National Day Message 2017 (Tamil)
SM Lee Hsien Loong
Economy
Governance
Multi-racial and multi-religious society
8 August 2017
Minister for Trade and Industry (Industry) S Iswaran delivered Prime Minister Lee Hsien Loong's National Day Message 2017 in Tamil. The message was recorded at Bay East Garden at Gardens by the Bay and telecast on 8 August 2017.
This article has been migrated from an earlier version of the site and may display formatting inconsistencies.
என் சக சிங்கப்பூரர்களே,
வணக்கம்.
நான் இப்போது Bay East பூந்தோட்டத்தில் இருக்கிறேன். இது கரையோரப் பூந்தோட்டங்களின் கிழக்குப் பகுதியில் உள்ளது.
சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்த காலத்தில், இது திறந்த கடற்பகுதியாக இருந்தது. அதனைக் கரையில் நின்று பார்த்த நமது முன்னோடித் தலைவர்கள், கடலை ஒரு தடையாகப் பார்க்காமல், அதில் உள்ள வாய்ப்புகளையும் உணர்ந்தனர். அவர்கள் நம் நகரத்தில் புதிய துடிப்புமிக்க மையப் பகுதியை உருவாக்க நினைத்தனர்; ஒரு பரபரப்பான வர்த்தக, குடியிருப்பு மையத்தைக் கற்பனை செய்தனர்.
எனவே, பல ஆண்டுகள், நாம் Marina நிலப்பகுதிகளை மீட்டு, அந்தக் கனவை நனவாக்கினோம். இன்று, நமக்கு Marina South-இல் புதிய நிதி வட்டாரம், Marina Barrage அணைக்கட்டு, கரையோரப் பூந்தோட்டங்கள் உள்ளன. உலகமே போற்றி ரசிக்கும் Marina Bay பகுதியின் எழில் தோற்றத்தில் நாம் பெருமைகொள்கிறோம்.
Marina Bay பற்றிய சிந்தனை உருவான காலத்தில், பல உடனடிச் சவால்களை சிங்கப்பூர் சமாளிக்க வேண்டியிருந்தது. சிங்கப்பூர் ஆயுதப் படையை மேம்படுத்துவது, முதலீடுகளை ஈர்த்து வேலைகளை உருவாக்குவது, மக்களுக்கு வீட்டுவசதி அளிப்பது, நம் பிள்ளைகளுக்குக் கல்விவசதி அளிப்பது முதலியவை அவற்றில் அடங்கும். இருப்பினும், இந்த உடனடிச் சவால்களைத் தாண்டி, எதிர்காலத்திற்கும் ஆயத்தமாகவேண்டும் என்பதை நமது தலைவர்களும் மக்களும் அறிந்திருந்தனர். அவர்களின் தொலைநோக்குப் பார்வையால் கிடைத்திருக்கும் பலன்களை இப்போது நாம் அனுபவிக்கிறோம்.
52 ஆண்டுகளாக, நாம் உள்நாட்டு, வெளிநாட்டு விவகாரங்களில் ஆழ்ந்த கவனம் செலுத்திவருகிறோம். உலகம் நிச்சயமற்ற சூழலில் உள்ளது. உலகின் பல பகுதிகளிலும், சிங்கப்பூருக்கு மிக அருகிலும் அடிக்கடி தாக்குதல்கள் நடப்பதால், பயங்கரவாதம் ஒரு பெரும் மிரட்டலாக இருக்கிறது. நமது வளர்ச்சியின் முக்கிய உந்துசக்தியாக இருக்கும் அனைத்துலக வர்த்தகம், வர்த்தகத் தடைக் கொள்கையால் பாதிக்கப்படலாம். நமது பொருளியலை மேம்படுத்தி வருகிறோம். நமது மாணவர்களும் ஊழியர்களும் புதிய திறன்களில் தேர்ச்சிபெற்று வருகிறார்கள். தொழில்நுட்பத்திற்கு ஏற்ப அவர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்கிறார்கள்.
அரசாங்கம் இந்த விவகாரங்களைக் கையாள்வதில் முன்னேற்றம் கண்டுவருகிறது. பயங்கரவாதத்திலிருந்து நம்மைப் பாதுகாக்க, நாம் விழிப்புநிலையை அதிகரிக்கிறோம்; இன நல்லிணக்கத்தை வலுப்படுத்துவது முக்கியப் பணியாக உள்ளது. எதிர்காலப் பொருளியலுக்கு, தொழில்துறைகளை உருமாற்ற, நாங்கள் வர்த்தகங்களுடனும் ஊழியர்களுடனும் இணைந்து பணியாற்றுகிறோம். நாங்கள் இந்த ஆண்டு சுமார் 2.5 விழுக்காட்டு வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம்; இது, சென்ற ஆண்டைவிட அதிகம்.
தற்போது நமக்கு இருக்கும் இந்தப் பிரச்சினைகளை நாம் சமாளித்துவரும் அதேவேளையில், தொலைநோக்குடன், எதிர்காலத்திற்காக நாம் தயார்படுத்திக்கொள்ளவேண்டும். நமக்கு நீண்ட காலம் நன்மை அளிக்கக்கூடிய 3 விஷயங்களைப் பற்றி நான் உங்களுடன் இந்த ஆண்டு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்: பாலர்பள்ளி, நீரிழிவு நோயைத் தடுக்கும் முயற்சி, ஓர் அறிவார்ந்த தேசம். இவை, நாம் வாழ்வில் சரியான தொடக்கத்தைப் பெறவும், ஆரோக்கியமாக வாழவும், விவேகமாகச் செயல்படவும் வகைசெய்யும்.
முதலாவதாக, நாம், புதிய உலகிற்காக நம் அடுத்த தலைமுறையைத் தயார்படுத்தவேண்டும். ஒவ்வொரு சிங்கப்பூர் பிள்ளைக்கும் வாழ்வில் ஒரு வலுவான தொடக்கத்தையும் ஒளிமயமான எதிர்காலத்தையும் அளிக்க விரும்புகிறோம். பாலர் பள்ளிகளில் முதலீடு செய்கிறோம், காரணம், பாலர் கல்வி, பிள்ளைகளின் ஏட்டுக்கல்வியில் மட்டுமின்றி, அவர்கள் வாழ்விலும் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. பாலர் பள்ளிகளில் அதிக இடங்களை உருவாக்குவோம்; பாலர்பள்ளியின் தரத்தை உயர்த்துவோம்; பாலர்பள்ளி ஆசிரியர் தொழிலை மேம்படுத்துவோம்.
இளம் தம்பதியர் குடும்பத்தைத் தொடங்க, ஆதரவும் ஊக்கமும் அளிக்க விரும்புகிறோம். வேலை செய்யும் பெற்றோர் தங்கள் இளம் பிள்ளைகள் நம்பிக்கையானவர்களிடம் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று மனநிம்மதி கொள்ள விரும்புவார்கள். அதிகமான, மேம்பட்ட பாலர்பள்ளிகள் பெற்றோரின் மனச்சுமையைக் குறைக்க உதவும்.
இரண்டாவதாக, சிங்கப்பூரர்கள் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ நாம் விரும்புகிறோம். நம்மிடம் சிறந்த மருத்துவ வசதிகள் இருந்தாலும், நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். இன்று சிங்கப்பூரர்களின் ஆயுள் காலம் கூடியுள்ளது, ஆனால், நம் முதியோர் தங்கள் வாழ்வின் இறுதிக் காலத்தில் சராசரியாக 8 ஆண்டுகள் உடல்நலக் குறைவால் அவதிப்படுகிறார்கள். இது அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் ஒரு சுமையாக இருக்கலாம்.
முதுமைக் காலத்தில் உடல்நலக் குறைவுக்கு ஒரு முக்கியக் காரணம் நீரிழிவு நோய். 60 வயதுக்கு மேற்பட்ட மூன்று பேரில் ஒருவருக்கு அந்த நோய் உள்ளது. தொடக்கத்தில், நீரிழிவு நோய் வெளியில் புலப்படாது. ஆனால், காலப்போக்கில், பார்வை இழப்பு, இதய நோய், சிறுநீரகச் செயலிழப்பு, கை கால் இழப்பு என்று அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும்.
இதனால்தான், நீரிழிவு நோயைத் தடுக்க நாம் முழு முயற்சி எடுக்கவேண்டும். இது, அரசாங்கக் கொள்கைகளையும் மருத்துவமனை வசதிகளையும் பற்றியது மட்டுமல்ல. நாம் ஒவ்வொருவரும் நம் சொந்த உடல்நலத்திற்குப் பொறுப்பேற்கவேண்டும். நம் வாழ்க்கை முறையையும் உணவுப் பழக்கத்தையும் மாற்ற முயற்சி எடுக்கவேண்டும்; அடிக்கடி உடற்பயிற்சி செய்யவேண்டும்; சுவை பானத்திற்குப் பதிலாகத் தண்ணீர் அருந்தவேண்டும். இது இளம் வயதிலேயே தொடங்கவேண்டும். நீரிழிவு நோயைத் தவிர்க்க, ஆரோக்கியமாக இருக்க, மகிழ்ச்சியாக வாழ அதுவே வழி.
மூன்றாவதாக, தகவல் தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்தி, சிங்கப்பூரை, வாழ்வதற்கும், வேலை செய்வதற்கும் தலைசிறந்த இடமாக்க விரும்புகிறோம். இதனால்தான் நாம் அறிவார்ந்த தேசமாய்த் திகழ இலக்கு கொண்டுள்ளோம். நம்மிடம் மக்களைவிட அதிகமான திறன்பேசிகள் உள்ளன. நாம் மின்னியல் அறிவு நிறைந்த சமுதாயமாக இருக்கிறோம். ஆனால், நாம் மேலும் முன்னேறவேண்டும்.
மற்ற நாடுகள், ரொக்கம் பயன்படுத்துவதைக் குறைக்க மின்கட்டண முறையைக் கையாள்கின்றன. பொதுப் பாதுகாப்பை மேம்படுத்த உணர்கருவிக் கட்டமைப்புகளைப் பயன்படுத்துகின்றன. பொதுச் சேவைகளை மேம்படுத்த பெரிய அளவிலான தகவல் தொகுப்புகளைப் பயன்படுத்துகின்றன. நாம் அவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டு முன்னேறிச் செல்லவேண்டும். நடைமுறைச் செயற்பாடுகளுக்குத் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால், சிங்கப்பூரர்களுக்கு நாம் அதிகமான வாய்ப்புகளை உருவாக்க முடியும், நம் வாழ்க்கையை மேம்படுத்த முடியும், நம் நாட்டை உற்சாகம் நிறைந்த இடமாக்க முடியும்.
நான் இந்த ஆண்டின் தேசிய தினக் கூட்ட உரையில், இந்த மூன்று விஷயங்களைப் பற்றி மேலும் பேசுவேன். நம் முன்னோர்கள் நமக்கு உருவாக்கியது போலவே, நாம் அடுத்த தலைமுறைக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கவேண்டும். இது, சிங்கப்பூருக்கு எப்படி சாத்தியமானது என்பதையும் நம் தலைமுறை எவ்வாறு இதைத் தொடர்ந்து செய்யமுடியும் என்பதையும் இங்கு Bay East-இல் நம்மால் பார்க்கமுடிகிறது.
அதனால்தான் முன்னோடித் தலைவர்களின் நினைவுச்சின்னம், Bay East-இல் அமையவேண்டும் என அதற்கான குழு முன்மொழிந்தபோது, பெரும்பான்மையோர் அதற்கு ஆதரவு தெரிவித்தனர். இது ஒரு விவேகமான முடிவு. அரசாங்கம் இதை ஏற்றுக்கொண்டுள்ளது. இங்கிருந்து அக்கரையைப் பார்க்கும்போது, நமது முன்னோடித் தலைவர்களின் நற்பண்புகள் நினைவுக்கு வரும், அவர்கள் உருவாக்கியதை நாம் காணலாம், சிங்கப்பூரைத் தொடர்ந்து மேம்படுத்தலாம். திரு Lee Kuan Yew சொன்னது போல்:
“இறுதியில், ஓர் அரசாங்கமாக, நாம் யாருக்குப் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறோம்? முந்தைய தலைமுறைக்கு அல்ல, இன்றைய தலைமுறைக்கு மட்டுமல்ல, எதிர்காலத் தலைமுறைக்குத்தான்.”
இதுதான் சிங்கப்பூர் உணர்வு. முன்னோக்கிப் பார்ப்போம். முன்கூட்டியே திட்டமிடுவோம். முன்னிலையில் இருப்போம். இப்படித்தான் நாம் இதுவரை வெற்றிபெற்றுள்ளோம். இதையே வருங்காலத்திற்கும் தொடர்வோம். நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்த ஒன்றுசேர்ந்து செயல்படுவோம்.
இனிய தேசிய தின வாழ்த்துகள். வணக்கம்.
Videos and transcripts


National Day Message 2017 (Mandarin)

National Day Message 2017 (Malay)
Watch more

National Day Message 2018 (Tamil)
National Day Message 2016 (Tamil)
