May Day Message 2025 (Tamil)

PM Lawrence Wong | 1 May 2025

Prime Minister and Minister for Finance Lawrence Wong's May Day Message 2025, translated to Tamil. Scroll down for the links to read the Message in English, Malay, and Mandarin.

 

சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆகின்றன. நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பி பார்த்து நன்றியுணர்வு கொள்ளும் தருணம் இது.

சிங்கப்பூரை நாம் ஒன்றிணைந்து, ‘மூன்றாம் உலக நாடு’ என்ற நிலையிலிருந்து, ‘முதலாம் உலக நாடு’ என்ற நிலைக்கு மாற்றியமைத்தோம். பல ஆண்டுகளாக, நம் ஊழியர்கள் இந்தத் தேசத்தை உருவாக்க உதவினர். சிங்கப்பூர் முன்னேறியபோது, அவர்களும் நமது வெற்றியின் பலன்களைப் பகிர்ந்து கொண்டனர்.

வேலைகள் மேம்பட்டதோடு, பொதுவாகச் சம்பளங்களும் உயர்ந்துள்ளன. பெரும்பாலான ஊழியர்கள் இப்போது தங்கள் சொந்த வீடுகளில் வசிக்கின்றனர்; சிங்கப்பூரின் வெற்றியில் உண்மையான ஒரு பங்கைக் கொண்டுள்ளனர். கல்வி, சுகாதாரப் பராமரிப்பு, ஓய்வுக்காலம் என்று அவர்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் வலுவான ஆதரவு முறையை நம்பலாம்.

ஒவ்வொரு சிங்கப்பூரருக்கும் அதிக உறுதியும் மன நிம்மதியும், எதிர்காலத்திற்கான புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையும் உள்ளது.

ஆனால், சிங்கப்பூர் தொடர்ந்து மாறிவரும், மேம்பாடு கண்டுவரும் ஒரு நாடு. வளர்ச்சிக்கான நம் பணிகள் என்றும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். கொள்கைகளை மேம்படுத்துவது, நம் செயல்முறைகளை வலுப்படுத்துவது, ஊழியர்களை ஊக்கப்படுத்துவது ஆகியவை உள்பட, அனைத்திலும் மேலும் சிறப்பாகச் செய்ய நாங்கள் தொடர்ந்து உழைக்கிறோம்.

இன்று, நாம் ஒரு இக்கட்டான கட்டத்தில் உள்ளோம். நம்மைச் சுற்றியுள்ள உலகம் மாறிக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் அண்மைய வரி கட்டண அறிவிப்புகள் உலகளவிலான நம்பிக்கையை உலுக்கியுள்ளன. ஏற்றுமதிகளுக்கான தேவை குறைந்து வருகிறது. முதலீடுகள் மெதுவடைந்துள்ளன. நமது சொந்தப் பொருளாதாரம் நெருக்கடியின் தாக்கத்தை உணர்கிறது. வர்த்தக, தொழில்துறை அமைச்சு, 2025-க்கான நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி முன்னுரைப்பை 0-2% ஆக கீழ்நோக்கி திருத்தியுள்ளது.

நாம் எதிர்நோக்கும் இச்சவால்கள் குறுகியகாலத் தடைகள் அல்ல. பல தாக்கங்களை எதிர்கொள்ளும் நிலையில் நாம் இருக்கிறோம்: திறந்த வர்த்தகம், உலகளாவிய ஒத்துழைப்பு, ஊகிக்கக்கூடிய விதிமுறைகளின் அடிப்படையிலான ஒழுங்கு ஆகியவை சரிந்துள்ளன – இவை அனைத்தும் நம் வெற்றியைச் சாத்தியமாக்கிய அதே அம்சங்கள் ஆகும்.

கடந்த சில வாரங்களில், நான் பல தொழிற்சங்கத் தலைவர்களைச் சந்தித்துள்ளேன். வேலைகள், வருமானங்கள் ஆகியவை குறித்து அவர்கள் கவலைப்படுகின்றனர். முதிர்ச்சியடைந்த ஊழியர்கள் ஆட்குறைப்புக் குறித்தும், அதைத் தொடர்ந்து புதிய வேலை தேடுவதில் ஏற்படக்கூடிய சிரமம் குறித்தும் பதற்றப்படுகின்றனர். புதிய பட்டதாரிகள் தங்களுக்கு நல்ல வேலைகள் கிடைக்குமா என்றும் தாங்கள் விரும்பும் எதிர்காலத்தைத் தங்களால் உருவாக்க முடியுமா என்றும் வினவுகின்றனர். பரவலாய் நிலவும் இப்பதற்றம் உண்மையானது. பணயம் அதிகம் உள்ளது.

ஆனால், நாம் எப்போதும் போல் ஒன்றிணைந்து செயல்பட்டால், இந்தச் சவால்களைத் திடமான தன்னம்பிக்கையுடனும் மனவுறுதியுடனும் நம்மால் எதிர்கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன்.

தொழிலாளர் இயக்கம் நம் வலிமைக்கான முக்கியத் தூணாகத் தொடர்ந்து இருந்துள்ளது. பல்லாண்டு காலமாக, நம் தொழிற்சங்கங்கள், முதலாளிகள், அரசாங்கம் ஆகியவை, ஊழியர்களின் நலன்களை முன்னிறுத்துவதிலும், முக்கிய மேம்பாடுகளை வழிநடத்துவதிலும் நெருக்கத்துடன் செயல்பட்டுள்ளன. அம்முயற்சிகளில் பின்வருவன அடங்கும்: மேலும் நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகள். வேலை செய்யும் பெற்றோருக்குக் கூடுதல் விடுப்பு. பணியிடைக்கால ஊழியர்களின் திறன் மறுபயிற்சிக்கும் மேம்பாட்டுக்கும் கூடுதல் வாய்ப்புகள். தங்கள் வேலைகளில் பின்னடைவுகளை எதிர்நோக்குவோருக்குக் கூடுதல் ஆதரவு. தொழில் உருவாக்கத்துக்கும், ஊழியரணி உருமாற்றத்துக்கும் உதவுவதற்காக, தற்போதுள்ள 2,700க்கும் மேற்பட்ட நிறுவனப் பயிற்சிக் குழுக்களை அதிகரித்தல்.

இவை முக்கிய முன்னெடுப்புகள்.

ஆனால், அதையும்விட முக்கியமான, விலைமதிப்பற்றதொன்று – நமது வலுவான முத்தரப்புப் பங்காளித்துவம் ஆகும். நமது முத்தரப்புக் கட்டமைப்பு தனித்துவம் வாய்ந்தது; விலைமதிப்பற்றது. தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ், மக்கள் செயல் கட்சி ஆகியவற்றின் இடையிலான ஒத்திசைவுமிகுந்த உறவில் அது வேரூன்றியது; வேலைகளுக்கு உந்துசக்தியாக விளங்கும் முதலாளிகளுக்கும் நிறுவனங்களுக்கும் உடனான தொடர்புகளை அது தன் அடித்தளமாகக் கொண்டுள்ளது.

நாங்கள் கட்டிக்காத்துள்ள ஆழமான நம்பிக்கையின் நிமித்தம், நாங்கள் தொடர்ந்து உறுதி கொண்டுள்ளோம்—சுருங்கிவரும் வாய்ப்புகளுக்குப் பங்குபோடும் போக்கைத் தேர்ந்தெடுக்காமல் வாய்ப்புகளை வளர்க்க ஒன்றிணைந்து செயல்பட்டு, வளர்ச்சியின் பலன்களைச் சிங்கப்பூரர்களுடன் நியாயமான முறையில் பகிர்வோம் என்று.

இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டத்தில், நம் குடும்பங்களுக்கும், நம் ஊழியர்களுக்கும், நம் தொழில்களுக்கும், விரிவான ஆதரவுத் தொகுப்புத் திட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

நாங்கள் அதோடு நிறுத்தப்போவதில்லை. தற்போது நிலவும் நிச்சயமற்ற பொருளியல் சூழலைக் கருத்தில்கொண்டு, துணைப் பிரதமர் கான் கிம் யொங் தலைமையில், அரசாங்க, தொழிற்சங்க, வர்த்தகங்களின் முக்கியத் தலைவர்கள் கொண்ட பொருளாதார மீள்திறன் பணிக்குழு ஒன்றை நாங்கள் அமைத்திருக்கிறோம்.

நாங்கள் மாற்றங்களை அணுக்கமாகக் கண்காணித்து வருகிறோம். அதோடு, நிலவரத்துக்கேற்ப பதில் நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளவும், கூடுதலாகப் பணியாற்றவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்; குறிப்பாக நிலைமை மோசமடைந்தால்.

அதே நேரத்தில், நாம் முன்னோக்கிப் பார்க்கிறோம்; புதிய பொருளாதாரம் குறித்த சவால்களுக்கு நம் ஊழியர்களைத் தயார்படுத்துகிறோம்; தொழில் நிறுவனங்கள் தங்களை மாற்றியமைத்துக்கொண்டு வளர்ச்சி காண உதவுகிறோம். நம் மக்களின் மேம்பாடு குறித்து நாங்கள் தொடர்ந்து முதலீடு செய்வோம் – ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட்டத்தை வலுப்படுத்துதல், வாழ்நாள் கற்றல் வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், மேம்பட்ட வேலைத்திறனைப் பெற ஒவ்வோர் ஊழியரின் ஆற்றல்களை வளர்த்தல் ஆகியவை உள்பட. தொழில்களும் ஊழியர்களும் புதிய சந்தைகளைப் பயன்படுத்தி, புதிய வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ள நாங்கள் உலகளாவிய கட்டமைப்பை வலுப்படுத்தி விரிவாக்குவோம்.

வரும் மாதங்களில், ஆண்டுகளில், உலகம் எப்படி இருக்கும் என்பதை யாராலும் முன்னுரைக்க முடியாது. ஆனால் இது மட்டும் நிச்சயம்: மாற்றங்கள் நிறைந்த இந்த உலகில், உலகளாவிய போட்டித்தன்மை அதிகரிக்கும், சவால்கள் மேலும் சிக்கலானவையாக இருக்கும், தவறுகளைச் சரிசெய்துகொள்ளும் வாய்ப்புகளும் குறைவாகவே இருக்கும்.

கற்பிக்கப்பட்ட விடைகள் ஏதும் இருக்காது. ஆனால், சிங்கப்பூர் என்றுமே முன்னோக்கிய தன் சொந்தப் பாதையை உருவாக்கியிருக்கிறது. நமது ஒற்றுமை, ஒருமைப்பாடு காரணமாக, நாம் இதை மீண்டும் செய்வோம்.

கொவிட்-19 கிருமித்தொற்றை நாம் கையாண்ட முறையைப் பாருங்கள். அது முன் எப்போதும் கண்டிராத நெருக்கடி. முதலாளிகளும் தொழிற்சங்கங்களும் ஊழியர்களும் அரசாங்கமும் ஒன்றாக நின்றதால், நெருக்கடியைக் கடந்து வரமுடிந்தது.

ஒன்றிணைந்து நாம் கொவிட்-19 கிருமித்தொற்றிலிருந்து மீண்டெழுந்து வந்துவிட்டோம். இன்றைய நிச்சயமற்ற சூழலிலும் அதே உணர்வு நமக்குத் துணை நிற்கும்.

எங்கள் எல்லா செயல்களுக்கான மையப்புள்ளியே நம் ஊழியர்கள்தான். நீங்கள்தான் சிங்கப்பூரை அன்றாடம் தொடர்ந்து இயங்க உதவுகிறீர்கள். கைகள், இதயங்கள், மனங்கள் – எவற்றைப் பயன்படுத்தி வேலை செய்தாலும், அத்தியாவசியச் சேவைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், ஆய்வுக்கூடங்கள் – எந்தத் துறையில் பணியாற்றினாலும், உங்கள் அர்ப்பணிப்பு உணர்வும் விடாமுயற்சியும்தான் நம் நாட்டிற்குச் சக்தியளிக்கிறது.

நீங்கள் இல்லையெனில், உங்கள் மன உறுதியும் அர்ப்பணிப்பு உணர்வும், ஒருங்கிணைந்த நோக்கமும் இல்லையெனில், சிங்கப்பூரும் இல்லை. நீங்கள் தனித்துவம் வாய்ந்தவர்களாக இருப்பதால்தான் சிங்கப்பூரும் தனித்துவம் பெற்றிருக்கிறது.

இந்த மே தினத்தன்று, நீங்கள் ஆற்றிய பங்களிப்புகளைக் கௌரவிக்கிறோம். மேலும் சிறந்த, நியாயமான, அனைவரையும் உள்ளடக்கிய சிங்கப்பூரை உருவாக்கும் பயணத்தில் உங்களுடன் துணை நிற்கிறோம் என்ற உறுதிமொழியைப் புதுப்பித்துக்கொள்கிறோம். இந்தத் தலைமுறைக்காகவும் அடுத்த தலைமுறைக்காகவும் ஒன்றிணைந்து சிங்கப்பூரைத் தொடர்ந்து ஒளிரவைப்போம்.

மே தின நல்வாழ்த்துகள்!

TOP