May Day Message 2023 (Tamil)
SM Lee Hsien Loong
Economy
Jobs and productivity
30 April 2023
This article has been migrated from an earlier version of the site and may display formatting inconsistencies.
மே தின உரை 2023
நாம் கொவிட்-19 கிருமிப்பரவலிலிருந்து மீண்டெழுந்து வரும் தருணத்தில், நம் பொருளாதாரமும் தொடர்ந்து மீட்சி கண்டு வருகிறது. கடந்த ஆண்டு, சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.6 விழுக்காடாக அதிகரித்தது. சுற்றுப்பயண, விருந்தோம்பல் முதலிய துறை சார்ந்த நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவை விரைவாக மீட்சி கண்டு வருகின்றன. சாங்கி விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை, கிருமிப்பரவலுக்கு முந்தைய அளவில் சுமார் 80 விழுக்காட்டை எட்டியுள்ளது; உலகளாவிய இணைப்புகள் படிப்படியாகப் பழைய நிலைக்கு மாறும்போது அது மேலும் உயரும்.
இவ்வாண்டின் வளர்ச்சி சற்று மெதுவடைவதை நாம் எதிர்ப்பார்க்கலாம். ஆனால், நேரடி சரிவு ஏற்படுவதை நாம் தவிர்க்கவேண்டும். பணவீக்கம் இன்னும் அதிகமாகவே உள்ளது. ஆனால், இவ்வாண்டின் பிற்பாதியில் அது சீராகும் என்ற நம்பிக்கை சிறிது உள்ளது. இதற்கிடையில், வேலையின்மை விகிதங்கள் குறைவாக உள்ளன; ஆட்குறைப்பு எண்ணிக்கை சமாளிக்கக்கூடிய அளவில் உள்ளது. ஒட்டுமொத்தத்தில், நமது உடனடி பொருளாதார வாய்ப்புகள் பற்றி நாம் நம்பிக்கை கொண்டிருக்கலாம்.
ஆனால், நம் அயலகச் சூழல் இன்னும் நிச்சயமற்றதாகவே இருக்கிறது. புவியியல் சார்ந்த கடுமையான அரசியல் சர்ச்சைகள் நிறைந்துள்ளன. மேற்கத்திய நாடுகளில், பணவீக்கத்தைத் தணிக்கும் முயற்சியில் மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களைத் தொடர்ந்து அதிகரிப்பதால், அந்நாடுகளில் பொருளியல் சரிவுகள் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது. வளர்ந்துவரும் தேசியவாதமும் தன்னைப்பேணிக் கொள்கையும் பன்னாட்டு வர்த்தக முறையைப் படிப்படியாகக் கீழறுத்து வருகின்றன. இது, அனைத்துலக வர்த்தகத்தையும் ஒத்துழைப்பையும் பாதிக்கின்றது. அதேவேளையில், வளர்ந்துவரும் பசுமை, மின்னிலக்கத் துறைகளும், செயற்கை நுண்ணறிவு ஆகிய புதிய தொழில்நுட்பங்களும், உலக நாடுகளின் பொருளியல்களுக்கு இடையூறுகளை விளைவிக்கும்.
இத்தகைய விரிவான போக்குகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் நம்மை நாமே மாற்றியமைத்துக்கொள்ளவேண்டும். அதேநேரத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு அவற்றின் தாக்கத்தைக் குறைக்க நம்மால் முடிந்தவற்றைச் செய்யவேண்டும். சிங்கப்பூரின் வாழ்வாதாரம், நாம் தொடர்ந்து திறந்த மனப்பான்மையுடன், உலகத்தோடு இணைந்து வர்த்தகம் செய்வதைப் பொறுத்து அமைந்துள்ளது. இதனால், நாம் தொடர்ந்து நமது தொழில்துறைகளை உருமாற்றி, தற்போது உள்ள திறனாற்றல்களை வலுபடுத்துவதுடன், வளரும் சந்தைகளுக்குள் அடியெடுத்து வைக்கும் வேளையில் புதிய திறனாற்றல்களையும் உருவாக்கிக்கொள்ளவேண்டும். இது, தற்போது உள்ள சில வேலைகளுக்கு இடையூறாக இருந்தாலும், எதிர்காலத்திற்கான மேம்பட்ட வாய்ப்புகளைக் கொண்ட புதிய வேலைகளை உருவாக்கித் தரும்.
நமது ஊழியர் பயிற்சி, திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் நன்கு முன்னேறி வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. புதிய பொருளியலில் கிடைக்கப்பெறும் வாய்ப்புகளைக் கைப்பற்றிக்கொள்ள, ஊழியர்களில் பலர் திறன் மேம்பாடு காணவும் திறன் மறுபயிற்சி பெறவும் அவை கைகொடுக்கின்றன. முதலாளிகளும் தங்கள் ஊழியரணியின் ஆற்றலை முழுமையாக மேம்படுத்த முயன்று வருகின்றனர். வேலைப் பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதுடன், தங்கள் ஊழியர்கள் அவற்றிலிருந்து பலனடைய அவர்கள் ஊக்குவிக்கின்றனர். நீக்குபோக்கான வேலை ஏற்பாடுகள், மூத்த ஊழியர்களுக்குப் பணிகளை மறுவடிவமைப்பது போன்றவற்றின்மூலம், மேலும் முதலாளிகள் பலர், ஊழியர்களின் மாறிவரும் தேவைகளுக்கு ஈடுகொடுத்து வருகின்றனர். இது உற்பத்தித்திறனை அதிகரிப்பதுடன் திறனாளர்களைத் தக்கவைத்துக்கொள்ளவும் வகைசெய்கிறது.
அரசாங்கம், சிங்கப்பூரர்களுக்கு ஆதரவளிக்கத் தொடர்ந்து தம்மால் இயன்றவற்றைச் செய்யும். படிப்படியாக உயரும் சம்பள முறையின்மூலம் எளிதில் பாதிக்கப்படக்கூடிய ஊழியர்களின் நிலையை உயர்த்துவதில் நாம் முன்னேற்றம் கண்டுள்ளோம். திறன்மிக்கத் தொழில்களை நிபுணத்துவமயமாக்க நாம் அதிகம் செய்து, வெற்றிக்கான மேலும் பல பாதைகளுக்கு வித்திடுவோம். சிங்கப்பூரர்களுக்கான வாழ்க்கைத்தொழில் திட்டமிடுதல் ஆதரவை மேம்படுத்தவும் நாங்கள் ஆவன செய்வோம். சிங்கப்பூரர்கள் எப்படித் தங்கள் வேலை வாய்ப்புகளை மேம்படுத்தி, மீள்திறனை வலுபடுத்தி, புதிய வேலைகளுக்கும் வாழ்க்கைத் தொழில்களுக்கும் மாறலாம் உள்ளிட்ட அம்சங்கள் பற்றி முன்னேறும் சிங்கப்பூர்த் திட்டம் கலந்தாலோசித்து வருகிறது.
இவை அனைத்திற்கும் முத்தரப்புப் பங்காளிகள் இடையே வலுவான ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. தொழிலாளர் இயக்கம் முக்கியப் பங்கு வகிக்கிறது. கிருமிப்பரவலின்போது, தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் சம்பளக் குறைப்பு நடவடிக்கைகளை அமல்படுத்த முதலாளிகளுடனும் ஊழியர்களுடனும் அணுக்கமாகப் பணியாற்றியது. நிர்வாகம் சம்பளக் குறைப்பை முன்னின்று ஏற்றுக்கொண்டு, ஊழியர்களின் வலியைப் பகிர்ந்துகொண்டதோடு, தொழில்களைத் தக்கவைத்து, வேலைகளையும் காப்பாற்றியது. தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் வேலைப் பாதுகாப்பு மன்றத்தை நிறுவி, விமானத்துறை போன்ற கிருமிப்பரவலால் பாதிக்கப்பட்ட துறைகளிலிருந்து சுகாதாரப் பராமரிப்பு போன்ற அதிக மனிதவளம் தேவைப்படும் துறைகளுக்கு ஊழியர்களைப் பணியமர்த்தியது. இதுபோன்ற முயற்சிகள் நம்மை கொவிட்-19 கிருமிப்பரவலை, ஒன்றுபட்ட மக்களாகக் கடந்து வரத் துணைபுரிந்தன. அதோடு முத்தரப்புப் பங்காளிகளிடையே நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்த இம்முயற்சிகள் துணைநின்றன.
நமது முத்தரப்பு முறைமை தனித்துவமானது; விலைமதிப்பற்றது. இந்தச் சிரமமான சூழலில், நாம் முன்னோக்கிச் செல்லும்போது, முத்தரப்பு உணர்வை மீண்டும் உறுதிப்படுத்தி, செழிக்கச் செய்வோம். நாம் ஒவ்வொருவரும் நமது பங்கை ஆற்றி, ஒன்றிணைந்து செயல்படும்போது, சிங்கப்பூருக்கும் சிங்கப்பூரர்களுக்கும் பிரகாசமான எதிர்காலத்தை உறுதிப்படுத்தமுடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.
மே தின வாழ்த்துகள்!
Explore related topics
