National Day Message 2025 (Tamil)
Prime Minister's Office
Economy
Finance
Founding Fathers
Governance
8 August 2025
Minister of State, Ministry of Culture, Community and Youth and Ministry of Manpower, Dinesh Vasu Dash delivered Prime Minister and Minister for Finance Lawrence Wong's National Day Message 2025 in Tamil. The message was recorded at the Padang and telecast on 8 August 2025.
This article has been migrated from an earlier version of the site and may display formatting inconsistencies.
என் சக சிங்கப்பூரர்களே, வணக்கம்!
எஸ்ஜி60
சிங்கப்பூர்ப் பிரகடனத்தில், திரு லீ குவான் யூ கூறியது போல, 60 ஆண்டுக்கு முன், சிங்கப்பூர் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது.
நாம் சுதந்திரம் பெற நினைத்ததும் இல்லை; தனி நாடாகத் திகழ எண்ணியதும் இல்லை.
அந்த நொடிப் பொழுது வரையில், சிங்கப்பூர் நீடித்து நிலைக்கவேண்டும் என்றால், மலேசியாவோடு இணைந்திருக்கவேண்டும் என்பதே நம் முன்னோடித் தலைவர்களின் – தலைமுறைகளின் எண்ணமாக இருந்தது.
தனி நாடாகத் திகழ முடியாத அளவு, நாம் சிறிய, பலவீனமுடைய நாடாக இருந்தோம்.
ஆனால், நிலைமை கைமீறிப் போனது.
நாம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, சுதந்திர நாடாக இருக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம்.
எண்ணிப் பார்த்தால், நம் நிலைமை மிகவும் சிக்கலான ஒன்று என்பது புரியும்.
பல தருணங்களில், நம் வரலாறு தடம் புரண்டிருக்கலாம்.
இருப்பினும், தடைகளைக் கடந்து, நாம் இன்றைய நிலையை அடைந்திருக்கிறோம்.
இதனால்தான், எஸ்ஜி60 நமக்கு முக்கியம்! பலர் ‘நம்மால் முடியாது’ என நினைத்தபோது, நாம் ‘முடியும்’ என்று சூளுரைத்தோம்; சாதித்தும் காட்டினோம்.
பல முறை, நம்மால் முடியாது என நாமும் அஞ்சியதுண்டு. இருப்பினும், நாம் பின்வாங்கவில்லை. ஒவ்வொரு சவாலையும் – இனப் பூசல்கள், பிரிட்டிஷ் படைகளின் வெளியேற்றம், பொருளியல் நெருக்கடி, பயங்கரவாத மிரட்டல், உலகளாவிய பெருந்தொற்று – நாம் எதிர்கொண்டோம்.ஒவ்வொரு முறையும் நாம் துணிந்து செயல்பட்டோம்.
தவறுகளைத் திருத்திக்கொண்டு, மேம்பட்ட வலிமையும் மனவுறுதியும் கொண்டு தொடர்ந்து பாடுபட்டோம்.
எல்லாவற்றுக்கும் மேலாக, நாம் ஒற்றுமையாக இருந்தோம். பல சிரமங்களுக்கு இடையிலும், இனம், மொழி, மதம் பாராமல், வலிமையான ஒரு சுதந்திர நாட்டை எல்லோருக்காகவும் உருவாக்கினோம்.
மாறிவரும் உலகம்
60 ஆண்டுகள் கழித்து, சிங்கப்பூர் இன்னொரு திருப்புமுனையில் இருக்கிறது.
மூன்று மாதத்திற்கு முன்னர், மாற்றங்கள் நிறைந்த ஓர் உலகம் பற்றி நான் பேசினேன்.
அப்போது முதல், நிலைமை மேலும் மோசமாகியுள்ளது.
புதிய பூசல்கள் வெடித்துள்ளன. அரசியல் பிரச்சினைகள் அதிகரித்துள்ளன.
வர்த்தகத் தடைகளும் பெருகியுள்ளன.
தன்னைப்பேணிக் கொள்கைகள் மோசமடைந்துள்ளன.
வெளிப்படையாகச் சொல்லவேண்டும் என்றால், பல்லாண்டு காலமாக, சிங்கப்பூரின் வளர்ச்சிக்குத் துணைநின்ற அனைத்துலகக் கட்டமைப்பு, நம் கண் முன்னே கடும் நெருக்குதலுக்கு ஆளாகியுள்ளது.
போட்டித்தன்மை, பிளவுத்தன்மை, கொந்தளிப்பு முன்பைவிட இப்போது அதிகமாக உள்ளது.
இதுதான் இப்போது நாம் எதிர்கொள்ளவேண்டிய உலகம்.
சிரமமான காலங்கள் வரவிருக்கின்றன. ஆனால், நாம் மனம் தளரப் போவதில்லை.
நாம் புதிய சவால்களை நமது தனித்துவமான வழியில் எதிர்கொள்வோம். நமக்கான எதிர்காலத்தை நாமே உருவாக்குவோம்.
அண்மைப் பொதுத் தேர்தலில், சிங்கப்பூரர்களாகிய நீங்கள் தெளிவான முடிவெடுத்தீர்கள்.
இந்தச் சிரமமான காலத்தில், சிங்கப்பூரை மிகச் சிறப்பாக வழிநடத்தக்கூடிய, நீங்கள் நம்பிக்கை கொண்ட அணியைத் தேர்ந்தெடுத்தீர்கள்.
உங்கள் எண்ணமும் நம்பிக்கையும் என் அரசங்கத்திற்கு நம்பிக்கை அளித்தது – திடமாகச் செயல்படுவதற்கும் கடப்பாட்டுடன் வழிநடத்துவதற்கும்.
அதனையே நாங்களும் செய்து வருகிறோம்.
உலகப் பொருளியல் இன்னும் சிறிது காலத்திற்கு நெருக்கடிகளை எதிர்கொள்ளத்தான் செய்யும்.
தொழில்கள் யாவும் விரிவாக்கத்தையும் புதிய முதலீடுகளையும் ஒத்தி வைத்துள்ளன.
இதுவரை நம் பொருளாதாரம் தாக்குப் பிடித்துள்ளது.
ஆனால், எதிர்காலம் நிச்சயமற்றதாகவே உள்ளது.
துணைப் பிரதமர் கான் கிம் யொங் தலைமையிலான சிங்கப்பூர்ப் பொருளாதார மீள்திறன் பணிக்குழு விரைவாகச் செயல்பட்டு வருகிறது.
தொழில்களுக்கு ஆதரவளிக்கவும், சிங்கப்பூரர்கள் தொடர்ந்து வேலைகளைத் தக்கவைத்துக்கொள்ளவும் அவர்கள் குறிப்பிட்ட திட்டங்களை அமல்படுத்தி வருகின்றனர்.
அவர்கள் பிரச்சினைகளை மதிப்பீடு செய்து, வாய்ப்புகளை அடையாளம் கண்டு, நம் நிறுவனங்களையும் ஊழியர்களையும் வருங்காலத்திற்கு ஆயத்தப்படுத்தத் தேவையான அனைத்தையும் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.
ஆனால், நாம் உடனடிப் பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கும் அப்பால் செயல்படவேண்டும்.
நாம், நீண்டகால அடிப்படையில் சிந்தித்துச் செயல்படவேண்டும்; அடுத்தகட்ட சவால்களுக்குத் தயாராக இருக்கவேண்டும்.
அதேவேளையில், மற்ற நாடுகளும் விரைந்து செயல்படுகின்றன. அவற்றுக்குக் கூடுதல் வளங்கள், மக்கள்தொகை, வெற்றி பெறுவதற்கான போட்டித்தன்மை என எல்லாமே மிகுதியாக உள்ளன.
உலக வல்லரசுகளும் தங்களுக்குச் சாதகமான சூழலை உருவாக்க, எல்லா வழிமுறைகளையும் – பொருளாதாரம், தொழில்நுட்பம், அரசியல் – என எல்லாவற்றையும் பயன்படுத்தத் தயாராக உள்ளன.
இந்நிலையில், சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகள், போட்டியிட்டு வெல்வது சிரமம்.
அதனால்தான், நாம் நம்முடைய பொருளாதார உத்திகளை மாற்றியமைக்கிறோம் – நம்முடைய போட்டித்தன்மையையும் திறனாற்றல்களையும் வலுப்படுத்தி, மிகவும் மாறுபட்ட ஓர் உலகில் நம்முடைய எதிர்காலத்தைக் கைப்பற்றுவதற்கு.
முன்னணி நாடாக இருக்கவேண்டும் என்றால், சிங்கப்பூர் தனிச்சிறப்புடன் திகழவேண்டும். நமது ஒற்றுமை, உறுதிப்பாடு, செயற்றிறம் ஆகிய அனைத்தும் முன் எப்போதும் இல்லாத அளவு வலிமையாக இருக்கவேண்டும்.
நாம் மேலும் வேகமாக, விவேகமாக, புத்தாக்கத்துடன் செயல்படவேண்டும்.
அப்படி என்றால், செயற்கை நுண்ணறிவு, இயந்திரவியல் போன்ற புதிய தொழில்நுட்பங்களை நாம் பயன்படுத்தவேண்டும். நம் மக்கள், ஊழியர்கள், தொழில்கள் என அனைவரும் இவற்றைப் பயன்படுத்தி, நம் போட்டித்தன்மையைக் கூராக்கவேண்டும்.
அதற்கு நாம் துணைபுரியவேண்டும்.
மாற்றம் அதிவேகமாக – சில சமயங்களில், சிரமமாகக்கூட இருக்கலாம். இடையூறுகள் இருக்கும். இந்த மாற்றம் எல்லோருக்கும் எளிதாக இருக்காது.
ஆனால், யாரும் இந்தச் சவால்களைத் தனித்துச் சந்திக்க வேண்டியதில்லை. கடந்த 60 ஆண்டுகளைப் போல, அரசாங்கம் உங்களுக்குத் துணைநிற்கும்.
மறுதிறனுக்கும் திறன் மேம்பாட்டுக்கும் மேலும் பல வாய்ப்புகளை அளிப்போம்.
சமுதாயப் பாதுகாப்பு வலையை வலுப்படுத்துவோம்.
பின்தங்கியுள்ள ஒவ்வொரு சிங்கப்பூரரும் தன்னம்பிக்கையுடன் போராடத் துணைநிற்போம்.
இதனால்தான், ‘முன்னேறும் சிங்கப்பூர்’ இயக்கத்தைத் தொடங்கினோம். நம் சமுதாய இணக்கத்தைப் புதுப்பிப்போம்.
வருங்காலத்தை எதிர்கொள்ள ஒவ்வொரு சிங்கப்பூரருக்கும் நம்பிக்கையும் ஆதரவும் அளிப்போம்.
ஏற்கனவே, நாங்கள் வேலை தேடுவோருக்கான ஸ்கில்ஸ்ஃபியூச்சர் ஆதரவுத் திட்டம் போன்ற புதிய கொள்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
அவ்வகையில் வேலை இழந்தோர் மீண்டு வர, உதவி வருகிறோம்.
குறைந்த வருமான ஊழியர்களையும் குடும்பங்களையும் கைதூக்கிவிட, இன்னும் நிறைய செய்யத் திட்டமிட்டிருக்கிறோம். ஒவ்வொரு சிங்கப்பூரரும், வாழ்க்கையில் அவர்களுடைய தொடக்கம் எதுவாயினும், அவர்கள் வெற்றி பெறவேண்டும்.
அதற்குத் தேவையான, மேலும் அதிகமான வாய்ப்புகளை நாங்கள் உருவாக்கவிருக்கிறோம்.
இது ஒரு கூட்டு முயற்சி. எல்லோரும் பங்காற்றவேண்டும். நாங்கள் தீர்வுகளை உருவாக்கவும், சிந்தனைகளைச் செயல்படுத்தவும், மாற்றத்தைக் ஏற்படுத்தவும் - சமூகக் குழுக்கள், தொழில்கள், தொழிற்சங்கங்கள் – என அனைவருடனும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறோம்.
பரஸ்பர ஆதரவும் ஒருமித்த பொறுப்புணர்வும் மிகவும் முக்கியம். ஏனெனில், சிங்கப்பூரின் வருங்காலத்தை நாம்தான் ஒன்றிணைந்து உருவாக்கவேண்டும்.
சிங்கப்பூர் உணர்வு
இவற்றுக்கெல்லாம் அடிநாதம், ஒருமைப்பாடும் ஒருமித்த பொறுப்புணர்வும் நிறைந்த நம் சிங்கப்பூர் உணர்வு.
சின்னஞ்சிறு தேசம் ஆதலால், நம்மால் பிளவை எதிர்கொள்ள முடியாது. எக்காலத்திலும் ஒற்றுமையே நம் பலமாக இருந்து வந்துள்ளது.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.
இனம், மொழி, மதம் ஆகியவற்றால் நாம் வேறுபட்டிருக்கலாம்.
ஆனால், அவற்றினும் ஆழமான ஒன்று நம்மைப் பின்னிப் பிணைத்துள்ளது – சிங்கப்பூருக்கும் சிங்கப்பூரர்கள் ஒவ்வொருவருக்குமான ஒருமித்த கடப்பாடு.
கடந்த 60 ஆண்டுகளாக, இந்த ஒற்றுமை உணர்வே நம்மை வழிநடத்தி வந்துள்ளது.
இனிவரும் காலங்களில், இது மேலும் முக்கியம் ஆகும்.
இப்போது, நான் பாடாங் திடலிலிருந்து, உங்களுடன் பேசுகிறேன்.
சிங்கப்பூர் வரலாற்றில் இது ஒரு முக்கியமான இடம். 1959ஆம் ஆண்டில், நம் முதல் அதிபர் யூசோப் இஷாக் இங்குதான் சிங்கப்பூரைத் தன்னாட்சி நாடாக அறிவித்தார்.
இதே இடத்தில்தான், 1966ஆம் ஆண்டில், சுதந்திர நாடாக, நம் முதல் தேசிய தின அணிவகுப்பைக் கொண்டாடினோம்.
எஸ்ஜி60 கொண்டாட்டங்களில், இவற்றை நாம் நினைவுகூர்வோம். அதே சமயம், வருங்காலத்தையும் எண்ணிப் பார்ப்போம்.
அதனால்தான், ஒரு சிறப்புக் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்திருக்கிறோம்.
ஆர்ச்சர்ட் நூலகத்தில் நடைபெறும் அக்கண்காட்சியில் சிங்கப்பூரர்கள் வருங்காலம் பற்றிய தங்கள் எண்ணங்களையும் கனவுகளையும் பகிர்ந்துகொள்ளலாம்.
ஏற்கனவே மாணவர்கள் பலரும் இக்கண்காட்சியைக் காண வந்துவிட்டனர்.
இம்மாதத்தின் பிற்பாதியில், பொதுமக்களும் இக்கண்காட்சியைக் காணலாம்.
இக்கண்காட்சியில், பலரின் கனவுகளையும் ஆசைகளையும் நீங்கள் கண்டறியமுடியும்.
அவை ஒவ்வொன்றும் வருங்காலச் சிங்கப்பூருக்கான தொலைநோக்கு சிந்தனையைப் பிரதிபலிக்கின்றன.
நம் இல்லங்கள், பள்ளிகள், சமூகங்கள் என எல்லாவற்றிலும் இக்கனவுகளை நனவாக்குவோம் – நம்பிக்கை நட்சத்திரங்களை மிளிரச் செய்வோம்.
கடந்த 60 ஆண்டில், நாம் மூன்றாம் தர உலகிலிருந்து முதல் தரத்திற்கு முன்னேறியிருக்கிறோம்.
இதற்கு நம் மனவுறுதி, மீள்தீறன், ஒற்றுமை ஆகியவையே காரணம்.
இப்போது நாம் புதிய அத்தியாயத்தில் அடி எடுத்து வைக்கிறோம்.
வலுவான நம்பிக்கை கொண்டு, பிரகாசமான எதிர்காலத்தை நம் வசப்படுத்துவோம் – நமக்காக, நம் பிள்ளைகளுக்காக, இனிவரும் நம் தலைமுறைகளுக்காக! அதற்காக நாம் ஒன்றிணைந்து பாடுபடுவோம்!
இனிய தேசிய தின வாழ்த்துகள்! மாஜுலா சிங்கப்பூரா!
வலுவான நம்பிக்கை கொண்டு, பிரகாசமான எதிர்காலத்தை நம் வசப்படுத்துவோம் – நமக்காக, நம் பிள்ளைகளுக்காக, இனிவரும் நம் தலைமுறைகளுக்காக! அதற்காக நாம் ஒன்றிணைந்து பாடுபடுவோம்! இனிய தேசிய தின வாழ்த்துகள்! மாஜுலா சிங்கப்பூரா!
PM Lawrence Wong
Videos and transcripts
National Day Message 2025 (Malay)
National Day Message 2025 (Mandarin)
Watch more

National Day Message 2024 (Tamil)

National Day Message 2023 (Tamil)
20230808 Min Shanmugam NDM2023_feature jpg

National Day Message 2022 (Tamil)