May Day Message 2021 (Tamil)
SM Lee Hsien Loong
Economy
Jobs and productivity
30 April 2021
Prime Minister Lee Hsien Loong's May Day Message 2021, translated to Tamil.
This article has been migrated from an earlier version of the site and may display formatting inconsistencies.
மே தினச் செய்தி 2021
இவ்வாண்டு, தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் அதன் 60-ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. அதன் தோற்றம் சிங்கப்பூர் வரலாற்றுடன் நெருக்கமாகப் பின்னிப் பிணைந்துள்ளது. 1950-களில், மக்கள் செயல் கட்சியும் தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து, ஊழியர்களுக்கான மேம்பட்ட சூழலை உருவாக்க காலனித்துவ அரசாங்கத்திடம் முறையிட்டன; சுய-உறுதிப்பாட்டிற்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராட முனைந்தன. 1961-ஆம் ஆண்டில், கம்யூனிஸ்ட் கொள்கையாளர்கள் மக்கள் செயல் கட்சியிலிருந்து பிரிந்து, பாரிசான் சோசலிஸ் கட்சியை உருவாக்கியபோது, தொழிற்சங்கமும் பிளவுபட்டது. தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் நிறுவப்பெற்று, கம்யூனிஸ்ட் ஆதரவுக் குழுக்களுக்கு எதிராக, மக்கள் செயல் கட்சியுடன் முன் நின்றது.
அந்த ஆரம்பகாலம், கொந்தளிப்பு நிறைந்ததாக அமைந்தது. கம்யூனிஸ்ட் கொள்கையாளர்களை எதிர்த்து ஒன்றாகப் போராடியதில், மக்கள் செயல் கட்சி, தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் ஆகியவற்றின் தலைவர்களுக்கு இடையில் ஆழமான நம்பிக்கையும் தோழமையும் வேரூன்றின. 1965-ஆம் ஆண்டில் ஏற்பட்ட, அதிரடி நிகழ்வுகளைக் கடக்க, இந்தப் பிணைப்பு வித்திட்டது. மலேசியாவிடமிருந்து பிரிந்து, தனி நாடாக நாம் மேற்கொண்ட பயணத்திற்கு அது கைகொடுத்தது.
சுதந்திரம் அடைந்த ஈராண்டுக்குள், பிரிட்டன் இங்கிருந்த அதன் துருப்புகளை மீட்டுக்கொள்ளப்போவதாக அறிக்கை விடுத்தது. அது, சிங்கப்பூருக்கு மற்றுமொரு பேரிடியாக அமைந்தது. உயிர் வாழ வேண்டுமெனில், நமது மக்களுக்கான புதிய வேலைகளை நாம் உருவாக்கவேண்டும். அதற்கு, நம்மை வெளிநாட்டு முதலீடுகளுக்கு ஈர்ப்புத்தன்மை உடையவர்களாக நாம் மாற்றிக்கொள்ளவேண்டும். ஊழியர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் அதே வேளையில், தொழில்துறை பூசல்களைக் குறைக்க, மக்கள் செயல் கட்சி அரசாங்கம், கடுமையான சட்டங்களை அமல்படுத்தியது. ஊழியர்களைப் பணியமர்த்தும், பணிநீக்கும் முதலாளிகளின் அதிகாரங்கள் வலுப்படுத்தப்பட்டன. அதே வேளையில், தொழில்துறை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தொழிற்சங்கங்களின் அதிகாரங்கள் முடக்கப்பட்டன. எதிர்பார்த்த வண்ணம், தொழிற்சங்கங்கள் அதிருப்தி அடைந்தன. ஆனால், தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸின் மூலம் செயல்பட்டதால், மக்கள் செயல் கட்சி, தொழிலாளர்களுக்கு அதுவே முன்னேற்றத்திற்கான சரியான வழி என்பதை எடுத்துரைத்து, மாற்றங்களுக்கான அவர்களின் ஆதரவைப் பெற்றது.
1969-ஆம் ஆண்டில், தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ், எதிர்கால வளர்ச்சிக்கு வித்திடக்கூடிய “நவீனமயமாதல் கருத்தரங்கை’ நடத்தியது. இது, முரண்பாடு அல்லாமல், ஒத்துழைப்பு அடிப்படையிலான, முத்தரப்பு உறவுமுறைகளுக்குரிய புதிய அத்தியாயத்தை வரவேற்றது. அதன்பின்னர் வந்த விரைவான, நீடித்த நிலைத்தன்மையுடைய வளர்ச்சிக்கு, அந்தக் கருத்தரங்கே அடித்தளம் அமைத்துக் கொடுத்தது.
நமது தொழிற்சங்க, முத்தரப்பு முறைமைகள் குறைகூறப்பட்டுள்ளன. குறிப்பாக, மேற்கத்திய நாடுகளில். நமது கொள்கையைத் தற்காத்துப் பேசவேண்டிய அவசியம் ஏதும் நமக்குக் கிடையாது. பெரும்பாலான மேற்கத்திய சமூகங்களில், தொழிற்சங்க உறுப்பினத்துவம் நிலையாக சரிந்துள்ளது. மாறாக, ஆழ்ந்து ஆராயப்பட்ட கொள்கையாலும், ஒருபோதும் தளராத தொடர் முயற்சியாலும், சிங்கப்பூரில் தொழிற்சங்க உறுப்பினத்துவம் தொடர்ந்து அதிகரித்துள்ளது. மேற்கத்திய நாடுகளில், 1960-களில் இருந்த தொழிற்சங்களுடன் ஒப்பு நோக்க, தற்போது அங்கு உள்ள தொழிற்சங்கங்களின் செல்வாக்கு மிகவும் குறைந்துவிட்டது. அதே வேளையில், சிங்கப்பூரில் உள்ள தொழிலாளர் இயக்கம் தொடர்ந்து வலுப்பெற்று வந்துள்ளது. வரலாறு நமக்குத் தெளிவாக உணர்த்தும் கருத்து: ஊழியர்களின் நலனையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பதில், முத்தரப்பு உறவுமுறைகளும் ஒத்துழைப்புமே, போராட்டங்கள், முரண்பாடுகள் ஆகியவற்றைக் காட்டிலும் சிறப்பாகப் பங்காற்றியுள்ளன.
‘மூன்றாம் உலக நாடு’ என்ற நிலையிலிருந்து, ‘முதலாம் உலக நாடு’ என்ற நிலையை அடைய நாம் மேற்கொண்ட பயணம், எப்போதும் சுலபமாக அமையவில்லை. பிரிட்டன் இங்கிருந்த அதன் துருப்புகளை மீட்டுக்கொண்ட சம்பவம், நமக்கு ஏற்பட்ட பல இன்னல்களில் முதலாவது மட்டுமே. 1985-ஆம் ஆண்டில், நமது முதல் கடுமையான பொருளியல் மந்தநிலை, ஆசிய நிதி நெருக்கடி, சார்ஸ் நோய்த்தொற்று, உலகளாவிய நிதி நெருக்கடி ஆகிய ஒவ்வொரு முறையும், நமது முத்தரப்புக் கட்டமைப்பு, நமக்குத் துணை நின்றது. ஊழியர்கள், தங்கள் செலவுகளைக் குறைத்துக்கொண்டு, தியாகங்கள் புரிந்தனர்; சம்பளக் குறைப்பையும் ஏற்றுக்கொண்டனர். முதலாளிகளும், ஊழியர்களின் தியாகங்களைப் புரிந்துகொண்டு, அவர்களால் இயன்றவரை பல வேலைகளைத் தக்கவைத்துக்கொள்ள முயன்றனர். அதே வேளையில், இத்தகைய சிரமமான காலகட்டங்களைத் தொழில்களும் ஊழியர்களும் கடந்து செல்வதற்குத் தேவையான ஆதரவையும் அரசாங்கம் வழங்கியது. ஒன்றிணைந்து செயல்படுதல், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையைக் கடைப்பிடித்தல், நீண்டகாலத் தேவைகளில் கவனம் செலுத்துதல் ஆகியவற்றின் மூலம் முத்தரப்புப் பங்காளிகள், மாறுபட்ட வெவ்வேறு சூழல்களைக் கடந்து செல்வதற்கான வழிகளை மட்டும் ஆராயவில்லை; பரஸ்பர நம்பிக்கை, ஒத்துழைப்பு ஆகியவற்றை வலுப்படுத்திக்கொண்டு, அடுத்த பேரிடரை சமாளிக்கத் தங்களை ஆயத்தப்படுத்திக்கொண்டனர்.
கொவிட்-19 நெருக்கடி கடுமையானதொரு சவாலாக இருந்தாலும் கூட, கடந்தகால நெருக்கடிகளுடன் ஒப்பு நோக்க, அவ்வளவு அச்சுறுத்தக்கூடிய ஒன்றாகத் தோன்றவில்லை. வழக்கமான சமயங்களில், தொழில்துறை உறவுகளை சீராக வைத்திருக்க, தொழிற்சங்கங்கள் பின்னணியில் இருந்தவாறு அமைதியாக செயல்படும். ஆனால், கொவிட்-19 போன்ற பெரியதொரு சவாலைச் சந்திக்கும்போது, ஊழியர்களைப் பாதுகாக்கும் உங்கள் இலக்கே முன்னுரிமை பெறுகின்றது.
கடந்த ஆண்டு, வேலை இழப்புகள் தவிர்க்கப்படமுடியாத நிலை ஏற்பட்டபோது, ஆட்குறைப்புகள் நியாயமாகவும் பொறுப்புணர்வுடனும் மேற்கொள்ளப்படுவதை தொழிற்சங்கங்கள் உறுதிசெய்தன. தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸின் வேலைப் பாதுகாப்பு மன்றம், ஆட்குறைப்பு செய்யப்பட்ட 28,000-க்கும் அதிகமான ஊழியர்கள் புதிய வேலைகளைப் பெறுவதற்கு நேரடியாக உதவியுள்ளது; தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸின் பராமரிப்பு நிதியின் வழி அவர்களுக்கு நிதி ஆதரவும் வழங்கியுள்ளது. தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ், சுயதொழில் புரிவோருக்கான வருமான நிவாரணத் திட்டத்தை அமல்படுத்த, அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட்டது. இத்திட்டம், சுயதொழில் புரிவோருக்குத் தேவையான முக்கியமான உதவியை வழங்கியது.
நெருக்கடி காலகட்டம் முழுவதும், தொழிலாளர் இயக்கம் பங்காளித்துவம் குறித்த அதன் நிலைப்பாட்டைத் தக்கவைத்துக்கொண்டது. மேம்பட்ட எதிர்காலத்திற்காக, இன்று தியாகங்கள் செய்யவேண்டிய அவசியத்தை ஊழியர்களுக்கு இயக்கம் எடுத்துரைத்தது. கொவிட்-19 கிருமிப்பரவலை ஒன்றிணைந்து எதிர்க்கும் இந்த ஆற்றலும், விடாமுயற்சியும் இல்லையெனில், சுதந்திரத்திற்குப் பின்னர் ஏற்பட்ட ஆக மோசமான இந்த நெருக்கடியை, நாம் கடந்து வந்திருக்க முடியாது.
கடந்த ஆண்டுடன் ஒப்பு நோக்க, தற்போது நம்முடைய நிலை வெகுவாக மேம்பட்டுள்ளது. உலகளாவிய பொருளியல் மந்தநிலை, தொடக்கத்தில் நாம் அஞ்சியதைவிட, குறைவான தாக்கத்தையே கொண்டுள்ளது. ஐரோப்பா, அங்கு மீண்டும் தலைதூக்கியுள்ள கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்களைக் கட்டுப்படுத்த சிரமப்பட்டு வரும் வேளையில், அமெரிக்கா இவ்வாண்டு வலுவாக மீண்டு வருவதற்கு எதிர்பார்த்து இருக்கிறது. அமெரிக்காவின் பெரிய உதவித் தொகுப்புத்திட்டமும், தடுப்பூசி இயக்கத்தின் நல்ல முன்னேற்றமுமே அதன் ஆக்கரமான எதிர்பார்ப்பிற்குக் காரணம். சீனாவின் பொருளாதாரமும் சிறப்பாக இயங்கி வருகிறது. அங்கு கிருமித்தொற்று சம்பவங்கள் அரிதாகக் காணப்படுகின்றன. வெளிநாடுகளில் தென்படும் இத்தகைய போக்குகள், நமது பொருளாதார மீட்சிக்கு ஆதரவளித்து, நமது முன்னுரைப்புகள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும். ஏற்கனவே, நமது வேலையின்மை விகிதம் படிப்படியாக் குறைந்துகொண்டு வருகிறது. வர்த்தகத் தொழில்துறை அமைச்சு, இவ்வாண்டுக்கான வளர்ச்சி 4 முதல் 6 விழுக்காடு வரையில் இருக்கக்கூடும் என்று முன்னுரைத்துள்ளது. இது கிட்டத்தட்ட, கொவிட்-19 கிருமிப்பரவலுக்கு முன்பு இருந்த பொருளாதார நிலைக்கு நம்மை இட்டுச் செல்லும்.
இந்த ஆண்டையும் தாண்டி, புதிய வாய்ப்புகள் உருவெடுத்து வருகின்றன. கிருமிப்பரவல், அனைத்துத் துறைகளிலும் மின்னிலக்கமயமாதல், தானியக்கம், நீடித்த நிலைத்தன்மை போன்ற முறைமைகளை துரிதப்படுத்தியுள்ளது. அவற்றைக் கைப்பற்றிக்கொள்ள, நாம் கொவிட்-19 கிருமிப்பரவலுக்குப் பிந்திய புதிய உலகிற்காக, நமது பொருளாதாரத்தை உருமாற்றிக்கொள்ளவேண்டும்.
மேலும் வலிமையுடன் மீண்டெழுவதற்கான பணிக்குழு, இந்த உருமாற்றப் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தொழிலாளர் இயக்கமும் மும்முரமாக இப்பணியில் ஈடுபட்டிருப்பது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். நமது ஊழியரணி மேலும் பன்முகத்தன்மை வாய்ந்ததாய் மாறி வருகின்றது. தன்னுரிமைத் தொழில் செய்பவர்கள், தொழில்முனைவர்கள், முதிர்ச்சியடைந்த ஊழியர்கள், புதிய பட்டதாரிகள் என அனைவரும் வேலைவாய்ப்பு தொடர்பில் வெவ்வேறு சவால்களை எதிர்நோக்குகின்றனர். அவர்களில் ஒவ்வொரு தரப்பினருக்கும், தனிப்பட்ட கொள்கைகளும் தீர்வுகளும் தேவை. தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ், 600-க்கும் அதிகமான நிறுவனப் பயிற்சிக் குழுக்களை அமைத்துள்ளது. இவை நிறுவனங்களுடன் இணைந்து, திறனாற்றல் இடைவெளிகளை அடையாளம் காண்கின்றன; புதிய வேலைகளை உருவாக்குகின்றன; ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கின்றன. தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ், ஊழியர்கள் மேம்பட்ட வேலைகளைப் பெறுவதற்குத் தேவையான புதிய தீர்வுகளைக் கண்டறிவதற்கும், தன்னை தற்காலத்திற்கு ஏற்புடைய அமைப்பாக மாற்றிக்கொள்வதற்கும் எவ்வாறு செயல்படுகிறது என்பதை நிறுவன பயிற்சிக் குழுக்கள் எடுத்துகாட்டுகின்றன.
ஒற்றுமையாக, ஒன்றிணைந்து முன்னேறுவதற்கான ஒருமித்த நோக்கமே, நமது முத்தரப்புப் பங்காளித்துவத்தின் தாரக மந்திரமாக எப்போதும் இருந்து வந்துள்ளது. இந்த மே தினத்தில், நாம் மீண்டும் உறுதி எடுத்துக்கொள்வோம் – அடுத்த 60 ஆண்டுகளுக்கும் அப்பால், இந்த முத்தரப்பு உறவை வலுப்படுத்துவோம்; சிங்கப்பூருக்கான மேலும் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவோம்.
அனைத்து சிங்கப்பூரர்களுக்கும், மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் நிறைந்த மே தின வாழ்த்துகள்!
Explore related topics
