Prime Minister's May Day Message 2019 (Tamil)
SM Lee Hsien Loong
Economy
Jobs and productivity
30 April 2019
This article has been migrated from an earlier version of the site and may display formatting inconsistencies.
மே தினச் செய்தி 2019
ஐம்பது ஆண்டுகளுக்கு முன், தொழிலாளர் இயக்கத்தை நவீனப்படுத்துதல் குறித்த தொழிற்சங்கக் கருத்தரங்கைத் தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் நடத்தியது. அது ஒரு முக்கியத் திருப்புமுனை. அக்காலகட்டத்தில், தொழிலாளர் இயக்கம், நலிவுற்றிருந்தது. சாதாரண ஊழியர்கள் மத்தியில், உறுப்பினர் எண்ணிக்கையும் காங்கிரஸ் குறித்த நல்லெண்ணமும் குறைந்து காணப்பட்டன. மோதல் போக்கை மேற்கொண்டிருந்த தொழிலாளர் இயக்கத்தை, ஒத்துழைப்பின் பக்கம் திருப்ப அக்கருத்தரங்கே காரணம். வேலை நியமனச் சட்டம், தொழில் உறவுகள் (திருத்த) சட்டம் போன்ற புதிய சட்டங்களையும், தொழிலியல் நடுவர் மன்றம் போன்ற புதிய அமைப்புகளையும் ஆதரிக்க, தொழிற்சங்கங்கள் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றின. ஊழியர்களுக்குக் கட்டுப்படியான விலையில் அத்தியாவசிய பொருள்களும் சேவைகளும் கிடைப்பதற்காகவே என்டியுசி இன்கம் தொடங்கி, மேலும் பல தொழிலாளர் கூட்டுறவு அமைப்புகளைத் தொடர்ச்சியாக நிறுவினோம். இவ்வாறாக, தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ், ஒரு துடிப்பான, முற்போக்கான அமைப்பாக வளர்ந்து, சிங்கப்பூருக்கே உரிய முத்தரப்புப் பாணியில் ஓர் அதிமுக்கிய, சம மதிப்புள்ள பங்காளியாக உருவெடுத்துள்ளது.
இன்று, தொழிலாளர் இயக்கம் மற்றுமொரு திருப்புமுனையை அடைந்துள்ளது. நம் வெளிச் சூழல் விரைவாக மாறி வருகிறது. புதிய வேலைகள் உருவாக்கப்படுகின்றன, பழைய தொழில்துறைகளும் வேலைகளும் மறைகின்றன. வேலைகளின் தன்மை எதிர்காலத்தில் வேறுவிதமாக இருக்கும். தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ், இச்சவால்களுக்குத் தயாராக இருப்பதோடு, தொழிற்சங்கங்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், ஊழியர்கள் ஆகியோரையும் முன்னரே இவற்றுக்குத் தயார்படுத்தவேண்டும். இல்லையேல், அவை நம்மைப் பெருஞ்சுமையில் ஆழ்த்தும்.
எடுத்துக்காட்டாக, தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ், மூத்த ஊழியர்களின் வேலை மறுநியமனத்தை ஊக்குவிப்பதில் முக்கியப் பாங்காற்றியுள்ளது. ஓய்வுபெறும் வயதையும் வேலை மறுநியமன வயதையும் மேலும் அதிகரிப்பது குறித்த முத்தரப்புக் கருத்திணக்கம் ஏற்பட, அது உதவியுள்ளது. தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ், படிப்படியான சம்பள உயர்வு முறைக்கு ஆதரவாகவும் குரல்கொடுத்துள்ளது. இதுமட்டுமன்றி, வேலைநலன் திட்டமும் குறைந்த வருமான ஊழியர்களுக்குப் பேருதவியாக இருந்துள்ளது.
ஊழியர்களுக்கு மறுபயிற்சி அளித்து, அவர்களின் திறன்களை மேம்படுத்துவது, மற்றொரு முக்கியமான, நீண்டகாலப் பணியாகும். தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸூடன் ஒன்றிணைந்து அரசாங்கம் ஸ்கில்ஸ்ஃபியூச்சர், மாற்றியமைத்துக் கொண்டு வளர்ச்சியடைதல் திட்டத்தின்கீழ், பல மேம்பாட்டு, மறுபயிற்சித் திட்டங்களைத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டங்கள் மூலம் நாம் பெறும் அனுபவங்களாலும், புதிய தேவைகள் ஏற்படுவதாலும், இவற்றை நாம் தொடர்ந்து மேம்படுத்திவருகிறோம். உதாரணத்திற்கு, இவ்வாண்டின் வரவு செலவுத் திட்டத்தில், நாம் தானியக்கமய ஆதரவுத் தொகுப்புத்திட்டத்தையும் உற்பத்தித்திறன் தீர்வுகள் மானியத்தையும் அறிமுகப்படுத்தினோம். இவை, நிறுவனங்கள் தொழில்நுட்பத்தைக் கடைப்பிடித்து மேலும் ஆக்கபூர்வமாகச் செயல்பட உதவும்.
கடந்த ஜனவரி மாதம், நான் வாழ்நாள் கற்றல் கழகத்திற்குச் சென்றிருந்தேன். மாற்றியமைத்துக் கொண்டு வளர்ச்சியடைதல் திட்டத்தின் மூலம் தங்களை மேம்படுத்தி, அதன் பிறகு புதிய வேலைகள் அல்லது அதிகப் பொறுப்புகளை எடுத்துக்கொண்ட சிங்கப்பூரர்களை நான் அங்கு சந்தித்தேன். சில வேளைகளில், அவர்கள் வேறு நிறுவனங்களுக்கு அல்லது தொழில்துறைகளுக்குக்கூட மாறியிருந்தனர். குறிப்பாக, வங்கிகள் பெரிய அளவில் முயற்சி எடுத்துள்ளன. புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கும், அதிக பொறுப்புகளை ஏற்பதற்கும் ஆயிரக்கணக்கான முகப்புப் பணியாளர்களுக்கு மறுபயிற்சி அளிக்கப்பட்டது. இத்தகைய வெற்றிக் கதைகளை நாம் மேலும் திரட்டிவருகிறோம். ஆற்றல்களையும் உற்பத்தித்திறனையும் வளர்த்துக்கொள்வதற்கான முயற்சியை எடுப்பதற்கு, இவை உந்துதலாக அமையும் என்று நான் நம்புகிறேன்.
இந்த முயற்சிகளின் பலன், பேரியியல் நிலையில் உணரப்படுகின்றன. சென்ற ஆண்டு, தொழிலாளர் உற்பத்தித் திறன் 3.7% அதிகரித்தது. அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் சம அளவில் காணப்படாதபோதும், இந்த அதிகரிப்பு நல்லதுதான். உற்பத்தித் திறன் அதிகரிப்புகள் பெரும்பாலும் வெளிநாடுகளைச் சார்ந்து செயல்படும் துறைகள், குறிப்பாக உற்பத்தித் துறையில் காணப்பட்டன. சில்லறை விற்பனை, உணவு, பானங்கள் போன்ற உள்நாட்டுச் சேவைத் துறைகளில் உற்பத்தித்திறனை மேம்படுத்த, நாம் இன்னும் கடுமையாக உழைக்கவேண்டியிருக்கிறது.
சென்ற ஆண்டு ஆட்குறைப்பு குறைவாகவே இருந்தது. இந்த ஆட்குறைப்பு விகிதம் பத்தாண்டுகளுக்கு மேலாக இருந்ததைவிட ஆகக் குறைந்த நிலையில் இருந்தது. புதிய தொழில்நுட்பத்தையும் புதிய வேலைகளையும் சமாளிக்க ஊழியர்களுக்கு மறுபயிற்சி அளித்த முயற்சிகள் வீண்போகவில்லை என நான் நம்புகிறேன். பயிற்சி, மேம்பாடு, ஊழியர்களை வேறு வேலையிடங்களுக்கு மாற்றியமைத்தல் போன்றவற்றை நாம் வலியுறுத்தாமல் இருந்திருந்தால், மூத்த ஊழியர்களை ஆட்குறைப்பு செய்து புதிய பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்தும் சுலபயான வழியை நிறுவனங்கள் மேற்கொண்டிருக்கும். இதன்மூலம் ஊழியரணியின் இடப்பிறழ்வு மேலும் மோசமாகியிருக்கும். பயிற்சி, மேம்பாடு போன்றவற்றில் தொடர்ந்து நமது முயற்சிகளைத் தொடரவேண்டும். முடிவில்லாத ஒரு நெடுந்தொலைவோட்டமாக இருந்தாலும் நாம் இதில் முன்னேற்றம் கண்டுவருகிறோம்.
நமது தொழிலாளர் இயக்கம் கடந்த 50 ஆண்டுகளுக்கான அதன் சாதனையைக் குறித்துப் பெருமிதம் கொள்ளலாம். ஒரு வலுவான தொழிலாளர் இயக்கம் நமக்கு மிகவும் முக்கியம். பல வளர்ந்த நாடுகளில், தொழிற்சங்கங்களின் உறுப்பினர் எண்ணிக்கை நலிவடைந்து ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர் அணி புறக்கணிக்கப்படுகிறது. ஊழியர்களின் அக்கறைகள் கவனிக்கப்படாமல் அவர்கள் குழப்பமான, தலைவரற்ற, கதியற்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அதனால், மதிமிஞ்சிய, புதுக் குடியேறிகளுக்கு எதிராக ஊழியர்கள் கொண்டிருக்கும் பயங்களுக்கும் பாதுகாப்பின்மைக்கும் துணைசெல்லும் திணைக்குடியாதரவுக் கோட்பாடு பக்கம் ஊழியர்கள் சாய்வது ஆச்சரியமளிப்பதற்கில்லை. ஆனால் இது ஊழியர்களின் வாழ்வுகளை மேம்படுத்த எவ்வித நடைமுறைக்கேற்ற தீர்வுகளையும் ஊக்கமிழக்கும் தலைமைத்துவத்தையும் வழங்குவதில்லை.
சிங்கப்பூரில் ஆக்ககரமான, ஒத்துழைப்பை வழங்கும் தொழிற்சங்கங்கள், தெளிவான நோக்கமுடைய முதலாளிகளுடனும் ஆதரவான அரசாங்கத்துடனும் இணைந்து ஊழியர்களுக்கு மேலும் சிறந்த வருமானங்களையும் நிலையான வளர்ச்சியையும் வழங்கியுள்ளன. நாம் இந்தப் பாதையில் தொடர்ந்து இருந்து முத்தரப்புப் பங்காளிகளுடன் நமது நம்பிக்கையையும் ஆதரவையும் வலுப்படுத்தவேண்டும். இதன்வழி நிச்சயமற்ற, சவால்கள் நிறைந்த உலக பொருளியலில் நாம் தொடர்ந்து ஒரு தேசமாகச் செழித்தோங்கி, வளமடைய முடியும்.
அனைத்துச் சிங்கப்பூரர்களுக்கும் மே தின வாழ்த்துகள்.
Explore related topics
