National Day Message 2018 (Tamil)
Prime Minister's Office
Education
Families and communities
Foreign affairs
Healthcare
Housing
8 August 2018
Minister for Communications and Information S Iswaran delivered Prime Minister Lee Hsien Loong's National Day Message 2018 in Tamil. The message was recorded at Kampung Admiralty and telecast on 8 August 2018.
This article has been migrated from an earlier version of the site and may display formatting inconsistencies.
என் சக சிங்கப்பூரர்களே, வணக்கம்.
ஒவ்வோர் ஆண்டும், ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி அன்று, ஒரு தேசமாக நம் முன்னேற்றத்தைக் கொண்டாடுகிறோம்; ஒன்றுபட்ட மக்களாக இருக்கவேண்டும் என்று உறுதிமொழி எடுக்கிறோம். ஐம்பத்து மூன்றே ஆண்டுகளில், சிங்கப்பூர் நிறைய சாதித்துள்ளது. இன்று, நாம் துடிப்பும் செழிப்பும் மிக்க ஒரு நகர நாடாகத் திகழ்கிறோம். நம் பொருளியல் தொடர்ந்து சீரான வளர்ச்சி காண்கிறது. அண்மை ஆண்டுகளில், அது 3 முதல் 3.5 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது. உற்பத்தித்திறன் மேம்படுகிறது; வருமானங்கள் உயர்கின்றன. பிறநாட்டவர் பலரைவிட, சிங்கப்பூரர்கள் மேம்பட்ட வாழ்க்கை வாழ்கின்றனர்.
ஆனால், சிக்கல்கள் எழுவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. கடந்த ஓராண்டாக, பெரிய நாடுகளுக்கு இடையே வர்த்தகப் பதற்றம் மோசமடைந்துள்ளது. இது, அனைத்துலக வர்த்தகம், முதலீடுகள், தொழில் நம்பிக்கை ஆகியவற்றைப் பாதிக்கிறது. இதனால், சிங்கப்பூரின் வளர்ச்சியும் முன்னேற்றமும் பாதிக்கப்படும். வர்த்தகப் பூசல்கள், பெரிய நாடுகளுக்கு இடையிலான நம்பிக்கையைக் குறைத்து, ஒத்துழைப்புக்குத் தடையாக இருக்கும். எனவே, வட்டார மற்றும் அனைத்துலகப் பாதுகாப்பும் பாதிக்கப்படலாம்.
உதாரணத்திற்கு, கொரியத் தீபகற்ப நிலவரம். இரண்டு மாதங்களுக்கு முன்னர், அமெரிக்க அதிபர் Donald Trumpக்கும், வட கொரியத் தலைவர் Kim Jong Unக்கும் இடையே உச்சநிலைச் சந்திப்பு நடைபெற்றது. அதை நாம் வெற்றிகரமாக ஏற்று நடத்தினோம். அந்தச் சந்திப்பால், கொரியப் பதற்றநிலை தணிந்துள்ளது. இருப்பினும், கொரியத் தீபகற்பத்தில் அணுவாயுதங்கள் கைவிடப்பட்டு, அமைதி ஏற்படும் முன்னர், நாம் சமாளிக்க வேண்டிய சவால்கள் பல உள்ளன.
இந்தப் பணியில், ஆசியான் நமக்கு உறுதுணையாக இருக்கிறது. ஆசியானுக்குத் தலைமை ஏற்றிருக்கும் நாம், அண்டை நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த விரும்புகிறோம். மலேசியாவில் பொதுத் தேர்தலுக்குப் பிறகு, புதிய அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளது. இருதரப்பு நன்மை, மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில், மலேசியாவுடன் நல்லுறவைப் பேண முயற்சி செய்வோம். இந்தோனேசியாவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அந்நாட்டுடன் நாம் கொண்டுள்ள விரிவான ஒத்துழைப்பை மேம்படுத்த, தொடர்ந்து அவர்களோடு பணியாற்றுவோம். 5. நம்மைச் சுற்றி நடக்கும் இந்த நிகழ்வுகளை அரசாங்கம் உன்னிப்பாகக் கவனிக்கிறது. வெளிச் சூழல் எப்படி இருந்தாலும், சிங்கப்பூர் சிறந்து விளங்க வேண்டும் என்பதே நம் விருப்பம். நாம், நம் மீள்திறனை வலுப்படுத்தி, புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறோம். சிங்கப்பூரர்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும்; சமூக உதவித் திட்டங்களை வலுப்படுத்த வேண்டும்; மேலும் ஒன்றுபட்ட தேசத்தை உருவாக்க வேண்டும். இதற்காக, அரசாங்கம், கடந்த சில ஆண்டுகளாய், வீடமைப்பு, கல்வி, சுகாதாரப் பராமரிப்புக் கொள்கைகளை மறு ஆய்வு செய்து வருகிறது.
இன்று, நான் Kampung Admiralty-யிலிருந்து உங்களிடம் பேசுகிறேன். Kampung Admiralty, பொது வீடமைப்பின் ஒரு புத்தாக்கம். இது, நம் மூத்த குடிமக்களுக்காக உருவாக்கப்பட்ட ஓர் ஒருங்கிணைந்த வீடமைப்புப் பேட்டை. அவர்கள் சௌகரியமாகவும் பாதுகாப்பாகவும் வசிப்பதற்கு, இங்குள்ள வீடுகளில், கைப்பிடிகள், வழுக்காத தரைக்கற்கள் போன்ற அம்சங்கள் உள்ளன. அது மட்டுமல்ல. பேரங்காடி, மருத்துவ நிலையம், சமூகத் தோட்டம், குழந்தைப் பராமரிப்பு நிலையம், உணவங்காடி நிலையம் போன்ற பல வசதிகளும் இங்கு ஒரே இடத்தில் அமைந்திருக்கின்றன.
Kampung Admiralty-யில், ஒருநாள் என்பது எப்படிப் பட்டதாய் இருக்கும்? இங்கு பல தாத்தா பாட்டிமார்கள் குடியிருக்கின்றனர். அவர்களுடைய பிள்ளைகளும் பேரக்குழந்தைகளும் அருகிலேயே வசிக்கின்றனர். தாத்தா பாட்டிமார், தங்கள் பேரக்குழந்தைகளைப் பார்த்துக்கொள்கின்றனர். அவ்வப்போது உடற்பயிற்சி செய்கின்றனர் அல்லது சமூகத் தோட்டத்திற்குச் சென்று செடிகொடிகள் வளர்க்கின்றனர். அங்கே நண்பர்களைச் சந்திக்கின்றனர். வேலை செய்யும் பிள்ளைகள், மாலையில் வீடு திரும்பியதும், தங்கள் வயதான பெற்றோருடனும் குழந்தைகளுடனும் ஒன்றாய் அமர்ந்து, உணவு அருந்துகின்றனர். சுருக்கமாகச் சொன்னால், Kampung Admiralty, உயர்மாடிக் கட்டடங்கள் கொண்ட ஒரு கம்பம். குடும்பத்தார், நண்பர்கள், அண்டைவீட்டார் ஆகியோர் நெருங்கிப் பழகி, அன்பாக வாழ்கின்றனர். இதைத்தான் நம் முன்னோர் “கூடி வாழ்ந்தால், கோடி நன்மை” என்று கூறினர்.
நாம் ஓர் ஒருங்கிணைந்த சமுதாயமாகத் திகழ, Kampung Admiralty-யைப் போன்ற புத்தாக்கமிக்க வீடமைப்புத் திட்டங்களை HDB தொடர்ந்து உருவாக்கும்.
தற்போதைய வீடமைப்புப் பேட்டைகள் என்னவாகும்? அவை, காலப்போக்கில் பராமரிக்கப்பட்டு, மேம்படுத்தப்படும். முதிய பேட்டைகளின் குத்தகை முடிய இன்னும் பல ஆண்டுகள் உள்ளன. இருந்தாலும், அவற்றை, வசிப்பதற்கு உகந்த இடமாக வைத்திருக்க நாம் இப்போதே சிந்திக்க வேண்டும்.
கல்வியைப் பொறுத்தவரையில், பாலர் பள்ளி இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறோம். சிங்கப்பூர் முழுவதும் குழந்தைப் பராமரிப்பு வசதிகளை விரிவுபடுத்துகிறோம். Kampung Admiralty-யில் உள்ள குழந்தைப் பராமரிப்பு நிலையம் அதற்கு ஓர் உதாரணம். கடப்பாடுமிக்க ஆசிரியர்கள், நல்ல வசதிகள் மூலம், எல்லாப் பிள்ளைகளுக்கும் வாழ்வில் ஒரு வலுவான தொடக்கம் இருக்கும்.
நாடு முழுவதும் உருவாகும் பல புதிய சுகாதார வசதிகளில், இங்குள்ள மருத்துவ நிலையமும் ஒன்று. அது கட்டுப்படியான சுகாதார சேவையை வழங்குகிறது. நம்மிடம் MediShield Life , CHAS, CareShield Life ஆகிய திட்டங்கள் இருக்கின்றன. மருத்துவமனைக் கட்டணங்கள், நீரிழிவு போன்ற நோய்களுக்கான வெளிநோயாளி சிகிச்சை செலவுகள், மற்றும் நீண்டகாலப் பராமரிப்பு ஆகிய தேவைகளுக்கு இவை உதவுகின்றன.
வீடமைப்பு, கல்வி, சுகாதாரப் பராமரிப்பு – இவை தொடர்பான செலவுகள் குறித்தே சிங்கப்பூரர்கள் அதிகம் கவலைப்படுகின்றனர். இந்த சேவைகள் அனைவருக்கும் தரமாகவும் கட்டுப்படியாகவும் இருப்பதை உறுதி செய்கிறோம். இந்த வகையில் குடும்பங்கள், வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க உதவுகிறோம்; தேவையுள்ளோருக்குக் கூடுதல் உதவி வழங்குகிறோம். 12. இதோடு நம் பணி நின்றுவிடக் கூடாது. சிங்கப்பூரை நாம் தொடர்ந்து மேம்படுத்த வேண்டும். இப்பயணத்தில் நாம் இன்னும் நெடுந்தூரம் செல்ல வேண்டும். துணிவுடனும் புத்தாக்கத்துடனும் திட்டமிடுவோம். அதற்கு, சமூக ஒற்றுமை, வலுவான பொருளியல், அரசியல் நிலைத்தன்மை, நல்ல அரசாங்கம் இருக்க வேண்டும்.
இன்று, சிங்கப்பூர் வாய்ப்புகள் நிறைந்த ஒரு தேசம். ஒரு தலைமுறை ஏற்படுத்திக் கொடுக்கும் அடித்தளத்தைக் கொண்டு, மறு தலைமுறை மேலும் சிறந்த இல்லத்தை உருவாக்குகிறது. அதனால்தான், இன்று நாம், நமக்கு விருப்பமான துறைகளில் சிறந்து விளங்கி, மேம்பட்ட எதிர்காலத்தை உருவாக்க முடிகிறது. இனி, அடுத்த தலைமுறைக்காக நாம் நம் பங்கை ஆற்ற வேண்டும்; நாம் ஓர் ஒன்றுபட்ட தேசமாக, தொடர்ந்து செழித்தோங்க வேண்டும்.
ஒரு தேசிய தினத் தமிழ்ப் பாடல் கூறுவது போல் 1, “பல இனங்கள் சேர, ஒருமை கொண்டாட, சிங்கை என் வீடு, எந்தன் தாய் நாடு”, என்று சொல்வோம்.
அனைவருக்கும், என் இனிய தேசிய தின வாழ்த்துகள்.
- - - - - - - - - - - - - -
[1] Singai Naadu by Shabir, 2012
Videos and transcripts


National Day Message 2018 (Malay)

National Day Message 2018 (Mandarin)
Watch more

National Day Message 2017 (Tamil)
National Day Message 2016 (Tamil)
