புவான் நூர் ஆயிஷா முகமது சலீம் காலமானார்
Prime Minister's Office
Governance
22 April 2025
PMO press release in Tamil on the passing of Puan Noor Aishah Mohammad Salim on 22 April 2025.
This article has been migrated from an earlier version of the site and may display formatting inconsistencies.
சிங்கப்பூரின் முதல் அதிபரான திரு யூசோப் இஷாக் அவர்களின் துணைவியார், புவான் நூர் ஆயிஷா முகமது சலீம் (Puan Noor Aishah Mohammad Salim) அவர்களின் மறைவு குறித்து பிரதமரும் அவருடைய அமைச்சரவை சகாக்களும் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கின்றனர். அவர்கள் திருவாட்டி புவான் நூர் ஆயிஷாவின் குடும்பத்திற்குத் தங்கள் ஆழ்ந்த இரங்கலை இச்சிரமமான தருணத்தில் தெரிவித்துக்கொள்கின்றனர். திருவாட்டி புவான் நூர் ஆயிஷா சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையில் 22 ஏப்ரல் அன்று காலை 4.28 மணிக்கு அமைதியாகக் காலமானார். அவருக்கு வயது 91.
திருவாட்டி புவான் நூர் ஆயிஷா 1959 முதல் 1970 வரை, அதிபர் யூசோப் இஷாக்கின் பதவிக்காலம் முழுவதும் அவருக்கு உற்ற துணையாக விளங்கினார். சிங்கப்பூர் வரலாற்றில் புதிய தேசத்தை நிர்மாணிக்கும் சவால்கள் நிறைந்திருந்த முக்கியமான காலகட்டம் அது. அவர் அறப்பணிகளில் மிகுதியாக ஈடுபட்டு வந்ததோடு, பல்வேறு சமுதாயப் பணிகளுக்கும் தலைமையேற்றிருந்தார் – குறிப்பாக, பெண்கள், குழந்தைகள், வசதி குறைந்தோர் ஆகியோருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார். அவருடைய கருணை, தன்னடக்கம், அளப்பரிய அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவை எல்லாத் தரப்பு சிங்கப்பூரர்களின் மரியாதைக்குப் பாத்திரமானது. அதனால், இன்றுவரை அவர் நமக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகிறார். அவர் ஆற்றிய பங்களிப்புகளின் பேரில், தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ், 1971ஆம் ஆண்டில், அவருக்கு சிறப்புக் கெளரவ பதக்கத்தை வழங்கிச் சிறப்பித்தது.
அவருடைய பங்களிப்புகளின் பேரில், அரசாங்கம் அவர்தம் குடும்பத்திற்கு இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகளில் துணைபுரியும்.
திருவாட்டி புவான் நூர் ஆயிஷா அவர்களின் நல்லுடல் கிராஞ்சி அரசு இடுகாட்டில் இன்று பின்னேரத்தில், காலஞ்சென்ற அதிபர் யூசோப் இஷாக் அருகில் அடக்கம் செய்யப்படும். அரசாங்கம், திருவாட்டி புவான் நூர் ஆயிஷா அவர்களின் நல்லுடல் சடங்குபூர்வ பீரங்கி வாகனத்தில் ஏற்றப்பட்டு, பால்வி பள்ளிவாசலிலிருந்து கிராஞ்சி அரசு இடுகாட்டிற்கு எடுத்துச்செல்லப்படும் உயரிய மரியாதையை அவருக்கு வழங்கிச் சிறப்பிக்கும்.
* * * * *
பிரதமர் அலுவலகம்
சிங்கப்பூர்
22 ஏப்ரல் 2025
Explore related topics
