National Day Message 2022 (Tamil)
Prime Minister's Office
Economy
Finance
Foreign affairs
Founding Fathers
Governance
Healthcare
Infrastructure
Jobs and productivity
Social safety nets
Trade
8 August 2022
Minister for Transport S Iswaran delivered Prime Minister Lee Hsien Loong's National Day Message 2022 in Tamil. The message was recorded at Gardens by the Bay and telecast on 8 August 2022.
This article has been migrated from an earlier version of the site and may display formatting inconsistencies.
என் சக சிங்கப்பூரர்களே, வணக்கம்!
கொவிட்-19
நாம் கொவிட்-19 நோய்ப்பரவலுடன் இரண்டரை ஆண்டுகளாகப் போராடி எவ்வளவோ சிரமங்களை எதிர்கொண்டோம். ஆனால் ஒன்றுபட்ட மக்களாக அதனைக் கடந்து இப்போது நல்ல நிலையில் இருக்கிறோம். நம் மக்களில் பெரும்பாலோர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். நமது மருத்துவமனைகளும் மருந்தகங்களும் அதிக நோயாளிகளைச் சந்தித்தாலும் நிலைமையைச் சமாளிக்கின்றன. புதிய ரகக் கிருமியால் அதிகமான கொவிட் சம்பவங்கள் பதிவாகின்றன. எனினும் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு நாம் திரும்பவில்லை.
கொவிட்-19 நோய்ப்பரவலுக்கு எதிராகப் போராடிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. நம் சமுதாயம் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையே இந்த வெற்றிக்குக் காரணம். அரசாங்கம் சொன்ன ஆலோசனைகளைக் கேட்டு நடந்தீர்கள். சிரமம் என்றபோதிலும் பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளைப் பின்பற்றினீர்கள். முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டீர்கள்.
ஆனால் இவை எல்லாவற்றையும்விட முக்கியமானவை சிங்கப்பூரர்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கை. சக குடிமக்களின் நலனில் அக்கறை காட்டி எல்லா வகைகளிலும் ஆதரவு கொடுத்தீர்கள். இந்த ஆதரவும் உங்கள் நம்பிக்கையும்தான் நமக்கு வேண்டிய பலத்தைக் கொடுத்தது.
கொவிட்-19 ஒரு தலைமுறை முழுவதையும் சோதனைக்குள்ளாக்கியது. நாம் அதிலிருந்து வலுவுடன் மீண்டு அதிக வலிமையாகவும் ஒற்றுமையாகவும் இருக்கிறோம். இந்த ஒற்றுமை இனிவரும் காலத்திற்கு மிகவும் முக்கியம்.
உலக அரசியல் சூழல்
நமக்கு முன்னே இருக்கும் பாதை கரடுமுரடானது. அமெரிக்காவும் சீனாவும் எதிரும் புதிருமாக இருக்கின்றன. இரண்டுக்கும் இடையில் இப்போதைக்குச் சமரசம் ஏற்படாது என்றே தோன்றுகிறது. சொல்லப்போனால் இந்த நிலைமை மோசமடையாமல் இருந்தாலே போதும். ஆனால் தவறுகள் எளிதில் ஏற்படலாம்.
ரஷ்யா, உக்ரேன் மீது படையெடுத்ததால் பல பிரச்சினைகள் எழுந்துள்ளன. அணுவாற்றல் கொண்ட ரஷ்யாவுக்கு எதிராகப் பல நாடுகள் திரும்பியுள்ளன; குறிப்பாக, அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும். மிக ஆழமான இந்தப் பிரச்சினைக்குச் சுலபமாகத் தீர்வுகண்டுவிட முடியாது. ரஷ்யாவின் நடவடிக்கை உலகநாடுகளின் அரசுரிமைக் கொள்கைகளுக்குப் புறம்பானது. இந்தக் கொள்கைகள் சிங்கப்பூருக்கு மிகவும் முக்கியமானவை. நம் நாட்டின் பாதுகாப்புக்கும் உயிர்வாழ்வுக்கும் இந்த அரசுரிமைக் கொள்கைகள் ஆணிவேர் போன்றவை. மேலும் ரஷ்யப் படையெடுப்பு ஆசிய பசிபிக் வட்டாரத்தின் பாதுகாப்பையும் பாதிக்கும். இந்த வட்டாரத்தின் பதற்றம் நம்மைச் சூழக்கூடும்.
இதற்கு நாம் என்ன செய்யலாம்? ஒற்றுமை! அதுதான் சிங்கப்பூரின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படை. சர்ச்சைக்குரிய உலகின் சவால்களைச் சமாளிக்க அதுவே வழி. முழுமைத் தற்காப்பில் நாம் கவனம் செலுத்தவேண்டும். வலிமையான சிங்கப்பூர் ஆயுதப்படையைக் கட்டிக்காக்கவேண்டும். இந்த வட்டாரம் முன்புபோல் அமைதியாகவும் நிலையாகவும் வருங்காலத்திலும் இருக்கும் என்று சொல்ல முடியாது. எனவே நாம் எதற்கும் தயாராக இருக்கவேண்டும்.
பொருளாதாரச் சூழல்
இப்போது உடனடியாகக் கவனிக்கவேண்டியவை நம் பொருளியல் சவால்கள். கிருமிப்பரவலிலிருந்து பொருளியல் மீண்டுவந்திருந்தாலும், வளர்ச்சி எதிர்பார்த்ததுபோல் இல்லை. ரஷ்யப் படையெடுப்புக்கு முன்னரே கிருமிப்பரவலால் விநியோகத் தொடர் பாதிக்கப்பட்டிருந்தது; விலைவாசியும் உயர்ந்துகொண்டிருந்தது. அதனால் உலகெங்கிலும் உணவு, எரிசக்தியின் விலை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
வாழ்க்கைச் செலவினமே உங்கள் முக்கியக் கவலை என்பது எங்களுக்குத் தெரியும். விலைவாசி உயர்வைச் சமாளிப்பதற்கு அரசாங்கம் தேவையான உதவிகளைச் செய்கிறது. அதிக உதவி தேவைப்படுவோருக்குப் பல ஆதரவுத் தொகுப்புத் திட்டங்களை அறிவித்திருக்கிறோம். உணவும் இதர அத்தியாவசியப் பொருள்களும் கிடைப்பதை உறுதிசெய்ய பல இடங்களிலிருந்து பொருள்களைத் தருவிக்கிறோம்; கையிருப்பிலும் கவனம் செலுத்துகிறோம். நிலைமை மோசமானால் இன்னும் செய்யத் தயாராக இருக்கிறோம். நமது நிறுவனங்களும் சமூகக் குழுக்களும் அவற்றின் சொந்த ஆதரவுத் திட்டங்களைச் செயல்படுத்துகின்றன. இது மகிழ்ச்சியைத் தருகிறது. ஒருவருக்கொருவர் உதவும்போது சிங்கப்பூர் ஒன்றிணைந்து மேலும் வலிமைபெறும்.
நாம் நமது சிங்கப்பூர் வெள்ளியை வலுப்படுத்தியுள்ளோம்; பொருள் இறக்குமதியால் ஏற்படும் பணவீக்கத்தைக் குறைப்பதற்காக. ஆனால் அனைத்துலகப் பொருளாதாரச் சூழல் மாறிவிட்டது. குறைவான பணவீக்கமும் வட்டி விகிதமும் மீண்டும் திரும்புமா என்பது கேள்விக்குறியே. இந்தச் சூழலை எதிர்கொள்ள சிங்கப்பூர் அதன் தொழில்துறையை மாற்றியமைக்கவேண்டும். ஊழியர்களின் ஆற்றலை மேம்படுத்தி உற்பத்தித் திறனை அதிகரிக்கவேண்டும். அப்போதுதான் சம்பளம் பணவீக்கத்தைவிட அதிகமாக உயரும்.
நமது எதிர்காலத்தைப் பாதுகாத்தல்
இந்த உடனடிப் பிரச்சினைகளோடு நாம் நீண்டகால இலக்குகளையும் கவனிக்கவேண்டும். நான் Gardens by the Bay எனப்படும் கரையோரப் பூந்தோட்டத்திலிருந்து பேசுகிறேன். இந்த ஆண்டு கரையோரப் பூந்தோட்டம் அதன் பத்தாம் ஆண்டுநிறைவைக் கொண்டாடுகிறது. இந்த இடம் முன்பு கடலாக இருந்தது. இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள நிலத்தை மீட்டு மரினா பே வட்டாரத்தை உருவாக்க சுமார் 50 ஆண்டுக்கு முன்னர் முடிவெடுத்தோம். இங்கே அலுவலகம், குடியிருப்புக் கட்டடம் மட்டும் இருந்தால் போதாது; எழில் கொஞ்சும் பசுமை நிறைந்திருக்கவேண்டும் என்று நினைத்தோம். அதில் உருவானதுதான் இந்தக் கரையோரப் பூந்தோட்டம். 2012ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூரர்களின் பெருமிதத்திற்கும் மகிழ்ச்சிக்கும் உரிய இடமாக இது விளங்குகிறது. விரைவில் பே ஈஸ்ட் தோட்டத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கிவிடும். அங்குதான் சிற்பிகள் நினைவகம் அமையவிருக்கிறது.
சிங்கப்பூரில் இப்படித்தான் நாம் திட்டமிடுகிறோம். துணிந்து கனவுகாணவேண்டும். அடுத்தகட்ட இலக்குகளில் கவனம் செலுத்தவேண்டும். மேம்பட்ட தீர்வுகளையும் புதிய வாய்ப்புகளையும் ஆராயவேண்டும். அடுத்த 5 அல்லது 10 ஆண்டுகள் என்று இல்லாமல் அடுத்த 30 அல்லது 50 ஆண்டுகளுக்கு அப்பால் முன்னோக்கித் திட்டமிடவேண்டும்.
அதனால்தான் நகரச் சீரமைப்பு ஆணையம் சென்ற ஆண்டு நீண்டகாலத் திட்டம் குறித்து மறுஆய்வைத் தொடங்கியது. நமது தீவை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டுசெல்லும் யோசனைகளை மக்களிடம் கேட்டறிந்தது. நகரச் சீரமைப்பு ஆணைய நிலையத்தில் தற்போது ஒரு கண்காட்சி நடைபெறுகிறது. அதில் வருங்காலத் திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. புதிய சமூகங்களையும் பசுமை இடங்களையும் உருவாக்கும் கருத்துகளும் உள்ளன. நமது கனவுகளைப் பிரதிபலிக்கும் இந்தக் கருத்துகள் நமது வேர்களை வலுப்படுத்தும். நாம் வாழும், வேலைசெய்யும், விளையாடி மகிழும் முறையை மாற்றியமைக்கும். சிங்கப்பூரர்கள் இன்னும் ஏராளமானவற்றை எதிர்பார்க்கலாம்.
இந்த நீண்டகாலத் திட்டங்கள், உள்கட்டமைப்பு பற்றியது மட்டுமல்ல. பொருளியல் வளர்ச்சியையும் சமுதாயத்தின் தாக்குப்பிடிக்கும் தன்மையையும் நாம் கட்டிக்காக்கவேண்டும். மக்களின் முழு ஆற்றலை வெளிக்கொண்டுவரவேண்டும். நமது எதிர்காலத் தலைமுறையினர் வாழையடி வாழையாக வாழ்வதற்கு ஒளிமயமான வருங்காலத்தை உருவாக்கவேண்டும். இந்த இலக்கை அடைய ஒவ்வொரு தலைமுறையும் தாங்கள் பெற்றுக்கொண்டதைவிட மேம்பட்ட சிங்கப்பூரை உருவாக்கத் துணிச்சலுடன் பாடுபடவேண்டும்.
துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் நான்காம் தலைமுறைக் குழுவினரும் ‘முன்னேறும் சிங்கப்பூர்’ திட்டத்தைத் தொடங்கியுள்ளனர். சமுதாயக் கட்டமைப்பைப் புதுப்பிப்பதும் நமது வருங்காலத்தைத் திட்டமிடுவதும் அதன் நோக்கம். நீங்கள் அதில் துடிப்பாகக் கலந்துகொண்டு உங்கள் யோசனைகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். நமது நாட்டின் அடுத்தகட்டப் பாதையை வகுக்க உங்கள் பங்கை ஆற்றுங்கள்.
முடிவுரை
‘துணிந்தவனுக்குக் கடல் ஆழம் முழங்கால் மட்டுமே’ என்பார்கள். தடைகள் எதுவாயினும் அஞ்ச வேண்டாம். சாதகமற்ற சூழலைக் கடந்து நமது கனவுகள் மெய்ப்படவேண்டும். அதற்காக ஒற்றுமையாகவும் உறுதியாகவும் இருந்து சவால்களை எதிர்கொள்வோம். நமது தேசத்தின் அமைதியையும் பாதுகாப்பையும் கட்டிக்காப்போம். வளமான பொருளியலை உறுதிசெய்வோம். அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்குவோம். சிங்கப்பூரர்களாகப் பெருமிதம்கொள்வோம்!
அனைவருக்கும் இனிய தேசிய தின நல்வாழ்த்துகள்!
Videos and transcripts


National Day Message 2022 (Malay)

National Day Message 2022 (Mandarin)
Watch more

National Day Message 2021 (Tamil)

National Day Message 2020 (Tamil)
