவம் உள்ளிட்ட பொதுச் சேவைத் துறையில் உள்ள நடுத்தர மேலாளர்கள், கொள்கைகளால் வகுக்கப்பட்ட முடிவுகளைச் செயல்திறம் மிக்க வகையில் நடைமுறைப்படுத்தும் முக்கியப் பணியை மேற்கொள்பவர்கள். பொதுச் சேவை முழுவதும் உன்னதமான விளைவுகளை ஏற்படுத்தும் வகையில், உத்வேகமும் கற்பனைத் திறனும் கொண்டு செயற்கரிய செயல்களை மேற்கொள்ளும் நடுத்தர மேலாளர்கள் பலர். இன்று அத்தகையோர், பொது ஆட்சித்துறைப் பதக்கம் (வெள்ளி) வழங்கப்பெற்று கெளரவிக்கப்படுகின்றனர்.


THE PUBLIC ADMINISTRATION MEDAL (BRONZE) (BAR)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (வெண்கலம்) (பதக்கப் பட்டை)



THE PUBLIC ADMINISTRATION MEDAL (BRONZE)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (வெண்கலம்)



THE PUBLIC ADMINISTRATION MEDAL (BRONZE) (MILITARY)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (வெண்கலம்) (படைத்துறை)


புகழுரை

அரசாங்கக் கொள்கைகளின் வெற்றிகரமான அமலாக்கம், பொதுச் சேவைத் துறையில் பணிபுரியும் ஒவ்வொருவரின் அர்ப்பணிப்பு உணர்வையும் கடும் உழைப்பையும் சார்ந்தே அமைகின்றன. மிகச் சிறந்த சேவையை நொடிதோறும் வழங்க, அயராது பாடுபடும் பலரைத் துறை முழுவதும் கொண்டிருக்கும் நற்பேறு பெற்றுள்ளது, சிங்கப்பூர்ப் பொதுச் சேவை. இத்தகு அதிகாரிகள் நேர்மைத் திறத்துடன் ஆற்றிய சேவைகளின் பேரில், பொது ஆட்சித்துறைப் பதக்கம் (வெண்கலம்) வழங்கப்பெற்று கெளரவிக்கப்படுகின்றனர்.

TOP