National Day Message 2019 (Tamil)
SM Lee Hsien Loong
Economy
Education
Infrastructure
Jobs and productivity
8 August 2019
Minister for Communications and Information S Iswaran delivered Prime Minister Lee Hsien Loong's National Day Message 2019 in Tamil. The message was recorded at Jewel Changi Airport and telecast on 8 August 2019.
This article has been migrated from an earlier version of the site and may display formatting inconsistencies.
தேசிய தினச் செய்தி 2019
என் சக சிங்கப்பூரர்களே,
வணக்கம்
இந்த ஆண்டு, நாம் நமது இருநூற்றாண்டு நிறைவை நினைவுகூருகிறோம். நமது பள்ளிகள், சமூகக் குழுக்கள், சமய அமைப்புகள், வர்த்தகங்கள் ஆகியவை அவற்றின் சொந்த வரலாற்றைச் சொல்ல, நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளன. நம்மில் பலர் Fort Canning-இல் உள்ள இருநூற்றாண்டு நிறைவு அனுபவத்தால் அசந்துபோயிருப்போம். அது, சிங்கப்பூர் வரலாற்றின் முக்கியச் சம்பவங்களைத் தெளிவாகச் சித்திரிக்கிறது.
இந்த நடவடிக்கைகள் சிங்கப்பூரின் நீண்டகால வரலாற்றை நமக்கு நினைவுபடுத்துகின்றன. ஒரு தேசமாகும் நமது பயணத்தில் பல கலாசாரங்களையும், பாரம்பரியங்களையும் அரவணைத்துக் கொண்டுள்ளோம். நாம் பல மேடு பள்ளங்களைக் கடந்துவந்துள்ளோம்.
இந்த ஆண்டு, நமது பொருளியல் மெதுவடைந்துள்ளது. உலகளாவிய தேவையும் அனைத்துலக வர்த்தகமும் வலுவிழந்துள்ளன. குறிப்பாக, மின்னியல் துறையோடு உற்பத்தித் துறையும் வர்த்தகம் சார்ந்த சேவைகளும் பாதிப்படைந்துள்ளன. ஆனால், மற்ற துறைகளில் வளர்ச்சி நன்றாக உள்ளது. மெதுவடைவு நமக்குப் புதிதல்ல. இதையும் நாம் சமாளிப்போம். வளர்ச்சியைத் தூண்டும் நடவடிக்கைகள் தேவைப்பட்டால், அதைச் செய்ய அரசாங்கம் தயாராக இருக்கிறது.
உலகம் சவால்மிக்க காலகட்டத்தில் இருக்கிறது. நாமும் கடுமையான சவால்களை எதிர்நோக்குகிறோம். அவற்றுள் ஒன்று, பொருளாதாரத்தின் நிச்சயமற்ற சூழல். இரண்டு, பெரிய நாடுகளுக்கு இடையே அதிகரித்துவரும் விரிசல்கள். மூன்று, பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள மிரட்டல்.
இந்தப் பிரச்சினைகளுக்கு சிங்கப்பூர் விதிவிலக்கல்ல. பொருளாதார நிலையில் இவை வர்த்தகத்தையும் முதலீடுகளையும் பாதிக்கும். எனவே முற்றிலும் மாறுபட்ட எதிர்காலத்துக்கு நம்மை நாம் தயார் செய்துகொள்ளவேண்டும்.
நமது கடந்தகாலம் நமக்கு நம்பிக்கை அளிக்கின்றது. சோதனைகளும் துயரங்களும் இருந்தபோதிலும் நாம் ஒன்றாகச் செயல்பட்டு அவற்றைச் சமாளித்து மீண்டுவந்துள்ளோம். உலகம் ஒவ்வொரு முறையும் மாறியபோது நாம் தொடர்ந்து முன்னேறினோம். காரணம், நமது பொருளாதாரம், திறன்கள், நகரம் ஆகியவற்றைப் புதுப்பித்துக்கொண்டு நம்மால் மீண்டும் தழைத்தோங்க முடிந்தது.
நமது தொழில்துறைகளை மாற்றியமைப்பதில் நல்ல முன்னேற்றம் கண்டுவருகிறோம். விமானத்துறை, சுகாதாரப் பராமரிப்பு, நிதித் தொழில்நுட்பச் சேவைகள் நல்ல வளர்ச்சி கண்டுவருகின்றன. துடிப்புமிக்க ஆசியாவின் தேவைகளைப் பூர்த்திசெய்ய நமது துறைமுகமும் விமான நிலையமும் விரிவடைகின்றன. சுற்றுப்பயணிகளை ஈர்க்க நமது இரண்டு ஒருங்கிணைந்த உல்லாசத் தலங்களும் விரிவாக்கம் காண்கின்றன. தொழில்நுட்பமும் புதிய தொழில்களும் செழித்தோங்குகின்றன. தொழில்முனைவர்களையும் நிறுவனங்களையும் வலுப்படுத்தி அனைத்துலகச் சந்தைக்குள் விரிவடைய அரசாங்கம் உதவுகிறது.
நமது ஊழியர்களின் திறன்களை மேம்படுத்தும் முயற்சிகளிலும் நாம் நல்ல முன்னேற்றமும் கண்டுவருகிறோம். பல்லாயிரம் சிங்கப்பூரர்கள் தங்கள் திறனை வளர்த்துக்கொள்ளவும் புதிய வேலைகளுக்குத் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளவும் SkillsFuture உதவுகிறது. இதுபோன்ற திட்டங்கள் நமது நீண்டகாலச் சவால்களையும் உடனடிப் பின்னடைவையும் கடந்துசெல்ல உதவும்.
தொடர்ந்து நமது மக்கள்மீது அதிகமாக முதலீடு செய்கிறோம். இதனால், நாம் ஒவ்வொருவரும் நமது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும், புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள முடிகிறது. ஆனால், இது ஒரு கூட்டு முயற்சி. பெற்றோர் சரியான பண்புகளுடன் பிள்ளைகளை வளர்க்கவேண்டும். ஒவ்வொரு குடிமகனும் தனது ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்தி சிங்கப்பூருக்குப் பங்களிக்கவும் கனவுகளைத் தொடரவும் நமது அரசாங்கம் ஆதரவு வழங்கும்.
குறைந்த, நடுத்தர வருமான குடும்பங்களுக்குக் கல்வியைக் கட்டுப்படியானதாக வைத்திருக்கத் திட்டமிட்டுள்ளோம். குறிப்பாக, பாலர் கல்வியிலும், உயர் கல்வியிலும். மூத்த சிங்கப்பூரர்களின் சுகாதாரப் பராமரிப்புக்கும் ஓய்வுகாலத் தேவைகளுக்கும் உதவி வழங்குகிறோம். தொடர்ந்து வேலைசெய்ய விரும்புவோருக்கு ஓய்வு வயதையும் மறுவேலைவாய்ப்பு வயதையும் உயர்த்துவோம். இது குறித்து, நான் தேசிய தினக் கூட்ட உரையில் மேலும் பேசுவேன்.
நாம் தொடர்ந்து நமது நகரைப் புதுப்பிக்கவேண்டும். இங்கு வரும் வெளிநாட்டினர் நமது வீடமைப்புப் பேட்டைகள், முக்கிய அடையாளங்கள், பசுமையான பூங்காக்கள் என ஒவ்வொன்றும் மிகக் கவனமாகப் பராமரிக்கப்படுவதைப் பார்த்து வியக்கின்றனர். இந்தத் தீவு, கண்ணைக் கவரும் ஓர் மின்னும் வைரம். நான் இப்போது இருக்கும் சாங்கி விமான நிலையத்தின் Jewel அதற்கு ஓர் உதாரணம்.
Jewel- அழகிய தோட்டங்கள், கண்கவர் நீர்வீழ்ச்சி, வித்தியாசமான அனுபவங்கள் நிறைந்த ஓர் இடம். ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு சாங்கி விமான நிலையம் கடும் போட்டியை எதிர்நோக்கியது. அப்போதே Jewel-க்கான திட்டத்தை சாங்கி குழு வகுக்கத் தொடங்கிவிட்டது. இன்று அது சிங்கப்பூரர்களையும், இங்கு வரும் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.
உலகிற்கான நமது புதிய நுழைவாயிலைக் கண்டு நாம் மிகவும் பெருமைப்படுகிறோம். இது, இந்த நாட்டின் சிறப்பை நமக்கு நினைவூட்டுகிறது. நம்மை மீண்டும் புதுப்பித்துக் கொள்வதற்கான துணிச்சலும், புத்தாக்கமும், ஆற்றலும் நம்மிடம் இருப்பதை இது காட்டுகிறது. மற்ற நகரங்களும் விமான நிலையங்களும் Jewel-க்கு ஈடாகத் திட்டமிட்டு வருகின்றன. இருப்பினும், நாம் துணிவோடு புதியதைச் செய்ய முயற்சி எடுத்தோம்; அதையும் முதலில் செய்தோம்.
நம் நகரை புதுப்பிக்கும் பல முயற்சிகளில் ஒன்றுதான் Jewel. சாங்கி விமான நிலையத்தின் ஐந்தாம் முனையம், துவாஸ் பெருந்துறைமுகம், ஜூரோங் லேக் வட்டாரம், Paya Lebar விமானத் தளத்தின் மறுமேம்பாட்டுத் திட்டம். இவை அனைத்தும் நீண்டகாலத்துக்கு நாட்டைத் தொடர்ந்து மேம்படுத்தி சிங்கப்பூரர்களுக்குப் புதிய வாய்ப்புகளை வழங்கும்.
முன்னிலையில் இருக்க, நாம் தொடர்ந்து புத்தாக்கச் சிந்தனைகளைச் செயல்படுத்தத் தயாராய் இருக்க வேண்டும். நம் தீவின் அளவு நம் வாய்ப்புகளைக் கட்டுப்படுத்துவதில்லை; கட்டுப்படுத்தவும் கூடாது. நமது அறிவுக்கூர்மையும், துணிச்சலுமே நமது வாய்ப்புகளை நிர்ணயிக்கின்றன. ‘திரைகடலோடி திரவியம் தேடினர்’ நம் முன்னோர்கள்.
அவர்களைப் போலவே நாமும் துணிச்சல்மிக்கவர்களாக இருப்போம். போரையும் மற்ற பல இன்னல்களையும் சமாளித்து வாழ்க்கையை அமைத்துக்கொண்ட நமது பெற்றோர், தாத்தா பாட்டிகள் போன்று உரம் வாய்ந்தவர்களாக இருப்போம். நிச்சயமற்ற உலகில் செழித்தோங்க நாம் மேலும் வலுப்பெறுவோம். புதிய சாத்தியங்களை ஆராய நமக்கு நாமே சவால்கள் விடுப்போம். நமது தீவின் கதையில் மேலும் பல அத்தியாயங்களை எழுதுவோம். ஒன்றிணைந்து பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க இந்த தேசிய தினத்தில் உறுதிகொள்வோம்.
தேசிய தின வாழ்த்துகள்!
Videos and transcripts
National Day Message 2019 (Malay)
National Day Message 2019 (Mandarin)
Watch more


National Day Message 2019 (Malay)

National Day Message 2019 (Mandarin)
Watch more

National Day Message 2018 (Tamil)
