National Day Message 2014 (Tamil)
SM Lee Hsien Loong
Education
Housing
Social safety nets
8 August 2014
Minister in the Prime Minister’s Office, Second Minister for Home Affairs and Second Minister for Trade and Industry S Iswaran delivered Prime Minister Lee Hsien Loong's National Day Message 2014 in Tamil. The message was recorded at the Alexandra Park Connector and telecast on 8 August 2014.
This article has been migrated from an earlier version of the site and may display formatting inconsistencies.
வணக்கம். நான் Dawson பகுதியில் உள்ள Alexandra பூங்காவில் இருக்கிறேன். ஒரு காலத்தில், இந்தப் பகுதி, கம்பங்கள் நிறைந்த, சதுப்பு நிலமாக இருந்தது. இன்று, இந்தப் பசுமையான, அழகான வட்டாரத்தில் வீடுகள், கடைகள், உணவகங்கள் ஆகிய வசதிகள் உள்ளன.
ஆண்டுக்கு ஆண்டு, சிங்கப்பூரை எவ்வாறு மேம்பாடு அடையச்செய்கிறோம் என்பதற்கு Dawson ஓர் உதாரணம். நமது வாழ்க்கையை மேம்படுத்தவும், ஒரு சிறந்த இல்லத்தை உருவாக்கவும் முயற்சி செய்கிறோம். நாம் பெற்ற சிங்கப்பூரைக் காட்டிலும் ஒரு மேம்பட்ட சிங்கப்பூரை நமது பிள்ளைகளிடம் ஒப்படைக்க ஒன்றிணைந்து செயல்படுகிறோம்.
இதுவே நமது முன்னோடிகளின் உணர்வாக இருந்தது. சிங்கப்பூரை ஒரு வளர்ந்த நாடாக உருவாக்க அவர்கள் ஒற்றுமையுடன் அரும்பாடுபட்டார்கள். அவர்களின் முயற்சியால் இன்று நமக்கு ஒரு சிறந்த சிங்கப்பூர் கிடைத்துள்ளது. அண்மையில் அறிமுகம் கண்ட முன்னோடித் தலைமுறைத் தொகுப்புத் திட்டம் வழி அவர்களுக்கு நன்றி கூறுகிறோம்.
ஒரு புதிய யுகத்தில், நமது முன்னோடிகளின் பண்புகளையும் உணர்வையும் நாம் கட்டிக்காக்க வேண்டும். உலகமயம், துணிச்சல்மிக்க, தொழில்முனைப்பு உள்ளவர்களுக்குப் பல வாய்ப்புகளை வழங்குகிறது. ஆனால் அதே நேரத்தில், அது மக்களுக்குத் தங்கள் எதிர்காலம் குறித்து ஒரு நிச்சயமற்ற உணர்வையும் அச்சத்தையும் தருகிறது. தென்கிழக்கு ஆசியாவில் அரசியல் மாற்றங்கள், தென் சீனக் கடலில் பூசல்கள், Gaza மற்றும் Ukraine-ல் மோதல்கள்; இது போன்ற கடல்கடந்த சம்பவங்கள் நம்மை விரைவாகவும் எதிர்பாரா வகையிலும் பாதிக்கின்றன.
சிங்கப்பூரும் மாறிவிட்டது. நம்மில் பெரும்பாலோர் சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்தவர்கள். நமது முன்னோடிகளைக் காட்டிலும், நாம் முற்றிலும் மாறுபட்ட ஒரு சிங்கப்பூரில் வளர்ந்தோம். நம்முடைய வேறுபட்ட ஆர்வங்களிலும் கருத்துகளிலும் நாம் ஆழ்ந்த பற்று கொண்டுள்ளோம். இப்போது புதிய மேம்பட்ட நிலையில் இருக்கிறோம். அதிலிருந்து நம்மால் புதிய உயரங்களை அடைய முடியும். எனவே, நமது நிலையை மதிப்பீடு செய்யவேண்டும், நமது பாதையை மறுஆய்வு செய்யவேண்டும், நமது உத்திகளைப் புதுப்பிக்கவேண்டும்.
நமது சமூகப் பாதுகாப்பு வலைகளைத் தொடர்ந்து மேம்படுத்துகிறோம். மிக அண்மையில் Medishield Life திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். திரு Bobby Chin அவர்களின் குழுவினரும் சுகாதார அமைச்சும் விவரங்களைத் திட்டமிடுவதில் சிறப்பாகச் செயல்பட்டனர். பல சிங்கப்பூரர்கள் அளித்த பயனுள்ள கருத்துகள் இந்தத் திட்டத்தை மேம்படுத்தின. கடந்த மாதம் இடம்பெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில், எல்லா மன்ற உறுப்பினர்களும் MediShield Life திட்டத்தை வரவேற்றனர். இப்போது இந்தத் திட்டத்தைச் சிறந்த முறையில் செயல்படுத்த வேண்டும். அதற்காக எங்களோடு இணைந்து பணியாற்றும்படி வேண்டுகிறோம்.
ஓய்வுக்காலத்திற்கான சேமிப்பை இருப்பதை உறுதிசெய்வதில் அரசாங்கம் சிங்கப்பூரர்களுக்கு உதவுகிறது. நமது மக்கள்தொகை மூப்படைந்து வருகிறது. நமது மூத்தோருக்கு ஆதரவு வழங்க குறைவான குடும்ப உறுப்பினர்களே இருக்கிறார்கள். மேலும், முதுமைக் காலத்தில் அவர்களுக்கு மனநிம்மதி தேவை. வாழ்நாள் முழுவதும் கடுமையாக உழைத்த பிறகு, மகிழ்ச்சியாக ஓய்வுபெற முடியும் என்ற உத்தரவாதத்தை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
ஓய்வுக்காலத்திற்குத் தயார் செய்யவேண்டும் என்று சிங்கப்பூரர்களுக்குத் தெரிகிறது. மக்கள் இன்னும் நீண்டகாலம் வேலை செய்கிறார்கள்; இன்னும் அதிகம் சேமிக்கிறார்கள். உங்களில் பெரும்பாலோரின் ஓய்வுக்கால நிதிக்கு உங்கள் HDB வீடும் CPF சேமிப்பும் பெரிதும் உதவுகின்றன. சிங்கப்பூரர்கள் ஓர் இல்லத்தை உருவாக்கவும், ஓய்வுக்காலத்தில் தங்களுக்கு உதவக்கூடிய சேமிப்பை பெருக்கவும் HDB வீடு உதவுகிறது. சிங்கப்பூர் வளர்ச்சி அடைய அடைய, வீடு என்ற உங்கள் சொத்தின் மதிப்பும் உயரும். ஒரு கவனமான முறையில், ஓய்வுபெற்றவர்கள், வீட்டைப் பயன்படுத்தி ரொக்கம் பெறுவதை மேலும் எளிதாக்குவது பற்றி எனது குழு ஆராய்ந்து வருகிறது.
உங்கள் வீட்டைத் தவிர, CPF திட்டமும், உங்கள் முதுமைக் காலத்திற்குச் சேமிக்க உதவியுள்ளது. ஓய்வுக்காலத்தில் உங்களுக்கு ஒரு நிலையான வருமானம் கிடைப்பதை அது உறுதிப்படுத்துகிறது. CPF திட்டம் உங்களில் பலருக்கு சிறந்த முறையில் செயல்படுகிறது. இருந்தாலும், அதை இன்னும் மேம்படுத்தலாம். இதைப் பற்றி, வரும் தேசிய தினக் கூட்ட உரையில் பேசுவேன்.
வலுவான பாதுகாப்பு வலைகள் உங்களுக்கு மனநிம்மதியைத் தருகின்றன; துணிந்து செயல்படுவதற்கான நம்பிக்கையைக் கொடுக்கின்றன. நீங்கள் முடிந்தவரை சிறப்பாகச் செய்ய நமது அமைப்புமுறை உதவும். எத்தகைய குடும்பப் பின்னணியைச் சேர்ந்தவராக இருந்தாலும், வாழ்க்கையில் மேன்மை அடைய எல்லாருக்கும் வாய்ப்புகளை முழுமையாக வழங்குவோம்.
இதில் கல்விக்கு ஒரு பெரிய பங்குண்டு. இதன் காரணமாகத்தான், ITE மற்றும் Polytechnic படிப்பை முடித்த மாணவர்கள், வாழ்க்கையில் முன்னேற உதவ, மூத்த துணை அமைச்சர் இந்திராணி ராஜாவின் தலைமையில் ASPIRE குழுவை அமைத்தேன். திறமைவாய்ந்த உங்களுக்குப் பேரார்வமும் நம்பிக்கையும் உள்ளன. உங்கள் கனவை நனவாக்கவும் உன்னத நிலையை அடையவும் வாய்ப்புகளை வழங்குவோம்.
ITE அல்லது Polytechnic படிப்பை முடித்த பிறகு, உங்கள் கற்றல் பயணம் நின்றுவிடக் கூடாது; நீங்கள் மேல் படிப்புக்குச் செல்ல அரசாங்கம் உதவுகிறது. ஆனால், கல்விப் பாதை மட்டுமே முன்னேறுவதற்கான வழியாகாது. உங்கள் வேலைக் காலத்தின்போது உங்களை மேம்படுத்திக் கொள்ள உதவுவோம். வாழ்க்கைத் தொழிலில் முன்னேறும்போது, நீங்கள் சிறப்புத் திறன்களைக் கற்கவும், மேல்நிலைத் தகுதிகளைப் பெறவும் நாங்கள் உதவி செய்வோம்.
உங்களில் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் மேன்மை அடைய உதவுவது, தொடர் கல்வியும் பயிற்சியும் மட்டுமல்ல. சமூகப் பண்பும் இதில் ஒரு முக்கிய அம்சம். சிங்கப்பூரர்கள் என்ற முறையில், ஒருவரிடம் உள்ள கல்வித் தகுதியை மட்டும் பார்க்காமல், அவரின் திறன்கள், பங்களிப்புகள், பண்புகள் ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு அவரை மதிப்பிட வேண்டும். இவ்வாறுதான், சிங்கப்பூரை அனைவருக்கும் நம்பிக்கையும் வாய்ப்புகளும் நிறைந்த நாடாக வைத்திருக்கிறோம்.
நமது மாணவர்களும் ஊழியர்களும் எத்தகைய பாதையைத் தேர்ந்தெடுத்தாலும், முடிவில் நமக்குத் தேவை நல்ல வேலைகளையும் நிறைவான வாழ்க்கைத் தொழில்களையும் வழங்கும் ஒரு துடிப்புமிக்க பொருளியலே. நமது பொருளியல் 2014-ன் முதல் அரையாண்டில் 3.5 விழுக்காடு வளர்ச்சி கண்டது. இந்த ஆண்டிற்கான வளர்ச்சி 2.5 முதல் 3.5 விழுக்காடு வரை இருக்கும் என முன்னுரைக்கப்படுகிறது. இந்த வளர்ச்சியை அடுத்த பத்தாண்டுக்குத் தொடர்ந்து கட்டிக்காப்பது மூலம் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த முடியும்.
வாழ்வதற்கும், வேலை செய்வதற்கும், நமது குடும்பங்களைப் பேணி வளர்ப்பதற்கும் சிங்கப்பூரர்களுக்கு ஒரு சிறந்த இல்லம் இருக்கிறது. ஒன்றுசேர்ந்து, அதை நாம் மேலும் செம்மைப்படுத்துவோம். சிங்கப்பூர் முழுவதிலும் நமது புதிய பேட்டைகளையும் பொது இடங்களையும் அழகுபடுத்துகிறோம். அனைவரும் நன்மையடைய புதிய Sports Hub, புதுப்பிக்கப்பட்ட Victoria அரங்கம் மற்றும் இசையரங்கு மண்டபம் போன்ற வசதிகளைக் கட்டுகிறோம். Ubin தீவைப் பாதுகாத்தது போலவே, நமது இயற்கை வளங்களைப் பாதுகாக்கிறோம். ஒரு தகவல் தொழில்நுட்ப நகரமாகவும், அறிவு சார்ந்த நாடாகவும் உருமாற தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வோம்.
நமது உள்ளமைப்பு வசதிகளுக்கு அப்பால், நமது சமூகப் பிணைப்புகளையும் ஆதரவு உணர்வையும் வலுப்படுத்த வேண்டும். நமது பொதுவான அடையாளத்தையும் நமக்கு முக்கியமாக விளங்கும் பண்புகளையும் திடப்படுத்த வேண்டும். நாம் ஒரு மக்களாக இணைந்து நின்றால் மட்டுமே, சிங்கப்பூரால் வெற்றயை அடைய முடியும்.
சுதந்திரம் பெற்றது முதல், நாம் வெகுதூரம் வந்துள்ளோம். செல்லும் இடமெல்லாம் சிங்கப்பூரர்கள் தலைநிமிர்ந்து பெருமிதம் கொள்கிறார்கள். நம் நாட்டிற்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் இங்குள்ள சிறப்புகளைக் கண்டு வியக்கிறார்கள். இருந்தாலும், நம்மால் இன்னும் முன்னேற முடியும். அதற்கு எல்லை இல்லை.
அடுத்த ஆண்டு சிங்கப்பூர் தனது 50-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள் உட்பட, நமது பொன்விழாவைக் கொண்டாட பல நிகழ்ச்சிகள் காத்திருக்கின்றன. உங்களில் பலர் இந்தச் சிறப்பான தருணத்தை உங்கள் சொந்த வழிகளில் கொண்டாட யோசனைகளை முன்வைத்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தக் கூட்டுப் பொறுப்புணர்வும் பற்றுணர்வும் நம்மை முன்னேற்றிச் செல்லும்.
இனிமேல் சிங்கப்பூரின் நிலை என்ன என்பது நம் கையில்தான் உள்ளது. மாறிவரும் உலகில் செழித்தோங்க ஓர் உன்னத நிலையில் நாம் இருக்கிறோம். வாருங்கள், ஒற்றுமையாகப் பாடுபடவோம். நம் அனைவருக்கும் மேலும் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க நம்மை அர்ப்பணித்துக் கொள்வோம்.
தேசிய தின நல்வாழ்த்துக்கள்!
Videos and transcripts
National Day Message 2014 (Malay)
National Day Message 2014 (Mandarin)
Watch more
National Day Message 2013 (Tamil)