- Home
- National Awards
- National Awards Investiture Citations from 2020
- National Awards Investiture Citations 2025
- 2025 National Awards Investiture Citations (Tamil)
2025 National Awards Investiture Citations (Tamil)
Read more on the citations.
The Order Of Nila Utama
நீல உத்தம விருது
1. திரு டான் கீ பாவ்
முன்னாள் தலைவர்,
சாங்கி விமான நிலையக் குழுமம்
புகழுரை
தொலைநோக்குச் சிந்தனையாளரான திரு டான் கீ பாவ் அவர்களின் பங்களிப்புகள் சிங்கப்பூரின் நீர்வளப் பாதுகாப்பு, ரயில்துறை நம்பகத்தன்மை, விமானப் போக்குவரத்து மையத்தின் போட்டித்தன்மை ஆகியவற்றைப் பெரிதளவில் மெருகேற்றியுள்ளன.
“சிங்கப்பூரின் நீர்வளப் பாதுகாப்பை உறுதிசெய்ய நாம் ஆன அனைத்தையும் செய்யவேண்டும்,” என்றார் சிங்கப்பூரின் முதல் பிரதமரான திரு லீ குவான் யூ. இந்த இலக்கை ஈடுசெய்யப் பாடுபட்டத் துணிகரமிக்க வெகு சில பொதுத்துறை ஊழியர்களில் திரு டானும் ஒருவர். சிங்கப்பூரின் தேசிய தண்ணீர் அமைப்பான பொதுப் பயனீட்டுக் கழகத்தின் தலைவராகப் பணியாற்றிய காலக்கட்டத்தில், அவர் துணிகரமும் புத்தாக்கமும் கொண்டு சிங்கப்பூரின் நீர்வளப் பாதுகாப்பை வலுப்படுத்தினார். நியூவாட்டர் (NEWater) போன்ற பேரளவிலான தண்ணீர் மறுசுழற்சித் திட்டங்களை வழிநடத்திய அவர், மரீனா அணைக்கட்டு உள்ளிட்ட அதிமுக்கியமான நீண்டகால உள்கட்டமைப்புத் திட்டங்களின் மேம்பாட்டையும் மேற்பார்வையிட்டார்.
சாங்கி விமான நிலையக் குழுமத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்த திரு டான், கொவிட்-19 கிருமிப்பரவல் காலத்தில், அதனைத் திறம்பட வழிநடத்தினார். அவருடைய அறிவாற்றல் மிகுந்த தலைமைத்துவம், சாங்கி விமான நிலையம் அதன் பிரதான நோக்கத்தில் – விமானப் போக்குவரத்து மையமாகச் செயல்படுதல் – தொடர்ந்து கவனம் செலுத்துவதை உறுதிசெய்ததுடன், கொவிட் கிருமிப்பரவலுக்குப் பிந்தைய காலத்தில், குழுமம் விரைவாகவும் முழுமையாகவும் மீண்டுவரப் பெருமளவு துணைபுரிந்தது. அவருடைய வழிகாட்டுதலில் சாங்கி விமான நிலையக் குழுமம் புத்தாக்க, நீடித்த நிலைத்தன்மை சார்ந்த முயற்சிகளைத் துரிதப்படுத்தியது; செயற்பாட்டுத் திறனாற்றலையும் மேம்படுத்தியது; சாங்கி ஈஸ்ட் திட்டப்பணி, விமான நிலையத்தின் ஐந்தாம் முனைய வடிவமைப்பு உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த மேம்பாடுகளையும் குழுமம் மேற்கொண்டது.
நிலப் போக்குவரத்து ஆணையம், போக்குவரத்து அமைச்சு ஆகியவற்றின் ஆலோசகராக, சிக்கலான தொழில்நுட்ப, கட்டமைப்புசார் சவால்களுக்குத் திரு டான் அறிவார்ந்த ஆலோசனைகளை நல்கியுள்ளார். ஒருங்கிணைந்த ரயில்துறைக்கான நம்பகத்தன்மை குறித்த இலக்கை வகுப்பதில், ரயில் நிறுவனங்களை ஒன்றிணைப்பதில் அவர் முக்கியப் பங்காற்றினார்.
பல்வேறு முக்கியத் துறைகளில் சிங்கப்பூருக்கு ஆற்றிய அளப்பரிய பங்களிப்பின் பேரில், திரு டான் கீ பாவ் அவர்களுக்கு நீல உத்தம விருது வழங்கிச் சிறப்பிக்கப்படுகின்றது.
The Distinguished Service Order
சிறப்புப் பணி விருது
2. பேராசிரியர் லுய் பாவ் சுவென்
தெமாசெக் தற்காப்புப் பேராசிரியர்,
தெமாசெக் தற்காப்புக் கட்டமைப்பு
ஆய்வுக்கழகம்
தலைவர்,
சிங்கப்பூர் அணுசக்தி ஆராய்ச்சி,
பாதுகாப்புக் கழகம்
முன்னாள் தலைவர்,
மேம்பாட்டுத் திட்டப்பணிகளுக்கான
ஆலோசனைக்குழு, நிதிஅமைச்ச
புகழுரை
பேராசிரியர் லுய் பாவ் சுவென் நாற்பது ஆண்டுக்கும் மேலாக தற்காப்பு அமைச்சில் அர்ப்பணிப்பு உணர்வுடன் மிகச் சிறந்த முறையில் சேவையாற்றியுள்ளார். சிங்கப்பூரின் முதல் தலைமைத் தற்காப்பு அறிவியலாளராக, நாட்டின் தற்காப்புத் திறனாற்றல்கள், கட்டமைப்புகள் ஆகியவற்றில் உருமாற்றம் மிகுந்த மேம்பாடுகளை அவர் வழிநடத்தியுள்ளார்.
அமைப்புசார் சிந்தனையை முன்னிறுத்தும் பேராசிரியர் லுய் தமது பணி ஓய்வுக்காலத்திற்குப் பின்னரும், தற்காப்புக்கு அப்பாற்பட்ட நகரத் திட்டமைப்பு – மேம்பாடு, அறிவியல் – தொழில்நுட்பம், கல்வி உள்ளிட்ட பல துறைகளில் ஆற்றல்மிகு வகையில் பங்காற்றியுள்ளார். நிதி அமைச்சின் மேம்பாட்டுத் திட்டப்பணிகளுக்கான ஆலோசனைக் குழுவின் தலைவராகப் பொறுப்பு வகித்த அவர், சாங்கி விமான நிலையத்தின் ஐந்தாம் முனையம், துவாஸ் துறைமுகம், கடலோரப் பாதுகாப்புக் கட்டமைப்புகள் உள்ளிட்ட முக்கியமானப் பொது உள்கட்டமைப்புத் திட்டப்பணிகளின் செலவுத்தொகைகளை மறு-ஆய்வு செய்வதில் உத்திபூர்வத் தலைமைத்துவத்தை வழங்கினார்.
சிங்கப்பூர் அணுசக்தி ஆராய்ச்சி, பாதுகாப்புக் கழகம், பொதுப் பயனீட்டுக் கழகத்தின் திட்டப்பணி மறு-ஆய்வுக் குழு ஆகியவற்றின் தலைவராகத் திகழும் பேராசிரியர் லுய், அணுசக்தி அறிவியல், நீர்வளம் சார்ந்த நீடித்த நிலைத்தன்மை ஆகியவற்றில் சிங்கப்பூரின் நிபுணத்துவ, ஆய்வியல் திறனாற்றல்களை மேம்படுத்தியுள்ளார். தெமாசெக் தற்காப்புக் கட்டமைப்புக் கழகத்தில், பல தலைமுறைகளைச் சேர்ந்த தற்காப்பு அறிவியலாளர்கள், கட்டமைப்புப் பொறியாளர்கள் ஆகியோருக்குக் கசடறக் கற்பித்து ஊக்கமளித்துள்ளார். உள்துறை, தேசிய வளர்ச்சி, வெளியுறவு உள்ளிட்ட பல்வேறு அமைச்சுகளுக்கும் தேசிய ஆய்வு நிறுவனத்திற்கும் ஆலோசகராகவும் அவர் சேவையாற்றியுள்ளார்.
சிங்கப்பூருக்கான அவருடைய புரட்சிகரமான பங்களிப்புகளின் பேரில், பேராசிரியர் லுய் பாவ் சுவென் அவர்களுக்குச் சிறப்புப் பணி விருது வழங்கி கௌரவிக்கப்படுகின்றது.
The Distinguished Service Order (Posthumous)
சிறப்புப் பணி விருது
3. அமரர் லிம் ஸு பெங்
ஓவியர்
புகழுரை
காலஞ்சென்ற திரு லிம் ஸு பெங், சிங்கப்பூரின் ஓவியக்கலை வரலாற்றில் ஒரு பிதாமகர். சீன மை ஓவியம், கையெழுத்துக்கலை உள்ளிட்ட துறைகளில் முன்னோடியாற்றல் மிகுந்த அவரது பங்களிப்புகள் இன்றளவும் பெருமிதத்துடன் நினைவுகூரப்படுகின்றன.
திரு லிம் பாரம்பரியச் சீனக் கையெழுத்துக்கலையில் தனித்துவமான தமது “சீரற்ற கையெழுத்து” பாணி, புத்தாக்கமிகு முறையில் வண்ணங்களை ஒருங்கிணைக்கும் அணுகுமுறை ஆகியவற்றைக் கொண்டு, இக்கலையில் புரட்சிமிகு மாற்றங்களை முன்மொழிந்தார். அவருடைய புகழ்பெற்ற “பழம்பெரும் சிங்கப்பூர்த் தொடர்” படைப்பில், சைனாடவுன், சிங்கப்பூர் ஆறு ஆகியவற்றின் இயல்புநிலையைச் சித்திரிக்கும் வகையில், சிங்கப்பூரின் மரபுடைமையை வரலாற்று அடிப்படையில் திறம்படச் சித்திரித்திருந்தார். இத்தகைய உணர்ச்சிகரமான படைப்புகள், நாட்டின் மாற்றத்தை ஆவணப்படுத்தி, சிங்கப்பூரர்கள் அவர்கள்தம் பண்பாட்டு வேர்களுடன் கொண்டுள்ள தொடர்பை ஆழப்படுத்தின.
அர்ப்பணிப்பு உணர்வுமிக்க கல்வியாளராகவும் திகழ்ந்த திரு லிம், ஸின்மின் பள்ளியின் முதல்வராகப் பொறுப்பு வகித்த அதேவேளையில், தமது கலையார்வத்தையும் சமச்சீராகப் பின்பற்றி வந்தார். 2022ஆம் ஆண்டில், அவர் ‘The Art Abode’ என்றழைக்கப்படும் லிம் ஸு பெங் காட்சிக்கூடத்தைத் தோற்றுவித்து, தமது படைப்புகள் தொடர்ந்து வருங்காலத் தலைமுறையினருக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிப்பதை உறுதிசெய்தார்.
திரு லிம் அவர்களின் ஓவியப் படைப்புகள் பிரசித்தி பெற்ற Saatchi காட்சிக்கூடம், Grand Palais அரும்பொருளகம் உள்ளிட்ட இடங்களில் உலகம் முழுவதும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சீனாவின் தேசிய ஓவிய அருங்காட்சியகத்திலும், லியூ ஹைஸு ஓவிய அருங்காட்சியகத்திலும் தனிப்பட்ட கண்காட்சிகளை நடத்திய முதல் சிங்கப்பூரராகவும் திரு லிம் திகழ்கிறார்.
சிங்கப்பூரின் காட்சிக்கலைகளுக்கான அவருடைய தன்னிகரற்ற பங்களிப்புகளின் பேரில், காலஞ்சென்ற திரு லிம் ஸு பெங் அவர்களுக்குச் சிறப்புப் பணி விருது வழங்கிச் சிறப்பிக்கப்படுகின்றது.
The Meritorious Service Medal
பாராட்டுப் பணிப் பதக்கம்
4. திரு சான் ஹெங் கீ
நிரந்தரச் செயலாளர் (தற்காப்பு),
நிரந்தரச் செயலாளர்,
(பிரதமர் அலுவலகம்)
(சிறப்புப் பொறுப்புகள்)
புகழுரை
தற்காப்பு அமைச்சின் நிரந்தரச் செயலாளராக (தற்காப்பு), சிங்கப்பூரின் தேசிய அளவிலான தற்காப்பு நலன்களையும் திறனாற்றல்களையும் மேம்படுத்துவதில், தலைமைத்துவ நிலையில் திரு சான் ஹெங் கீ முக்கியப் பங்காற்றியுள்ளார்.
அவர் இருதரப்புத் தற்காப்பு உறவுகளை வலுப்படுத்தியதோடு, பன்னாட்டுத் தற்காப்புத் தளங்களில் சிங்கப்பூரின் பங்களிப்புகளையும் மேம்படுத்தினார். சிங்கப்பூர் ஆயுதப் படையின் மின்னிலக்க, உளவுத்துறைப் படையை நிறுவுவதில் திரு சான் முக்கியப் பங்காற்றினார். மேலும், தேசிய சேவையாளர்களின் பங்களிப்புகளையும் அனுபவங்களையும் மேம்படுத்துவதற்கான தேசிய சேவைக் கொள்கைகள், சேவைகள் ஆகியவற்றின் மறு-ஆய்வை வழிநடத்துவதிலும் அவருடைய பங்கு குறிப்பிடத்தக்கது. அவருடைய தலைமைத்துவத்தின்கீழ், முழுமைத் தற்காப்பு புதுப்பிக்கப்பெற்று, சிங்கப்பூரர்களை நெருக்கடி காலங்களுக்கும் இடையூறுகளுக்கும் மேம்பட்ட வகையில் ஆயத்தபடுத்துவதற்கான எஸ்ஜி தயார் (SG Ready) பயற்சியும் அறிமுகப்படுத்தப்பட்டது.
முன்னதாக, சுகாதார அமைச்சின் நிரந்தரச் செயலாளராகவும் திரு சான் பொறுப்பு வகித்திருந்தார். அப்போது அவர் சுகாதாரப் பராமரிப்புத் துறையானது, ஒருங்கிணைந்த மூன்று வட்டாரச் சுகாதாரக் குழுமங்களாக மாற்றியமைக்கப்படும் முயற்சிகளை வழிநடத்தினார். மேலும், தேசிய அளவிலான கேர்ஷீல்டு லைஃப் திட்டத்தின் உருவாக்கத்தையும் அவர் மேற்பார்வையிட்டார். அதற்கும் முன்னர், சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சில் பணியாற்றிய அவர் சமூகச் சேவை அலுவலகங்கள், பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு ஆகியவற்றையும் நிறுவினார்.
சிங்கப்பூருக்குத் திரு சான் ஹெங் கீ ஆற்றியுள்ள பல்வேறு பங்களிப்புகளின் பேரில், அவருக்குப் பாராட்டுப் பணிப் பதக்கம் வழங்கி கெளரவிக்கப்படுகின்றது.
The Meritorious Service Medal
பாராட்டுப் பணிப் பதக்கம்
5. திரு ஜனதாஸ் தேவன்
துணைச் செயலாளர்,
பிரதமர் அலுவலகம்
மூத்த ஆலோசகர்,
தகவல், மின்னிலக்க மேம்பாட்டு
அமைச்சு
புகழுரை
பிரதமர் அலுவலகத்தின் துணைச் செயலாளர், முதல் தலைமை அரசாங்கத் தொடர்பு அதிகாரி உள்ளிட்ட பொறுப்புகளின் வாயிலாக, பொதுச் சேவைத்துறையின் தொடர்புக் கட்டமைப்புகளை திரு ஜனதாஸ் தேவன் மாற்றியமைத்துள்ளார்.
அவர், அரசாங்கம் முழுமைக்குமான ஒருங்கிணைப்பு முயற்சிகளை வழிநடத்தினார்; எந்நேரமும் செயல்படக்கூடிய (24/7) தேசிய செயல்பாட்டு நிலையத்தை நிறுவினார்; ஆய்வு, தரவுப் பகுப்பாய்வு உள்ளிட்ட துறைகளில் திறனாற்றல்களை மேம்படுத்தினார். கல்வி, பயிற்சி ஆகியவற்றில் மீளாப் பற்றுகொண்ட திரு தேவன், பொதுச் சேவை அதிகாரிகள் அடிப்படைத் தொடர்புத் திறன்களைக் கொண்டிருக்கவேண்டி, அரசாங்கத் தொடர்புப் பயிற்சிக்கழகத்தைத் தோற்றுவித்தார். அரசாங்கத் தொடர்புத்துறையில் அவருடைய தலைமைத்துவம், கொவிட்-19 கிருமிப்பரவல் காலகட்டத்தில் பொதுமக்களின் நம்பிக்கையைப் பேணிக் காப்பதில் முக்கியப் பங்கு வகித்தது.
கொள்கை ஆய்வு, அறிவுசார் தலைமைத்துவம் உள்ளிட்ட துறைகளில் திரு தேவன் பங்களித்துள்ளார். கொள்கை ஆய்வுக்கழகத்தின் இயக்குநராக, ‘சிங்கப்பூர் பார்வை’ (Singapore Perspectives) மாநாட்டை, சிங்கப்பூரின் முதன்மைக் கொள்கைக் கருத்தரங்காக உருமாற்றியதோடு, பிரசித்தி பெற்ற எஸ் ஆர் நாதன் வல்லுநர் திட்டத்தையும் துவக்கி வைத்தார். சிங்கப்பூர் அனைத்துலக அறக்கட்டளையின் தலைவராக, அவர் உலகளாவிய பங்காளித்துவங்களையும் கட்டமைப்புகளையும் விரிவுபடுத்தினார்.
திரு ஜனதாஸ் தேவன் சிங்கப்பூருக்கு ஆற்றிய தலைசிறந்த பங்களிப்புகளின் பேரில், அவருக்குப் பாராட்டுப் பணிப் பதக்கம் வழங்கி கெளரவிக்கப்படுகின்றது.
The Meritorious Service Medal
பாராட்டுப் பணிப் பதக்கம்
6. திருவாட்டி யூலீன் கோ யூ கியாங்
முன்னாள் தலைவர், SATS
புகழுரை
SATS லிமிடெட் நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்த திருவாட்டி யூலீன் கோ யூ கியாங், முன்னணி விமானப் போக்குவரத்து நடுவமாகச் சிங்கப்பூரின் நிலையை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
தொலைநோக்குச் சிந்தனை கொண்ட அவருடைய தலைமைத்துவம் SATS நிறுவனம், சாங்கி விமான நிலையம் ஆகியவற்றின் சேவை உன்னதம், மீள்திறன், நீடித்த வளர்ச்சி ஆகியவற்றுக்குப் பங்களித்தது. கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில், முக்கியச் சேவைகளையும் விநியோகத் தொடர்களையும் பாதுகாக்கும் பொருட்டு அரசாங்கம், தொழில்துறை, தொழிற்சங்கங்கள் ஆகியவற்றுடன் அணுக்கமாகப் பணியாற்றி, சிங்கப்பூரின் முத்தரப்பு ஆற்றலைத் திறம்பட வெளிப்படுத்தினார். சாங்கி விமான நிலையம் கிருமிப்பரவலிலிருந்து மேலும் வலிமையுடன் மீண்டெழுவதற்கு, அவருடைய தீர்க்கமான தலைமைத்துவம் துணைநின்றது.
விமானப் போக்குவரத்து துறைக்கு அப்பால், திருவாட்டி கோ கல்வித்துறைக்கும் குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றியுள்ளார். நார்த்லைட் பள்ளி ஆளுநர் குழுவின் முதல் தலைவரான அவர், நடைமுறைசார், பயன்முறைக் கற்றல் சூழல்களில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கான கல்விப்பாதைகளை ஆதரித்தார். சிங்கப்பூர்ச் சீனப் பெண்கள் பள்ளியின் மேலாண்மைக் குழுத் தலைவராகவும், சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தின் சின்னமன் கல்லூரியின் தலைவராகவும் அவர் சேவையாற்றியுள்ளார்.
திருவாட்டி யூலீன் கோ யூ கியாங் அவர்கள், சிங்கப்பூரின் விமானப் போக்குவரத்து, கல்வித்துறை ஆகியவற்றுக்கு ஆற்றிய தலைசிறந்த பங்களிப்புகளின் பேரில், அவருக்குப் பாராட்டுப் பணிப் பதக்கம் வழங்கி கெளரவிக்கப்படுகின்றது.
The Meritorious Service Medal
பாராட்டுப் பணிப் பதக்கம்
7. முனைவர் நோயலீன் ஹெஸர்
சமூக அறிவியலாளர்
புகழுரை
ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் உதவித் தலைமைச் செயலாளராகப் பணியாற்றிய முதல் சிங்கப்பூர் – தென்கிழக்காசியப் பெண்மணி, முனைவர் நோயலீன் ஹெஸர்.
ஐக்கிய நாட்டு நிறுவனத்தில் இருபது ஆண்டுக்கும் மேலாகத் தன்னிகரற்ற வகையில் சேவையாற்றிய காலக்கட்டத்தில், பெண்ணுரிமை, அமைதி, நீடித்த நிலைத்தன்மையுடைய வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்த, முனைவர் ஹெஸர் குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றினார். ஆசிய, பசிபிக் பகுதிகளுக்கான ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் பொருளாதார, சமூக ஆணையத்தின் (ESCAP) நிர்வாகச் செயலாளராகப் பொறுப்பு வகித்த முனைவர் ஹெஸர், நீடித்த நிலைத்தன்மையுடைய வளர்ச்சிக்கான வட்டாரக் கொள்கைகளை வகுத்ததோடு, பேரிடர் நிர்வாகம், பருவநிலை மீள்திறன், சமுதாயச் சமத்துவம் ஆகியவற்றுக்கான ஒத்துழைப்பையும் ஊக்குவித்தார். ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் மாதர் மேம்பாட்டு நிதியத்தின் (UNIFEM) நிர்வாக இயக்குநராக அவர் பொறுப்பு வகித்தபோது, பெண்கள், அமைதி, பாதுகாப்பு ஆகியவை தொடர்பில் முன்மொழியப்பட்ட தீர்மானம் (1325) ஐக்கிய நாட்டு நிறுவனப் பாதுகாப்பு மன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அத்துடன், பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஐக்கிய நாட்டு நிறுவன அறக்கட்டளை நிதியும் அப்போதுதான் நிறுவப்பட்டது. மியன்மார், திமோர் லெஸ்டே ஆகிய நாடுகளுக்கான ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் சிறப்புத் தூதராகவும் சிறப்பு ஆலோசகராகவும் முறையே, அவர் சேவையாற்றியுள்ளார்.
அனைத்துலக அரங்கில் சிங்கப்பூரின் நிலையை உயர்த்தியதன் பொருட்டு, முனைவர் நோயலீன் ஹெஸருக்குப் பாராட்டுப் பணிப் பதக்கம் வழங்கிச் சிறப்பிக்கப்படுகின்றது.
The Meritorious Service Medal
பாராட்டுப் பணிப் பதக்கம்
8. திரு ஹூங் வீ டெக்
காவல்துறை ஆணையர்
புகழுரை
காவல்துறை ஆணையராக, திரு ஹூங் வீ டெக் அவர்கள், சிங்கப்பூர்க் காவல்துறைக்குத் தொலைநோக்கு ஆற்றல் மிகுந்த தலைமைத்துவத்தை வழங்கியதுடன், உலகின் ஆகப் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாக சிங்கப்பூரின் நிலையை உயர்த்தியிருக்கிறார்.
அவருடைய பதவிக்காலத்தில், சிங்கப்பூர்க் காவல்துறை அதிகரித்துவரும் எல்லை தாண்டிய இணையக் குற்றங்கள், மாறிவரும் பயங்கரவாத மிரட்டல் போன்ற சிக்கலான சவால்களைக் கையாண்டு வந்த போதிலும், சாதனை அளவில் குறைவான குற்றச்செயல் விகிதத்தைப் பதிவுசெய்தது. திரு ஹூங் உருமாற்றத் திட்டங்கள் பலவற்றை வழிநடத்தினார். மோசடிகளை முறியடிப்பதற்கான சிங்கப்பூர்க் காவல்துறையின் மோசடித் தடுப்புத் தளபத்தியம், அவசரகாலச் செயற்குழுக்கள் ஆகியவற்றை நிறுவுதல், செயற்பாட்டுச் செயற்றிறத்தை மேம்படுத்தும் வகையில் தொழில்நுட்பத் தீர்வுகளைப் பயன்படுத்துதல் ஆகியவை அவற்றுள் அடங்கும். புத்தாக்கத்தின் பேரில் அவர் கொண்ட கடப்பாடு, தொழில்நுட்பம் தழுவிய காவல் பணியில் சிங்கப்பூர்க் காவல்துறையை உலகளவில் முன்னிலைப்படுத்தியது. திரு ஹூங் சமூகப் பங்காளித்துவ உறவுகளை வலுப்படுத்தியதோடு, வலுவான அயலகக் கூட்டு முயற்சிகளையும் ஊக்குவித்தார். அவருடைய தலைமைத்துவத்தின்கீழ், சிங்கப்பூர்க் காவல்துறை, சிங்கப்பூரர்களின் நம்பிக்கையை ஈன்றெடுத்தது மட்டுமின்றி, அதன் அனைத்துலக நன்மதிப்பையும் உறுதிப்படுத்திக்கொண்டுள்ளது.
சிங்கப்பூரின் பாதுகாப்பிற்கு ஆற்றிய தலைசிறந்த பங்களிப்புகளின் பேரில், திரு ஹூங் வீ டெக் அவர்களுக்குப் பாராட்டுப் பணிப் பதக்கம் வழங்கிச் சிறப்பிக்கப்படுகின்றது.
The Meritorious Service Medal
பாராட்டுப் பணிப் பதக்கம்
9. முனைவர் சுதா நாயர்
தலைமை நிர்வாக அதிகாரி,
PAVE அமைப்பு
புகழுரை
சிங்கப்பூரின் சமூகப் பணித் துறையை உருமாற்றவல்ல பங்களிப்புகளை ஆற்றிய முனைவர் சுதா நாயர், ஒரு முன்னோடிச் சமூகப் பணியாளர்; நல்லாசிரியர்.
அப்போதைய அங் மோ கியோ குடும்பச் சேவை நிலையத்தில் தம் வாழ்க்கைத்தொழிலைத் தொடங்கிய அவர், 1999ஆம் ஆண்டில் ‘PAVE’ எனப்படும் வன்முறைக்கான மாற்று வழிமுறைகளை ஊக்குவிக்கும் நிலையத்தைத் தொடங்கினார். அவருடைய தலைமையின்கீழ், PAVE அமைப்பானது புத்தாக்கமும் ஆற்றலும் நிறைந்த பல்வகைத் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. அவற்றுள் குடும்ப வன்முறை, பிள்ளைப் பாதுகாப்பு, பாலியல் துன்புறுத்தல் ஆகியவற்றை ஒருசேரக் கையாளக்கூடிய சிங்கப்பூரின் முதல் ஒருங்கிணைந்த நிபுணத்துவ நிலையத்தை நிறுவியது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தின் சமூகப் பணித்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்துவரும் முனைவர் நாயர், பல தலைமுறைகளைச் சார்ந்த இளம் சமூக ஊழியர்களுக்கு ஊக்கமளித்து வழிகாட்டி வந்துள்ளார். அவருடைய தன்னிகரற்ற பொதுச் சேவையில், அதிபர் ஆலோசனை மன்றத்தில் மாற்று உறுப்பினர், பொதுச் சேவை ஆணையத்தில் உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளும் அடங்கும்.
சமூகப் பணித் துறையில் புரட்சிகரமான புத்தாக்கப் பங்களிப்புகள், குடும்ப வன்முறைக்கு எதிரானத் தொடர் முன்னெடுப்பு, தேசத்திற்கான மிகச் சிறந்த சேவை ஆகியவற்றின் பேரில் முனைவர் சுதா நாயர் அவர்களுக்குப் பாராட்டுப் பணிப் பதக்கம் வழங்கிக் கெளரவிக்கப்படுகின்றது.
The Meritorious Service Medal
பாராட்டுப் பணிப் பதக்கம்
10. உஸ்தாஸ் பசுனி பின் மௌலான்
உறுப்பினர்,
சிங்கப்பூர் இஸ்லாமியச்
சமயமன்றம்
புகழுரை
உஸ்தாஸ் பசுனி பின் மௌலான், முஸ்லிம் சமூகத்திற்குப் பல்லாண்டு காலம் சேவையாற்றி, அதன் அமைப்புகளை வலுப்படுத்தியுள்ளார்; உறுப்பினர்களை ஊக்குவித்துள்ளார்.
2007ஆம் ஆண்டு முதல் இஸ்லாமியச் சமய ஆசிரியர்கள் (Asatizah) அங்கீகரிப்புக் கழகத்தின் உறுப்பினராகவும், 2023ஆம் ஆண்டு முதல் அதன் தலைவராகவும் சேவையாற்றிவரும் உஸ்தாஸ் பசுனி Asatizah அங்கீகரிப்புத் திட்டத்தை நிறுவுவதிலும், சமய ஆசிரியர்களுக்கான தொடர் தொழில்முறைக் கல்வியை முன்னெடுத்துச் செல்வதிலும் முக்கியப் பங்காற்றியுள்ளார். மதராஸா அல்ஜுனிட் அல்-இஸ்லாமியா மேலாண்மைக் குழுவின் தலைவராக, அப்பள்ளி உலகளாவியப் பள்ளிகளுக்கு நிகரான இளங்கலை பட்டயத் தகுதியைப் (International Baccalaureate) பெற வழிகாட்டினார்.
தென்தேரா டிராஜா பள்ளிவாசலின் துணைத் தலைவராக, ஆபத்துக்கு ஆளாகக்கூடிய இளையர்களைச் சென்றடையும் ‘Mudik Ke Hulu’ திட்டத்தை உஸ்தாஸ் பசுனி தொடங்கி வைத்தார். இஸ்லாமியச் சட்டத்தை எடுத்துரைக்கும் சமயப் பிரதிநிதியாக 50 ஆண்டுக்கும் மேலாகச் சேவையாற்றிவரும் அவர் அடித்தள முயற்சியாகத் தொடங்கிய ‘Bersamamu’ திட்டமானது, தேசிய அளவில் உருவெடுப்பதற்கு வித்திட்டார். அத்திட்டத்தின்மூலம் திருமணம், பிள்ளை வளர்ப்பு ஆகியவை தொடர்பிலான வழிகாட்டுதல் அளிக்கப்பெறுகின்றது. இதுவரை, சுமார் 30,000 முஸ்லிம் தம்பதியர் அதன்மூலம் பயன்பெற்றுள்ளனர்.
சிங்கப்பூரின் முஸ்லிம் சமூகத்திற்கு அயராது அர்ப்பணிப்பு உணர்வோடு, இடையறாது சேவையாற்றியதன் பேரில், உஸ்தாஸ் பசுனி பின் மௌலான் அவர்களுக்குப் பாராட்டுப் பணிப் பதக்கம் வழங்கப்பெற்று கெளரவிக்கப்படுகின்றது.
The Meritorious Service Medal
பாராட்டுப் பணிப் பதக்கம்
11. திரு தவிந்தர் சிங், மூத்த வழக்குரைஞர்
தலைவர்,
சிங்கப்பூர் அனைத்துலக
நடுவர் மன்றச் சபை
புகழுரை
சிங்கப்பூரின் சட்ட, நடுவர் மன்றத் துறையை நிர்மாணிப்பதில் மூத்த வழக்குரைஞரான திரு தவிந்தர் சிங் நாற்பது ஆண்டுக்கும் மேலாகப் பங்களித்துள்ளார்.
சிங்கப்பூர் அனைத்துலக நடுவர் மன்றச் சபையின் தலைவராக 2016ஆம் ஆண்டு முதல் பொறுப்பு வகித்துவரும் அவர், உலக அரங்கில் அதனை முன்னிலைப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியுள்ளார். அவருடைய தொலைநோக்கு சிந்தை கொண்ட தலைமைத்துவத்தின்கீழ், உலகில் ஆக அதிகமாக நாடப்படும் நடுவர் மன்றச் சபைகளில் ஒன்றாகச் சிங்கப்பூர் அனைத்துலக நடுவர் மன்றச் சபை வளர்ச்சி கண்டுள்ளது. அனைத்துலகத் தொடர்பு, அறிவுசார் தலைமைத்துவம், புத்தாக்கமிகு நடைமுறைகள் ஆகியவற்றின் பேரில் அது போற்றப்படுகின்றது.
புகழ்பெற்ற மூத்த வழக்குரைஞராகவும் சிங்கப்பூர்ச் சட்டக் கழகத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் திகழும் திரு சிங், உலகளாவியச் சட்ட நடுவமாகச் சிங்கப்பூரின் நிலையை முன்னிறுத்தியுள்ளார். நீதிக்கான அவருடைய கடப்பாட்டை மெய்ப்பிக்கும் வகையில், அவர் மரணதண்டனைக் குற்றங்களுக்கான சட்ட உதவித் திட்டத்தின்கீழ் வழக்குரைஞராகச் சேவையாற்றி வருகிறார். அவர் தம்முடைய விரிவான பங்களிப்புகள்வழி, சட்டவியல் துறையை முன்னேற்றியுள்ளார்; நீதிக்கான வழிவகைகளை மேம்படுத்தியுள்ளார்; சிங்கப்பூரின் அனைத்துலகச் சட்டத்துறை சார்ந்த நிலையை உயர்த்தியுள்ளார்.
சிங்கப்பூரின் சட்டத்துறைக்கு ஆற்றிய அளப்பரிய சேவையின் பேரில், மூத்த வழக்குரைஞரான திரு தவிந்தர் சிங் அவர்களுக்குப் பாராட்டுப் பணிப் பதக்கம் வழங்கிச் சிறப்பிக்கப்படுகின்றது.
The Meritorious Service Medal
பாராட்டுப் பணிப் பதக்கம்
12. திரு ஜெரால்டு பாலேந்திரன் சிங்கம்
தலைவர்,
தேசியக் குற்றத் தடுப்பு மன்றம்
தலைவர், டெக் கீ குடிமக்கள்
ஆலோசனைக் குழு
ஆலோசகர், OnePeople.sg
புகழுரை
திரு ஜெரால்டு பாலேந்திரன் சிங்கம் பொதுச் சேவைக்கான தலைமைத்துவத்தையும் அர்ப்பணிப்பு உணர்வையும் எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு துறைகளில் சிங்கப்பூருக்குச் சேவையாற்றியுள்ளார்.
தேசியக் குற்றத் தடுப்பு மன்றத்தின் தலைவராக, திரு சிங்கம் குற்றத் தடுப்பு முயற்சிகளை மேம்படுத்தி வழிநடத்தியுள்ளார். அவருடைய தலைமைத்துவத்தின்கீழ், எந்நேரமும் செயல்படக்கூடிய (24/7) ScamShield உதவித் தொலைபேசிச் சேவை, ‘குற்றக் கண்காணிப்பு’ (Crimewatch) போன்ற பொதுக் கல்வி இயக்கங்கள் உள்ளிட்ட முயற்சிகள் சமூக விழிப்புணர்வையும் விழிப்புநிலையையும் அதிகரித்துள்ளன. தொண்டூழியம், சமூக ஈடுபாடு ஆகியவற்றுக்கான அவருடைய இடையறாதக் கடப்பாடு, குடிமக்களுக்கும் சட்ட அமலாக்க அமைப்புகளுக்கும் இடையிலான பங்காளித்துவத்தை வலுப்படுத்தியுள்ளது.
டெக் கீ குடிமக்கள் ஆலோசனைக் குழுவின் தலைவராக, திரு சிங்கம் அடித்தளத் தொண்டூழியர்கள், சமூக அமைப்புகள், அரசாங்க அமைப்புகள் ஆகியவற்றுக்கிடையில் வலுவான உறவை பேணி வளர்த்துள்ளார். OnePeople.sg அமைப்பில் அவருடைய பங்களிப்புகள் இன நல்லிணக்கம், சமுதாயப் பிணைப்பு ஆகியவற்றை ஊக்குவிக்க முக்கியப் பங்காற்றின. திரு சிங்கம் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி வாரியத்திலும் சிங்கப்பூர் ஆயுதப்படைகளின் ராணுவ மேல்முறையீட்டு நீதிமன்றத்திலும் தனிச்சிறப்புடன் சேவையாற்றியுள்ளார்.
சிங்கப்பூருக்கான திரு ஜெரால்டு பாலேந்திரன் சிங்கம் அவர்களின் சீரிய சேவை, பங்களிப்புகள் ஆகியவற்றின் பேரில், அவருக்குப் பாராட்டுப் பணிப் பதக்கம் வழங்கிச் சிறப்பிக்கப்படுகின்றது.
The Meritorious Service Medal
பாராட்டுப் பணிப் பதக்கம்
13. திருமதி மில்டிரெட் டான்-சிம் பெங் மெய்
தலைவர்,
சிங்கப்பூர்ப் பந்தயப்பிடிப்பு வாரியம்
புகழுரை
சிங்கப்பூர்ப் பந்தயப்பிடிப்பு வாரியத்தின் தலைவராக, திருமதி மில்டிரெட் டான்-சிம் பெங் மெய், அதனைப் பாரம்பரியமான நிதியளிப்பு நிலையிலிருந்து விடுத்து, ஆற்றல்மிகு மாற்றங்களை விதைக்கும் விருட்சமாக உருமாற்றியுள்ளார்.
அவருடைய முன்னோடியாற்றல் மிகுந்த இந்த அணுகுமுறை, மானியங்கள் வழங்கும் நடைமுறையைச் சான்றுகளின் அடிப்படையிலான, விளைபயன் நோக்குடைய முயற்சியாக மாற்றியமைத்துள்ளது. அவருடைய தலைமைத்துவத்தின்கீழ், சிங்கப்பூர்ப் பந்தயப்பிடிப்பு வாரியம், 1.5 மில்லியனுக்கும் அதிகமானோர் பயன்பெறும் வகையில், 90க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கும் 3,500 நிதிதிரட்டுத் திட்டப்பணிகளுக்கும் ஆதரவளித்துள்ளது.
கல்வி, அறக்கொடை, நிறுவன ஆளுமை ஆகியவற்றையும் திருமதி டான் வலுவாக ஆதரித்துள்ளார். சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழக அறங்காவலர்க் குழுத் தலைவராக, பல்கலைக்கழகத்தின் உத்திபூர்வ இலக்கைத் திட்டமிடுவதிலும், அதன் ஆய்வு – உள்கட்டமைப்புப் பணிகளுக்கான வளங்களைத் திரட்டுவதிலும், பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்திற்கான மேம்பாட்டுப் பணிகளை முன்னெடுத்துச் செல்வதிலும் அவர் முக்கியப் பங்காற்றியுள்ளார். தேசியத் தொண்டூழிய, கொடை ஊக்குவிப்பு நிலையம், நிர்வாகக் குழுப் பன்முகத்தன்மைக்கான மன்றம் ஆகியவற்றின் தலைவராகவும் இணைத் தலைவராகவும், அவர் முறையே சேவையாற்றியுள்ளார்.
சிங்கப்பூரின் சமூக இணக்கத்தை வலுப்படுத்துவதற்கான தலைசிறந்த பங்களிப்புகளின் பேரில், திருமதி மில்டிரெட் டான்-சிம் பெங் மெய் அவர்களுக்குப் பாராட்டுப் பணிப் பதக்கம் வழங்கிச் சிறப்பிக்கப்படுகின்றது.
The Meritorious Service Medal
பாராட்டுப் பணிப் பதக்கம்
14. திரு டான் சொங் மெங்
தலைவர்,
தேசியப் பல்கலைகழகச்
சுகாதாரக் கட்டமைப்பு
முன்னாள் குழுமத்
தலைமை நிர்வாக அதிகாரி,
PSA இண்டர்நேஷனல் நிறுவனம்
முன்னாள் தலைவர்,
ஜூரோங் நகராண்மைக் கழகம்
புகழுரை
PSA இண்டர்நேஷனல் நிறுவனத்தின் குழுமத் தலைமை நிர்வாகியாக, திரு டான் சொங் மெங், அதன் உருமாற்றத்திற்குப் பெரும் பங்காற்றியுள்ளார். உள்ளூர்த் துறைமுகச் செயற்பாடுகளைக் கவனித்து வந்த நிறுவனம், இன்று உலகளவில் தளவாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை முன்மொழியும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
அவருடைய தலைமைத்துவத்தின்கீழ், PSA நிறுவனம் அதன் அனைத்துலகத் தொடர்புகளை விரிவுபடுத்தி, கப்பல் போக்குவரத்துக்கான நம்பகமான பங்காளியாகத் தமது நற்பெயரை உறுதிப்படுத்திக்கொண்டுள்ளது. துவாஸ் துறைமுகத்தின் துவக்கப் பணிகளைத் தலைமையேற்று வழிநடத்திய அவர், தானியக்க வசதிகள் கொண்டு, எதிர்கால ஆயத்தநிலை பொருந்திய ஒரு துறைமுகத்திற்கான அடித்தளப் பணிகளை வரையறுத்தார். அத்துறைமுகம் இனிவரும் பல தலைமுறைச் சிங்கப்பூரர்களுக்குச் சேவையாற்றும்.
ஜூரோங் நகராண்மைக் கழகத்தின் தலைவராக, திரு டான் கழகத்தின் மிக முக்கியமான உருமாற்றத்திற்கு உடன்நின்று வழிகாட்டினார். அதன்மூலம், சிங்கப்பூரின் தொழில்துறைப் பெருந்திட்டவியலாளராக, தொழில்துறைப் பேட்டைகளை மேம்படுத்திச் செயற்படுத்தும் கழகத்தின் பொறுப்புகளை அவர் பெருமளவு மேம்படுத்தினார். அவருடைய பதவிக்காலத்தில், மேலும் ஒருங்கிணைந்த தொழில்துறைச் சூழலை உருவாக்கும் பொருட்டு, வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தால் நிர்வகிக்கப்பட்டு வந்த 12,000 சிறிய, நடுத்தரத் தொழில்நிறுவனங்கள், ஜூரோங் நகராண்மைக் கழகத்தில் ஒருங்கிணைக்கப்பட்டன. தேசியப் பல்கலைகழகச் சுகாதாரக் கட்டமைப்பின் தலைவராக, திரு டான் ஒருங்கிணைந்த பராமரிப்பு முறைகள், மின்னிலக்கப் புத்தாக்கம், நீடித்த நிலைத்தன்மையுடைய சுகாதாரத் தீர்வுகள் ஆகியவற்றை முன்னிறுத்தினார்.
சிங்கப்பூரின் கடல்துறைப் பொருளாதாரத்திற்கும் தொழில்துறை மேம்பாட்டுக்கும் ஆற்றிய தன்னிகரற்ற பங்களிப்புகளின் பேரில், திரு டான் சொங் மெங் அவர்களுக்குப் பாராட்டுப் பணிப் பதக்கம் வழங்கிச் சிறப்பிக்கப்படுகின்றது.
The Meritorious Service Medal
பாராட்டுப் பணிப் பதக்கம்
15. திரு டான் டீ ஹவ்
தலைவர்,
சிங்கப்பூர்ச் சூதாட்டக்
கட்டுப்பாட்டு ஆணையம்
நிர்வாகக் குழுத் தலைவர்,
NHG Health குழுமம்
புகழுரை
முப்பது ஆண்டுக்கும் மேலாக, பொதுச் சேவைத்துறையில் தனிச்சிறப்புடன் பணியாற்றிய திரு டான் டீ ஹவ், பல உயர் தலைமைத்துவப் பொறுப்புகளை வகித்துள்ளார். தேசிய வளர்ச்சி, உள்துறை அமைச்சுகளில் நிரந்தரச் செயலாளர், உள்நாட்டு வருவாய்த்துறையின் ஆணையர், அப்போதைய தேசியச் சுகாதாரக் குழுமத்தின் முதல் தலைமை நிர்வாக அதிகாரி உள்ளிட்ட பொறுப்புகளை அவர் வகித்துள்ளார்.
பணி ஓய்வுக்குப் பின்னர், திரு டான் சூதாட்டக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் தலைவராகச் சேவையாற்றி வருகின்றார். அப்போதைய சூதாட்டக்கூடக் கட்டுப்பாட்டு ஆணையத்தைச் சூதாட்டக் கட்டுப்பாட்டு ஆணையமாக உருமாற்றும் பொறுப்பை அவர் மேற்கொண்டார். அதன்மூலம், அவர் சூதாட்டம் தொடர்பிலான தீங்குகளிலிருந்து சிங்கப்பூரர்களைப் பாதுகாக்கும் அதேவேளையில், ஒழுங்குபடுத்தப்பட்ட சூதாட்ட நடவடிக்கைகளின் சமுதாய, பொருளாதார நன்மைகளைப் பயன்படுத்தவல்ல ஒரு சமநிலையை சீராக்கப் பாடுபட்டார். NHG Health குழுமத்திற்கான நிர்வாகத் தலைவராக, ONE NHG தொலைநோக்குத் திட்டத்தின்கீழ், ஆளுமை ஆற்றல், இடர் நிர்வாகம், திறன் புதுப்பிப்பு உள்ளிட்ட அம்சங்களை வலுப்படுத்தும் உருமாற்றத் திட்டங்களை அவர் வழிநடத்தினார். சுகாதாரப் பராமரிப்புத் துறையில் செயற்றிறன் ஆதாயம் உள்ளிட்ட பலன்களின் பேரில், பரந்துபட்ட சுகாதாரப் பராமரிப்புத் துறையில் இணக்கமிகு செயலாற்றலுக்கான அம்சங்களையும் அவர் அடையாளம் கண்டார்.
சிங்கப்பூருக்கு ஆற்றிய முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்புகளின் பேரில், திரு டான் டீ ஹவ் அவர்களுக்குப் பாராட்டுப் பணிப் பதக்கம் வழங்கி கெளரவிக்கப்படுகின்றது.
The Public Service Star (Bar)
பொதுப் பணிச் சிறப்புப் பதக்கம் (பதக்கப் பட்டை)
The Public Service Star
பொதுப் பணிச் சிறப்புப் பதக்கம்
புகழுரை
நாம் சிறுசிறு செயல்களின் வாயிலாகவே, நம் நாட்டின்மீதும் சக குடிமக்கள்மீதும் பெரும்பாலும் பரிவு காட்டுகிறோம். சிறு துளி பெரு வெள்ளம் போல இத்தகைய பற்பல செயல்களின் ஒருங்கமைவே சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. பங்களித்தோர் அனைவருக்கும் பொருள் வெகுமதி கொடுப்பது இயலாது. எனினும், பொதுப் பணிச் சிறப்புப் பதக்கம் (பதக்கப் பட்டை), பொதுப் பணிச் சிறப்புப் பதக்கம் ஆகியனவற்றை அளித்து, நம்மால் அவர்களின் பங்களிப்புகளை அங்கீகரிக்கமுடியும். நாமும் அவ்வாறே அவர்களைப் பெருமைப்படுத்துகிறோம்.
The Public Administration Medal (Gold) (Bar)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்) (பதக்கப் பட்டை)
16. திரு கோ தீ ஹியன் டேவிட்
மூத்த ஆலோசகர்,
தலைமை நிர்வாக அதிகாரி
சிங்கப்பூர் இணையப்பாதுகாப்பு
அமைப்பு
தகவல், மின்னிலக்க மேம்பாட்டு
அமைச்சு
புகழுரை
திரு கோ தீ ஹியன் டேவிட் சிங்கப்பூரின் இணையப்பாதுகாப்பையும் அதுசார்ந்த திறனாற்றல்களையும் வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியுள்ளார். இணையப்பாதுகாப்பு அமைப்பின் முதல் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், இணையப்பாதுகாப்பு ஆணையராகவும், அவர் சிங்கப்பூரின் இணையப்பாதுகாப்புத் திறனாற்றல்களை மேம்படுத்தி, தேசிய அளவிலான இணையப்பாதுகாப்புச் செயற்பாடுகளையும் ஒருங்கிணைத்தார். இணைய அச்சுறுத்தல்களிலிருந்து சிங்கப்பூரைப் பாதுகாக்கவும், இணையப்பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வை மேம்படுத்தவும், இணையப்பாதுகாப்புத் திறனாற்றல்களை வளர்த்தெடுக்கவும், அவர் புதிய சட்டங்களையும் கொள்கைகளையும் இயற்றினார். அனைத்துலக நிலையில், இணையப்பாதுகாப்பு விவகாரங்களில் அறிவுசார் தலைமைத்துவம் கொண்ட நாடாகச் சிங்கப்பூரை நிலைநாட்டி, அதன் நற்பெயரையும் செல்வாக்கையும் மேம்படுத்தினார்.
The Public Administration Medal (Gold)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்)
17. திரு வோங் கொக் ஒன் ஜேம்ஸ்
துணைச் செயலாளர் (சேவைகள்),
கல்வி அமைச்சு
புகழுரை
கல்வி அமைச்சின் துணைச் செயலாளராக (சேவைகள்), திரு வோங் கொக் ஒன் ஜேம்ஸ் வலுவான, உத்திபூர்வ தலைமைத்துவத்தைத் திறம்பட வெளிப்படுத்தியுள்ளார். நிதி, உள்கட்டமைப்பு, மின்னிலக்கம், மனிதவளம் உள்ளிட்ட அம்சங்களில் அவர் பலதரப்பட்ட உருமாற்றமிகு திட்டங்களை வழிநடத்தினார். முன்னதாக, போக்குவரத்து அமைச்சின் துணைச் செயலாளராக, திரு வோங் தேசிய அளவிலான பொதுப் போக்குவரத்தின் நம்பகத்தன்மையையும் நீடித்த நிலைத்தன்மையையும் மேம்படுத்தும் வகையில், சிங்கப்பூரின் நிலப் போக்குவரத்துக் கொள்கைகளில் பேரளவு மாற்றங்களை மேற்பார்வையிட்டார்.
The Public Administration Medal (Gold)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்)
18. திரு ஒங் ஜூன் லிம் வில்சன்
துணை ஆணையர்
நிறுவன & சேவைகள் குழுமம்
சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய்
ஆணையம்
புகழுரை
சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்தை உலகத் தரம் வாய்ந்த வரித்துறை அமைப்பாக உருமாற்றுவதில் திரு ஒங் ஜூன் லிம் வில்சன் பெரும் பங்காற்றியுள்ளார். அவர் வருங்காலச் சவால்களுக்குச் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்தைத் திறம்பட ஆயத்தப்படுத்த, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அதன்பொருட்டு அவர், ஆணையத்தின் வரிசார் தொழில்நிறுவனக் கட்டமைப்பை சீரமைத்தார்; ஆணையத்தின் அமலாக்கப் பணிகளில் தரவியல், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றைப் பயன்படுத்த ஊக்குவித்தார்; முக்கியமான ஊழியரணி உருமாற்ற முயற்சிகளை வழிநடத்தினார். கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வேலை ஆதரவுத் திட்டம் போன்ற தேசிய அளவிலான ஆற்றல்மிகு திட்டங்களை ஆணையம் முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சிகளையும் அவர் தலைமையேற்று வழிநடத்தினார்.
The Public Administration Medal (Gold)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்)
19. திரு டான் ஹாய் சுவான்
தூதர்,
சிங்கப்பூர்த் தூதரகம், பெய்ஜிங்
வெளியுறவு அமைச்சு
புகழுரை
திரு டான் ஹாய் சுவான் தமது தனிச்சிறப்புமிக்க அரசதந்திரப் பணியில், சிங்கப்பூரின் தேசிய நலன்களை முன்னிறுத்தி மேம்படுத்தும் முயற்சிகளுக்குக் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார். சீனாவுக்கான சிங்கப்பூர்த் தூதராக அவர் இருநாட்டு நல்லுறவை ஊக்குவிக்கவும், சீனத் தலைவர்கள், முக்கியப் பங்காளிகள் ஆகியோருடனான ஈடுபாட்டை மேம்படுத்தவும் அயராது பாடுபட்டார். முன்னதாக, ஜப்பானுக்கான சிங்கப்பூர்த் தூதராக 2019 முதல் 2023 வரை பொறுப்பு வகித்துவந்த திரு டான், இருதரப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்தினார். கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தின் சவால்களுக்கு இடையே இரு நாட்டுக்கும் இடையில் தொடங்கப்பட்ட பரஸ்பர பயணப் பாதை அதற்கான சாலச் சிறந்த உதாரணமாகும்.
The Public Administration Medal (Gold)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்)
20. பேராசிரியர் கெனத் குவேக் யுங் சியாங்
குழுமத் துணைத்
தலைமை நிர்வாக அதிகாரி
(மின்னிலக்கச் சுகாதாரம்),
சிங்கப்பூர்ச் சுகாதாரச் சேவைகள்
முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி,
சிங்கப்பூர்ப்பொதுமருத்துவமன
புகழுரை
பேராசிரியர் கெனத் குவேக் யுங் சியாங் அவர்கள் சிங்கப்பூரின் பொதுச் சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்பிற்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை ஆற்றியுள்ளார். சிங்கப்பூர்ச் சுகாதாரச் சேவையின் குழுமத் துணைத் தலைமை நிர்வாக அதிகாரியாக (மின்னிலக்க சுகாதாரம்), SingHealth குழுமத்தின் மின்னிலக்கத் தொலைநோக்கு இலக்கு, மின்னிலக்கச் சுகாதாரச் செயற்திட்டம் ஆகியவற்றைத் கரு முதல் உரு வரை திட்டமிட்டுச் செயல்படுத்தினார். குழுமத்தின் மின்னியல் மருத்துவ பதிவகக் கட்டமைப்பின் உருமாற்றத்திற்கான அடித்தளத்தையும் அவர் அமைத்திட்டார். முன்னதாக, சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரியாக, பேராசிரியர் குவேக் மருத்துவமனையின் மருத்துவச் செயல்பாடுகளை மேம்படுத்தி, ‘One SingHealth’ என்ற ஒருங்கிணைந்த மனப்போக்கையும் அணுகுமுறையையும் அதன் அமைப்புதோறும் முன்னெடுத்துச் சென்று, நோயாளிகளுக்கான பராமரிப்புச் சூழலை மாற்றியமைத்தார்.
The Public Administration Medal (Gold)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்)
21. திரு டான் சாய் ஹீ
இயக்குநர்,
உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை
உள்துறை அமைச்சு
புகழுரை
திரு டான் சாய் ஹீ தமது பொதுச் சேவைப் பணியில் பல்வேறு உயர் தலைமைத்துவப் பொறுப்புகளில் மிகச் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார். உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் இயக்குநராக, ஆட்சிக் கவிழ்ப்பு, உளவு, இன – சமயத் தீவிரவாதம், பயங்கரவாதம், இணையப்பாதுகாப்பு உள்ளிட்ட தேசிய அளவிலான பாதுகாப்பு மிரட்டல்களை முறியடிக்க, உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையை வழிநடத்தியுள்ளார். உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் நீண்டகாலச் செயற்பாட்டு ஆற்றல்களையும் தொழில்நுட்பத் திறன்களையும் மேம்படுத்துவதில் அவர் முக்கியப் பங்கு வகித்துள்ளார். சிங்கப்பூரின் பாதுகாப்பைப் பேணிக் காப்பதில், அவருடைய வலுவான தலைமைத்துவமும் திடமான அர்ப்பணிப்பு உணர்வும் இன்றியமையாத பங்கு வகித்துள்ளன.
The Public Administration Medal (Gold)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்)
22. திரு சிம் வாய் மெங்
ஆணையர்,
குடிநுழைவு, சோதனைச் சாவடிகள்
ஆணையம்
உள்துறை அமைச்சு
புகழுரை
பொதுச் சேவையில் தமது வாழ்க்கைத்தொழில் முழுவதும் முன்மாதிரித் தலைமைத்துவத்தை தகைசார்ந்த முறையில் வெளிப்படுத்தியுள்ளார், திரு சிம் வாய் மெங். குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் (ICA) ஆணையராக, அவர் அமைப்பின் எல்லைக் குடிநுழைவு சார்ந்த செயற்பாடுகளை உருமாற்றியதுடன், அதன் குடிநுழைவு, பதிவகச் சேவைகளையும் மேம்படுத்தினார். அவர் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் திறனாற்றல்களையும் செயற்பாட்டுச் செயற்றிறத்தையும் உயர்த்தியதுடன், பொதுமக்களுக்கான அதன் சேவைத் தரத்தையும் மேம்படுத்தினார். எல்லை தாண்டிய பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும், கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் நேர்ந்த சவால்களுக்கு இடையில் ஆணையத்தை வழிநடத்திச் செல்வதிலும், திரு சிம் அவர்களின் தீர்க்கமான, செயற்றிறன் மிகுந்த தலைமைத்துவம் முக்கியப் பங்காற்றியது.
The Public Administration Medal (Gold)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்)
23. திரு ஃபினியன் மார்கோஸ் சில்வா
இயக்குநர்,
உள்துறை அமைச்சு
புகழுரை
திரு ஃபினியன் மார்கோஸ் சில்வா தமது பொதுச் சேவைப் பணியில் உயரிய அளவிலான உன்னத நிலையை எட்டியிருக்கிறார். உள்துறை அமைச்சின் இயக்குநராக, அதிமுக்கியமான, சவால் மிகுந்த பாதுகாப்புச் செயற்பாடுகளை வெற்றிகரமாக வழிநடத்தியதன் மூலம், தன்னிகரற்ற தலைமைத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளார். அமைச்சு சிக்கலான பாதுகாப்புச் சூழல்களை வெற்றிகரமாகக் கடப்பதற்கும் தமது செயற்பாட்டு ஆயத்தநிலையை வலுப்படுத்திக்கொள்வதற்கும் அவருடைய ஆற்றல்மிகு மதிநுட்பமும், அசைக்க முடியாத மீள்திறனும், அர்ப்பணிப்பு உணர்வும் பெருந்துணைபுரிந்துள்ளன. அவர் தம்முடைய உத்திபூர்வ மேற்பார்வை, தீர்க்கமான செயற்பாடுகள் ஆகியவற்றின்வழி, நம் நாட்டின் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் பேணிக் காப்பதற்கான முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்புகளை ஆற்றியுள்ளார்.
The Public Administration Medal (Gold)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்)
24. திருவாட்டி போ மே-ஜீன் ஜெக்கிலின்
தலைமை நிர்வாக அதிகாரி,
ஜூரோங் நகராண்மைக் கழகம்
புகழுரை
திருவாட்டி போ மே-ஜீன் ஜெக்கிலின், சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சிக்கும், அதன் பொதுத்துறைத் தொழில்நுட்பத் திறனாற்றல் வளர்ச்சிக்கும் பல்வேறு பங்களிப்புகளை ஆற்றியுள்ளார். பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக, சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சியையும், தொழில்துறை மேம்பாட்டையும் நிர்மாணிக்கும் பொருட்டு, புதிய தொழில்துறை முயற்சிகளையும் முதலீட்டுத் திட்டப்பணிகளையும் ஈன்றெடுக்கும் வகையில் துடிப்பாகச் செயலாற்றினார். பிரதமர் அலுவலகத்தின் துணைச் செயலாளராக, சிங்கப்பூர்த் திட்டத்தைப் புதுப்பித்தார்; ஒன்றிணைந்த எஸ்ஜி இயக்கத்திற்கான கருத்தாக்கத்தை உருவாக்கினார். அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பின் முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக, சிங்கப்பூரின் அறிவார்ந்த தேசத்திற்குரிய இலக்குகளை நிர்ணயிக்கவும் அவர் துணைபுரிந்துள்ளார்.
The Public Administration Medal (Gold)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்)
25. திரு லாவ் பீட் மெங்
நிரந்தரச் செயலாளர்,
போக்குவரத்து அமைச்சு
புகழுரை
போக்குவரத்து அமைச்சில் முக்கியத்துவம் வாய்ந்த அமைப்புசார் மேம்பாட்டு முயற்சிகளைத் திரு லாவ் பீட் மெங் வழிநடத்தியுள்ளார். அவர், அமைச்சின் உத்திபூர்வத் திட்ட, தொழில்நுட்ப, புத்தாக்கத் திறனாற்றல்களை மேம்படுத்தியுள்ளார்; திறன், பண்பாடு ஆகியவை சார்ந்த மேம்பாட்டு முயற்சிகளையும் வழிநடத்தியுள்ளார். முன்னதாகத் தற்காப்பு அமைச்சின் பாதுகாப்பு, உளவுத்துறைப் பிரிவில் பணியாற்றியபோது, அப்பிரிவின் வருங்கால ஆயத்தநிலையையும் ஒருங்கிணைப்புத் தன்மையையும் மேம்படுத்திய உருமாற்றத் திட்டத்தை அவர் மேற்பார்வையிட்டார். சிக்கலான அயலகச் சூழலில் அதிகரித்துவரும் மிரட்டல்களிலிருந்து சிங்கப்பூரின் பாதுகாப்பைக் கட்டிக்காப்பதற்கான அப்பிரிவின் திறனாற்றல்களை, அவருடைய தலைமைத்துவத்தின்கீழ் அமைச்சு மேம்படுத்திக்கொண்டது.
The Public Administration Medal (Gold)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்)
26. திரு டான் கீ யொங்
பிரதமரின் செயலாளர்,
அமைச்சரவைச் செயலாளர்,
பிரதமர் அலுவலகம்
புகழுரை
அரசாங்கச் சேவையில் தாம் கொண்ட வாழ்க்கைத்தொழில் பயணத்தை, திரு டான் கீ யொங் தனிச்சிறப்புடன் செயலாற்றியுள்ளார். தற்காப்பு, கல்வி அமைச்சுகளின் துணைச் செயலாளர் உள்ளிட்ட பல்வகை உயர் தலைமைத்துவப் பொறுப்புகளில் அவர் உன்னத ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த 15 ஆண்டுகளில், பிரதமரின் செயலாளராகவும் அமைச்சரவைச் செயலாளராகவும் பணியாற்றிய திரு டான், அமைச்சரவையின் பணிக்கு ஆதரவளிப்பதிலும், அமைச்சரவை அலுவலகத்தின் செயற்பாடுகளைச் செம்மைப்படுத்துவதிலும் சீரிய பங்காற்றியுள்ளார்.
The Public Administration Medal (Gold)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்)
27. திரு டான் கியெட் ஃபெங்
தலைமை வழக்குரைஞர்,
குற்றப் பிரிவு
அரசாங்கத் தலைமைச் சட்ட அலுவலகம்
புகழுரை
திரு டான் கியெட் ஃபெங், சிங்கப்பூரின் பாதுகாப்பிற்கும் நீதித்துறைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்புகளை ஆற்றியுள்ளார். அவர் தம்முடைய வாழ்க்கைத்தொழில் முழுவதும், குற்றம் புரிவோருக்கு உரிய தண்டனை கிடைக்கப்பெற்று, நீதி நிலைநாட்டப்படுவதில் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார். அரசாங்கத் தலைமைச் சட்ட அலுவலகத்தின் குற்றப் பிரிவை வழிநடத்தும் தலைமை வழக்குரைஞராக, திரு டான் முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை அமல்படுத்தினார். அவற்றின்மூலம், அரசாங்கத் தலைமைச் சட்ட அலுவலகத்தின் திறனாற்றல்கள் விரிவடைந்தன; குற்றச்செயல்களைத் திறம்பட விசாரிப்பதற்கான அதன் ஆற்றலும் வலுப்பெற்றது. குறிப்பிடத்தக்க ஊழல், வணிகக் குற்றம், பணமோசடி வழக்கு விசாரணைகள் பலவற்றையும் அவர் வழிநடத்தியுள்ளார்.
The Public Administration Medal (Gold)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்)
28. திரு தோ ஹன் லி
முதன்மை மாவட்ட நீதிபதி,
அரசு நீதிமன்றங்கள்,
நீதித்துறை
புகழுரை
சிங்கப்பூரின் சட்ட, நீதித் துறைகளுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைத் திரு தோ ஹன் லி ஆற்றியுள்ளார். அரசு நீதிமன்றங்களின் குற்றவியல் நீதிமன்றத்திற்கான முதன்மை மாவட்ட நீதிபதியாக, விசாரணை நீதிமன்றங்களின் செயற்பாடுகளை மேற்பார்வையிட்ட அவர், சவால் மிகுந்த வழக்குகளுக்கும் தலைமை தாங்கியுள்ளார். நீதித்துறைக்கும் அப்பால், அவர் அமைப்புகளுக்கு இடையிலான தண்டனை ஆலோசனைக் குழு உறுப்பினராகவும், சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் மேல்முறையீட்டு ஆலோசனைக் குழுத் தலைவராகவும் தமது அனுபவ அறிவையும் நிபுணத்துவ ஆற்றலையும் கொண்டு பங்களித்துள்ளார்.
The Public Administration Medal (Gold) (Military)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்) (படைத்துறை)
29. பிரிகேடியர்-ஜெனரல் சூ வெய் யீ, ஃபிரெடெரிக்
துணைச் செயலாளர் (கொள்கை),
தற்காப்பு அமைச்சு
புகழுரை
பிரிகேடியர்-ஜெனரல் சூ வெய் யீ, ஃபிரெடெரிக் தமது ராணுவப் பணியில் தனிச்சிறப்புடன் சேவையாற்றியுள்ளார். தற்காப்பு அமைச்சின் கொள்கைப் பிரிவுக்கான துணைச் செயலாளராக, பிரிகேடியர்-ஜெனரல் சூ, சிங்கப்பூரின் தற்காப்பு நலன்களை மேம்படுத்தியுள்ளார்; தற்காப்பு அரசதந்திர முயற்சிகளை வழிநடத்தியுள்ளார்; ஷங்ரிலா கலந்துரையாடல் போன்ற பன்னாட்டு நிகழ்வுகளை மேற்பார்வையிட்டுள்ளார். கூட்டுப்படைத் தளபதியாக, அவர் சிங்கப்பூர் ஆயுதப்படையின் போர்முறை உத்திகளின் உருமாற்றத் திட்டங்களை வகுத்தது மட்டுமின்றி, ஆற்றல்மிகு புத்தாக்க, மின்னிலக்கத் திட்டங்களையும் பேரளவில் முன்னெடுத்துச் சென்றார்.
The Public Administration Medal (Silver) (Bar)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (வெள்ளி) (பதக்கப் பட்டை)
The Public Administration Medal (Silver)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (வெள்ளி)
The Public Administration Medal (Silver) (Military)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (வெள்ளி) (படைத்துறை)
புகழுரை
பொதுத் துறை, படைத்துறை உள்ளிட்ட பொதுச் சேவைத் துறைகளில் பணியாற்றும் நடுத்தர மேலாளர்கள், கொள்கை முடிவுகளைப் பயன்மிக்க வகையில் செயல்படுத்தும் முக்கியப் பணியை ஆற்றுகின்றனர். பொதுச் சேவைத் துறை முழுவதிலும், பல நடுத்தர மேலாளர்கள், உத்வேகமும் கற்பனை வளமும் கொண்டு சிரமமான பணிகளைச் சிறப்பாகச் செய்து முடிக்கின்றனர். இன்றைய தினம், அத்தகைய செயல் வீரர்கள் யாவரும், பொது ஆட்சித்துறைப் பதக்கம் (வெள்ளி) வழங்கப்பெற்றுகெளரவிக்கப்படுகின்றனர்.
The Public Administration Medal (Bronze) (Bar)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (வெண்கலம்) (பதக்கப் பட்டை)
The Public Administration Medal (Bronze)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (வெண்கலம்)
The Public Administration Medal (Bronze) (Military)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (வெண்கலம்) (படைத்துறை)
புகழுரை
பொதுச் சேவைத் துறையில் பணியாற்றும் ஒவ்வோர் ஊழியரின் தனிப்பட்ட அர்ப்பணிப்பையும் கடுமையான உழைப்பையும் பொறுத்தே, அரசாங்கக் கொள்கைகள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்படுகின்றன. எந்நேரமும் தொடர்ந்து தங்களது மிகச் சிறந்த சேவையை வழங்கும் செயல்வீரர்களைக் கொண்டிருக்கும் நற்பேற்றினை, சிங்கப்பூர்ப் பொதுச் சேவை பெற்றுள்ளது. இவர்களுடைய அளப்பரிய சேவையின் பேரில், இவர்களுக்குப் பொது ஆட்சித்துறைப் பதக்கம் (வெண்கலம்) வழங்கி கெளரவிக்கப்படுகின்றது.
