National Day Message 2013 (Tamil)

PM Lee Hsien Loong | 8 August 2013

Minister for Foreign Affairs and Minister for Law Mr K Shanmugam delivered Prime Minister Lee Hsien Loong's 2013 National Day Message in Tamil. The message was recorded at SAFRA Toa Payoh and telecast on 8 August 2013.

 

என் சக சிங்கப்பூரர்களுக்கு வணக்கம்.

நான் இன்று தோப்பாயோவில் உள்ள SAFRA மன்றத்திலிருந்து உங்களுடன் பேசுகிறேன். SAFRA தனது முதல் மன்றத்தை, ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்தைந்தில் இங்குதான் கட்டியது. தேசிய சேவை செய்தவர்களுக்கும், உங்களுக்கும் இதைப் புதுப்பித்துள்ளோம். ஆண்டுக்காண்டு வளர்ச்சி அடையும் போது நமது சுற்றுப்புறத்தையும் வசதிகளையும் எவ்வாறு மேம்படுத்துகிறோம் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

நாம் கடந்த ஆண்டு நிலையான முன்னேற்றம் கண்டோம். HDB வீடுகளுக்குக் காத்திருந்தவர்களுக்கு வீடுகள் கிடைத்தன. தேவைக்கு ஏற்பக் கட்டும் BTO வீடுகளின் விலைகளை நிலைப்படுத்தினோம். சொத்து விலை ஏற்றத்தையும், அளவு மீறிக்கடன் வாங்குவதையும் கட்டுப்படுத்தியுள்ளோம்.
நாம் பேருந்துகளையும் பேருந்துப் பாதைகளையும் அதிகரித்துள்ளோம். அதிகாலையில் MRT-யின் இலவசப் பயணத்தைத் தொடங்கி உள்ளோம். தற்சமயம் உள்ள ரயில் பாதைகளில் கூடுதலான வண்டிகளைச் சேர்க்க உள்ளோம். DOWN TOWN ரயில் பாதையின் முதல் கட்டம் டிசம்பரில் திறக்கப்படும். மேலும் கலைத்துறை , விளையாட்டுத் துறைகளிலும் பல வெற்றிகள் கிடைத்தன. நம் LIONS XII கால்பந்தாட்டக் குழு மலேசிய சூப்பர் லீக் போட்டியில் வெற்றி பெற்றதும் அடங்கும்.

திருமணம், பிள்ளைப்பேறு, மக்கள்தொகை போன்ற நீண்டகாலப் பிரச்சினைகளையும் சமாளித்து வருகிறோம். ஜனவரியில் வெளியான மக்கள் தொகை குறித்த வெள்ளை அறிக்கை பல வலுவான கருத்துக்களைத் தூண்டியது. அந்த விவாதம் பிரச்சினைகளை நன்கு புரிந்து கொள்ள உதவியது. சிங்கப்பூரர்களின் தேவைகளுக்கும் பொருளாதாரத்திற்கும் வெளிநாட்டு ஊழியர்கள் தேவைப்படுகின்றனர். மேலும் குழந்தைகள் பற்றாக்குறையை ஈடுசெய்ய குடியேறிகளும் தேவைப்படுகிறார்கள். ஆனால் மக்கள் கூட்டத்தால் ஏற்படும் நெரிசல் பற்றியும், நம் சிங்கப்பூரின் அடையாளத்தைக் கட்டிக்காப்பது பற்றியும் நாம் அக்கறை கொள்கிறோம். அதனால், இதில் எதை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் எனும் இக்கட்டிற்கு ஆளாகிறோம். ஆகவே நமது தேவைகள், மற்றும் வரம்புகளை உணர்ந்து, சிங்கப்பூரர்களுக்கான சிறந்த தீர்வுகளை கவனமாகத் தேர்வு செய்ய வேண்டும்.

நிச்சமயற்ற உலகச் சூழலுக்கு மத்தியில் நமது பொருளாதாரம் தொடர்ந்து நிலையாக உள்ளது. நாம் மேலும் தரமான முதலீடுகளை ஈர்க்கிறோம். வேலையின்மை தொடர்ந்து குறைவாக உள்ளது. இவ்வாண்டின் முதல் பாதியில் நாம் 2 விழுக்காடு வளர்ச்சியடைந்தோம். இந்த ஆண்டு முன்பு எதிர்பார்த்ததைவிட 2.5 முதல் 3.5 விழுக்காடு வரை வளர்ச்சி காண்போம் என்று எதிர்பார்க்கிறோம். நாம் வெளிநாட்டு ஊழியர்களையும் குடியேற்றத்தையும் கட்டுப்படுத்தினாலும் கூட, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை நாம் கட்டிக்காக்க வேண்டும். தொடர்ந்து தொழில்களை வரவேற்கும் ஓர் இடமாக சிங்கப்பூரை வைத்திருக்கவேண்டும்.

உலகம் முன்னுரைக்கமுடியாத விதத்தில் மாறிவருகிறது. தொழில்நுட்பம் நமது வாழ்க்கையை உருமாற்றுகிறது. எங்கும் உள்ள சமுதாயங்கள் பாதிக்கப்ப்டுகின்றன. வேலைகளில் உத்தரவாதம் குறைந்துள்ளது. சம்பளங்கள் மெதுவாகவே உயர்கின்றன அல்லது தேங்கி விடவும் செய்கின்றன. குடும்பங்கள் மேலும் கடுமையாக உழைக்கின்றன. தங்கள் பிள்ளைகள் தங்களைவிடச் சிறப்பாகச் செய்யவார்களா எனப் பெற்றோர் கவலைப் படுகின்றனர்.

சிங்கப்பூரும் மாறி வருகிறது. பொருளாதாரம் முதிர்ச்சி அடைந்து வருகிறது. நமது மூப்படைந்த மக்கள்தொகை கூடுகிறது. சமுதாயத்தில் இருக்கும் பல்வேறு பிரிவினருக்கு இப்போது மேலும் வெவ்வேறான, ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட தேவைகள், விருப்பங்கள் இருக்கின்றன. முதியோர் சுகாதாரப் பராமரிப்பு, வாழ்க்கைச் செலலவுகள் குறித்துச் கவலையடைகிறார்கள். இளையர் மேலும் உயர் கல்வி வாய்ப்புக்களையும், கட்டுபடியான வீடுகளையும் விரும்புகிறார்கள்.

நாம் இனி செல்லவிருக்கும் பாதை இது வரை சென்ற பாதையில் இருந்து வேறுபட்டு இருக்கும். ஆகவே நமது நிலைப்பாட்டை மீண்டும் மதிப்பிடவேண்டும், நம் இலக்கை மறு ஆய்வு செய்ய வேண்டும். இந்தப் புதிய உலகில் செழித்தோங்க, நமது உத்தி முறைகளைகளுக்குப் புத்துயிர் அளிக்கவேண்டும்.

சிங்கப்பூர் நல்ல நோக்கோடும், நம்பிக்கையோடும், என்றும் நமக்குச் சிறந்த இல்லமாக இருக்கவேண்டும் என்று சென்ற ஆண்டு செய்தியில் கூறினேன். நம்முடைய பொதுவான எதிர்காலத்தைக் கூட்டாக வரையறுப்பதற்கு நமது சிங்கப்பூர் கலந்துரையாடலை அதாவது Our Singapore Conversation னைத் தொடங்கினோம், துடிப்புடன், உணர்வுப்பூர்வமாக அதில் பலர் பங்கெடுத்துக் கொண்டனர். அவர்கள் பல பயனுள்ள யோசனைகளை எழுப்பினார்கள். அதில் பங்கெடுத்த எல்லோருக்கும் நன்றி.

நாம் விரும்புவதைத் திட்டமிட நமது சிங்கப்பூர் கலந்துரையாடல் உதவியுள்ளது. வெற்றிகாணவும், மனநிறைவான வாழ்க்கை அமையவும், நமது குடிமக்களுக்கு வாய்ப்புகளை அளிக்கிற ஓர் சிறந்த சிங்கப்பூரை உருவாக்க வேண்டும். வெற்றியைப் பல வழிகளில் வரையறுக்கும் உச்சங்களை அடையப் பல பாதைகளை வழங்கும் ஒரு தேசம். மக்களுக்கு மன நிம்மதியைக் கொடுக்கும் பாதுகாப்பு வலைகளைக் கொண்ட ஒரு நாடு. வசதி குறைந்தவர்களுக்கு உதவி கிடைப்பதுடன் சிறப்பாகச் செய்தவர்கள் மற்றவர்களுக்கு அதிகம் உதவி செய்யும் ஒரு சமுதாயம்.

இந்த இலட்சியத்தை அடைவதற்கு நாம் இலக்குகளை அமைத்துத் திட்டங்களைத் தீட்டுவோம். நாம் வாழும் போட்டிமிக்க உலகத்தில் முன்னேற நம்மிடம் உள்ள ஆற்றல், வாய்ப்புகள் ஆகியவற்றுடன் நாம் நம் இலட்சியத்தை அடையப் போட்டியிடவேண்டும்.

இன்று சிங்கப்பூர் அனைத்துலகில் உயர்ந்து நிற்கிறது. பல நாடுகள் நம்மை மதித்துப் போற்றுகின்றன. வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும் பொருளாதாரத்தைக் கொண்டவர்கள், நம்மிடம் இருந்து யோசனைகளைக் கற்றுக்கொள்ள விரும்புகிறார்கள். வலுவான சிங்கப்பூரின் அடையாளத்திலிருந்து ஒவ்வொரு குடிமகனும் பயனடைகிறார். நம் ஊழியர்கள் உயர்ந்த சம்பளங்களை அனுபவிக்கிறார்கள். வெளிநாடுகளில் வேலைசெய்யும் நமது மக்கள் வரவேற்கப்பட்டு, மதிக்கப்படுகிறார்கள்.

அதே நேரத்தில் மற்ற நாடுகள் வேகமாக முன்னேறி நம்மை எட்டிப்பிடிக்கின்றன. போட்டியில் நாம் தொடர்ந்து முன்னிலையில் இருக்கவேண்டும். உலகில் நமது நற்பெயரைக் கட்டிக்காக்க வேண்டும்.

மாறிய சூழ்நிலைகளில் வெற்றிகாண நாம் தேச நிர்மாணத்தில் நம் அடிப்படை அணுகுமுறையை மாற்றியமைக்க வேண்டும். தனிநபர், சமூகம், நாடு ஆகியவை ஆற்றும் பங்குக்கு இடையே நாம் ஒரு புதிய சமநிலையை அடையவேண்டும்.

நமது சமுதாய உணர்வை வலுப்படுத்தவேண்டும். வசதிகுறைந்தோருக்குப் பல் வழிகளில் உதவுதல், பொது நன்மைக்காக ஒன்றுசேர்ந்து பணியாற்றுதல் என்று நாம் ஒருவருக்கொருவர் அதிக ஆதரவைக் கொடுக்கவேண்டும்.

நாம் ஏற்கனவே அதைச் செய்திருக்கிறோம், குறிப்பாக நெருக்கடிகளின்போது. டெங்கியும், புகைமூட்டமும் நம்மை அச்சுறுத்தியபோது, நாம் ஒற்றுமையாக இருந்து ஒருவரை ஒருவர் கவனித்துக்கொண்டோம். நன்மையிலும், தீமையிலும் தனிநபராக மட்டுமல்லாது, எல்லோரும் ஒன்றிணைந்து முனைப்புடன் உதவி செய்து, ஒரு பொதுவான நோக்கமும், பொறுப்புணர்ச்சியும் கொண்ட சமுதாயமாக விளங்கினோம். இதுவே நம் சிங்கப்பூரின் தனித்தன்மை. இந்த ஒற்றுமை உணர்வை நாம் பலப்படுத்தவேண்டும்.

ஒரு நியாயமான, நேர்மையான சமுதாயத்தை உருவாக்க அரசாங்கம் பெருமளவில் பங்காற்றும். கல்வி மற்றும் வாழ்க்கைக் கல்வி மூலம் ஒவ்வொரு சிங்கப்பூரரையும் வெற்றிகாணச் செய்வதற்கு அரசாங்கம் உதவும். அனைவருக்கும் முன்னேற்றப் பாதையைத் திறந்துவைப்போம். வசதிகுறைந்த குடும்பங்கள், வாழ்வில் ஒரு நல்ல தொடக்கத்தைப் பெற, பாலர் பள்ளியிலிருந்து அவர்களுக்கு உதவுவோம். வாழ்க்கைச் செலவுகளையும் சமாளிப்போம். உதாரணமாக, சுகாதாரப் பராமரிப்புச் செலவுகளைச் சமாளிப்போம், அதிலும் குறிப்பாக முதியவர்களுக்கு உதவி அளிப்போம். மேலும், ஒவ்வொரு குடும்பமும் சொந்த HDB வீட்டை வாங்க உதவுவது மூலமும், குறைந்த வருமானமுள்ள ஊழியர்கள் Workfare அதாவது வேலைநலத் திட்டம் மூலம் நல்ல வேலை பெறவும், நியாயமான முறையில் நடந்து, சமமான சமுதாயத்தை உருவாக்குவோம். எல்லோருக்கும் எப்போதும் சம உரிமையும், வாழ்க்கையில் வெற்றிபெற போதிய வாய்ப்புகளும் இருக்கும்.

நாம் ஒவ்வொருவரும் நம்மால் ஆன அனைத்தையும் செய்து, சுயசார்புடனும் சாமர்த்தியத்துடனும் இருக்கவேண்டும். ஏனெனில் நாம் ஒவ்வொருவரும் அவரவர் பங்கை ஆற்றினால் தான் சிங்கப்பூர் வெற்றிபெற முடியும்.

அதே நேரத்தில், நாம் இனம், சமூகம், அரசியலால் பிரிக்கப்படாத ஒன்றுபட்ட மக்களாக இருந்தால் மட்டுமே இவை அனைத்தும் சாத்தியமாகும். எப்போதும் சிங்கப்பூரர்களுக்குச் சேவையாற்றும் நம்பகமான, திறன் வாய்ந்த, நேர்மையும் கட்டுப்பாடும் மிக்க தலைவர்கள் இருக்கவேண்டும். சிந்தித்து முன்கூட்டியே திட்டமிடும் நல்ல அரசாங்கம் வேண்டும். அதைவிட முக்கியமாக, மக்களின் அக்கறைகள், நம்பிக்கைகள் ஆகியவற்றை உணர்ந்துகொள்ளும் அரசாங்கம் இருக்கவேண்டும். ஒன்றுபட்ட, மேம்பட்ட சிங்கப்பூரை உருவாக்க அதுவே சிறந்த வழி.

நாம் நீண்ட பாதையைக் கடந்து வந்துள்ளோம். சிங்கப்பூரின் மிகச் சிறந்த ஆண்டுகள் இனிமேல் வர இருக்கின்றன. நமது எதிர்காலத்தை வடிவமைத்து சிங்கப்பூர் சரித்திரத்தில் ஒரு புதிய, சிறந்த அத்தியாயத்தை எழுத நம்மால் முடியும். நாம் ஒன்றிணைந்து நிற்போம். சிங்கப்பூரில் அனைவருக்கும் மேலும் ஓர் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க நம்மை அர்ப்பணித்துக் கொள்வோம்.

உங்கள் அனைவருக்கும் தேசிய தின நல்வாழ்த்துக்கள். நன்றி வணக்கம்.

 

TOP